>> Wednesday, August 18, 2010


இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வவுனியா மனிக்பாம் முகாம் நான்காம் வலயத்தில் தங்கியியுள்ள சுமார் ஐயாயிரம் பேரை புதன்கிழமை காலை அருகிலுள்ள கதிர்காமர் முகாமுக்கு மாற்றப்போவதாக செவ்வாய்க்கிழமையன்று இராணுவம் அறிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த முகாமிலுள்ள மக்கள் இந்தத் தகவலை தனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிகம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவதால் தங்களுக்கு பலவிதமான சிரமங்கள் ஏற்படும் என்று செட்டிக் குளத்தில் உள்ள அந்த முகாமில் தங்கியுள்ள மக்கள் தன்னிடம் முறைப்பாடு செய்ததாக அவர் கூறினார்.

முகாமில் தங்கி படிப்பைத் தொடருகின்ற மாணவர்கள் பலருக்கு இது தேர்வுக் காலம் என்பதாலும், குடும்பத் தலைவர்கள் கூலி வேலை பார்ப்பதற்காக வெளியில் சென்றிருப்பதாலும், இடமாற்றம் தங்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் என முகாம்வாசிகக்ள் கூறுவதாகவும் வினோ நோகராதலிங்கம் கூறுகிறார்.

ஒரு மாதம் கதிர்காமர் முகாமில் இருந்த பின்னர் தாங்கள் சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவோம் என்று இராணுவ அதிகாரி கூறியதாக மக்கள் தன்னிடம் தெரிவித்தனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்..

அடிப்படை வசதிகளுக்கு பற்றாக்குறை நிலவும் ஒரு இடம் கதிர்காமர் முகாம் என்றும், அங்கே மக்கள் வெளியில் செல்வதற்கு இராணுவத்தினரின் முன் அனுமதியைப் பெறவேண்டிய நிர்பந்தம் உள்ளது என்றும் இப்படியான காரணங்களால் அங்கு இந்த மக்களை இடம்பெயரச் செய்வது நியாயமல்ல என்றும் அவர் வாதிட்டார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் கருணா ஆகியோரிடம் இப்பிரச்சினை குறித்து தான் உடனடியாக விளக்கியதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிகம் குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter