>> Wednesday, August 4, 2010



பாகிஸ்தானில் 3 மில்லியன் பேர் பாதிப்பு


80 வருடங்களில் பெரு வெள்ளம்
கடந்த எண்பது ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி பாகிஸ்தானில் சுமார் மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஹெலிகொப்டர் மற்றும் விமானங்களின் நிவாரண மீட்புப் பணிகளை நிறுத்துமளவிற்கு பருவ மழை இடைவிடாது கொட்டிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் கூறுகின்ற நிலையில், பல பகுதிகளை சென்றடைய முடியாத நிலையுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 27,000 பேர் வரையில் வெளியேற முடியாதவாறு சிக்கியிருப்பதாகவும் உதவிகளுக்காக காத்திருப்பதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.


1.8 மில்லியன் பேருக்கு உடனடி உணவு தேவைப்படுகின்றது
சுமார் 1.8 மில்லியன் மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுவதாக உலக உணவு செயற்றிட்டம் அறிவித்துள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுவாட் பள்ளத்தாக்கு பிரதேசத்தில், நிவாரணங்கள் வந்தடையவில்லையென கூறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்தப் பிரதேசங்களில் அரசாங்கத்தின் மீது அதிருப்தியும் எதிர்ப்பும் வெளிப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரதேசங்களில் பெருமளவான வீதிகளும் பாலங்களும் நீரில் அள்ளுண்டுச் சென்றுள்ளதால் நிவாரண விநியோகம் தரை வழியிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter