>> Friday, February 25, 2011


கொக்கோ கோலாவுக்கு சிக்கல்


கொக்கோ கோலா நிறுவனத்திடம் நட்ட ஈடு கோர வழி
மென்பான தயாரிப்பாளர்களான கொக்கோ கோலா நிறுவனத்திடம் மக்கள் நட்ட ஈடு கோருவதற்கு அனுமதிக்கும் வகையிலான சட்டம் ஒன்றை கேரள மாநில அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
கோயம்புத்தூருக்கு மேற்கே இந்த நிறுவனத்துக்கு மென்பானத்தை பாட்டிலில் அடைக்கும் ஆலை ஒன்று உள்ளது.

அந்த ஆலை, அங்கு சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பெரும் குடிநீர் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இந்தப் புதிய சட்டத்தை வரவேற்றுள்ள மனித உரிமை அமைப்புக்கள், இது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் என்று அதனை வரவேற்றுள்ளன.

கொக்கோ கோலா நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ளதுடன், இந்தச் சட்டத்தால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக இந்தச் ''சுற்றுச்சூழல் பாதிப்பு'' 50 லட்சம் டாலர்களுக்கும் குறைவானது என்று ஒரு குழு மதிப்பிட்டிருந்தது.

Read more...


லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா
லிபியாவில் அதிபர் கேர்ணல் மம்மூர் கடாஃபிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டிரு்பபதைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளதாக இந்திய வெளியறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மீ்ட்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஆலோசனை நடத்திய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதை அறிவித்தார்.

"லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு கப்பல்கள் அங்கு சென்று கொண்டிருக்கின்றன. ஒரு கப்பல் ஏற்கெனவே எகிப்தை அடைந்துவிட்டது. அங்கிருந்து பென்காசி நகருக்குச் செல்லும். பென்சாகி விமான நிலையம் குண்டு வீசித் தாக்கப்பட்டிருப்பதால், அதிக அளவில் கப்பல்களை ஏற்பாடு செய்து இந்தியர்களை மீட்பதுதான் சரியாக இருக்கும் என இந்தியத் தூதரும் தெரிவித்திருக்கிறார். அதனால், அதிக கப்பல்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்றார் அமைச்சர் கிருஷ்ணா.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை தொடர்பாக அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த அமைச்சர் கிருஷ்ணா, லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

லிபியா மட்டுமன்றி, ஏமன், பஹ்ரைன் ஆகிய மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இந்தியத் தூதரகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மேலும், மிகுந்த அத்தியாவசியமாக இருந்தால் தவிர, லிபியா, ஏமன் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகவும் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மீனவர் பிரச்சினை குறித்தும் அமைச்சர் கிருஷ்ணா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மட்டும் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு உடனடியாக எடுத்துச் சென்றதாகவும், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நேரடியாக கொழும்பு சென்று இந்திய அரசின் கவலையை வெளிப்படுத்தியதுடன், அதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில், 136 இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களால் பிடிக்கப்பட்டு, இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்தும் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டது குறித்தும் குறிப்பிட்ட அமைச்சர் கிருஷ்ணா, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதுதான், அவர்கள் கைது செய்யப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் முக்கியக் காரணம் என்று இந்த அவைக்கு சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்தார்.

ஆனால், எல்லை தாண்டிச் செல்கின்ற காரணத்தால் அவர்கள் மீது பலப்பிரோயகத்தை உபயோகிப்பது முறையல்ல என்று கிருஷ்ணா குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், இலங்கை மீனவர்கள் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் அந்தப் பகுதியில் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறார்கள் என்ற உண்மை நிலவரத்தையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

மீன் வளம் தொடர்பான இரு நாட்டு கூட்டு செயல்பாட்டுக் குழுக்களும் மார்ச் மாதம் கூடிப் பேச உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், இரு நாட்டு மீனவர் அமைப்புக்களும் தொடர்ந்து ஒருங்கிணைப்புக்களை வலுப்படு்த்திக் கொள்ள வேண்டும் என்றும், அது நிலைமை சீரமைக்க உதவிகரமாக இருக்கும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வலியுறுத்தினார்.

Read more...


தமிழர்கள் தாயகம் திரும்ப விரும்பவில்லை - அதிகாரிகள்


பென்காசியில் கலவரம்
கலவரங்களினால் பாதிக்கப்பட்டுள்ள் லிபியாவின் பென்காசி பகுதியில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் இப்போதைக்கு தாயகம் திரும்ப விரும்பவில்லை எனக்கூறிவிட்டதாக தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பென்காசியிலேயே தென் கொரிய நிறுவனமான ஹூண்டாயின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், கலவரம் மூண்டவுடன் அவர்களில் பெரும்பாலானோர் வேறு இடம் சென்றுவிட்டதாகவும், மீதம் 22 பேர் மட்டும் முன்னர் வசித்த இடத்திலேயே இருப்பதாகவும், அவர்களும் தமிழ்நாடு திரும்புவது குறித்து எவ்வித முடிவும் இன்னமும் எடுக்கவில்லை என்றும் தமிழோசையிடம் பேசிய அதிகாரிக்ள் கூறுகின்றனர்.

நெல்லை மாவட்ட்த்தைச் சேர்ந்த முருகையா இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன், தமிழக அரசு புதுடில்லியிலுள்ள தமிழக ஆணையர் ஆனந்த் மூலம் லிபியாவிலுள்ள தூதரகம் மூலம் விவரங்களைக் கேட்டறிந்ததாகவும், அப்போதுதான் முருகையா விபத்தில்தான் இறந்தார் என்பது உறுதி செய்ய்ப்பட்டதாகவும் தமிழக அரசு கூறுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த 22 பேர் எப்போது திரும்ப விரும்பினாலும் அவர்களுக்கு போதிய உதவிகள் செய்து தருமாறும் தூதரகத்திடம் வற்புறுத்தப்பட்டிருக்கிறது.

இதனிடையே அரசுப்படையினர் சுட்டதில்தான் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்தார் என்றும், இந்திய அரசு உண்மைகளை மறைக்கிறது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read more...


''ஊழல்கள் குறித்து மன்மோகன் சிங்''


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் மற்றும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக உண்மை வெளிக்கொண்டுவரப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், பொது வாழ்வில் தூய்மையை நிலைநிறுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மீனவர் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

''இந்திய – இலங்கை மீனவர்களுக்கிடையே தொடர்ந்து பதற்றம் ஏற்படும் சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவர நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டிச் சென்றாலும் அவர்களைக் கைது செய்யலாமே ஒழிய, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையோ, கொலை செய்வதையோ ஏற்க முடியாது என்று இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது உரையாற்றிய பிரதமர், ஊழல் விவகாரம், உள்நாட்டுப் பிரச்சினை, பணவீக்கம், கறுப்புப் பணம், வேளாண் உற்பத்தி, அண்டை நாடுகளுடனான உறவுகள், சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு உள்பட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகப் பேசினார்.

தொலைத் தொடர்புத்துறை அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் காமன்வெல்த் போட்டி முறைகேடு பற்றிச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் துறைகளில் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்பட்டுவிட்டன என்பதை நான் மறுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.



''தொலைத் தொடர்புத்துறை திட்டங்கள் சரியாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுதான், பிரச்சினைக்குக் காரணமாக அமைந்துவிட்டது எனக் கருதுகிறேன். அது குறித்து, நாடாளுமன்றக் கூட்டுக்குழு, பொதுக்கணக்குக் குழு ஆகியவை விசாரணை நடத்தும். அதில் உள்ள கிரிமினல் அம்சங்கள் குறித்து, சிபிஐ விசாரணை நடத்துகிறது. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கும் அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்து, உண்மை வெளிவர நடவடிக்கை எடுக்கும்'' என்றார் பிரதமர்.

காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் குறித்து, போட்டிகள் நடப்பதற்கு முன்னதாகவே புகார்கள் வந்தது குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், இதில் குற்றம் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று அவைக்கு உறுதியளித்தார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் துணை அமைப்பான ஆன்த்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டில், எஸ் பேண்ட் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், அது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய உயர்நிலைக்குழு ஒன்றை அரசு அமைத்திருப்பதாகவும் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டினார்.

சர்ச்சையை அடுத்து, கேந்திர முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி, அந்த உடன்படிக்கையை விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பிரச்சினை குறித்துப் பேசிய பிரதமர், ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் திட்டம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் பிரச்சினை பற்றிப் பேசிய பிரதமர், மாவோயிஸ்டுகளின் பிரச்சினை அதிகமாக உள்ள மத்திய இந்தியாவில், 60 மாவட்டங்களில் சிறப்பு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்டுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். அதன் மூலம், பழங்குடியின இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்லாமல் தடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Read more...

>> Tuesday, February 8, 2011


'வீடு திரும்புமாறு எம்மை நிர்ப்பந்தித்தனர்'


இடம்பெயர்ந்தவர்கள் முறைப்பாடு
கிழக்கு மாகாணத்தில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பல குடும்பங்கள் பலவந்தமாக வீடுகளுக்குத் திருப்பியனுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 65 சத வீதமான குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டதாகவும் நலன்புரி முகாம்களின் எண்ணிக்கை 197 இலிருந்து தற்போது 101 ஆக குறைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் வடிந்துவரும் நிலையிலேயே இந்தக் குடும்பங்கள் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றபோதிலும், தாம் விருப்பததிற்கு மாறாக எவ்வித நிவாரண உதவிகளுமின்றி வீடு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டதாக சில குடும்பங்கள் கூறுகின்றன.

வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கண்ணன் கிராமம் ,கண்ணகிபுரம் மற்றும் யுனியன் கொலனி ஆகிய கிராம மக்கள் பாடசாலைக் கட்டிடமொன்றில் தஞ்சமடைந்திருந்தபோது அதற்கு பொறுப்பான அதிகாரிகளினால் தாம் வீடு செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டடதாக மக்கள் சிலர் தமிழோசை செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர்.

தங்கள் வீடுகளிலும் ,காணிகளிலும் இன்னமும் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் அங்கு தங்கியிருக்க முடியாத நிலையே இன்னமும் காணப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றார்கள்.


வெள்ளத்தில் மக்கள் அவதி
இது தொடர்பாக வினவிய போது தமிழோசைக்குப் பதிலளித்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வீடுகளுக்கு திரும்ப முடியாதவர்கள் தொடர்ந்தும் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்க முடியும் எனவும் குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதியின் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ள நிலமை காரணமாக பிரதேசத்தின் பாடசாலைகள் எதிர்வரும் புதன் கிழமை வரை மூடப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பிலிருந்து துர இடங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து சேவைகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள போதிலும் உள்ளுரில் சில இடங்களில் இன்னமும் தரை வழிப் போக்குவரத்து தடைப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இதற்கிடையே, மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தாழ்ந்த பிரதேசங்களில் தொடர்ந்தும் வெள்ளம் தேங்கியிருக்கின்றது.

Read more...


கருணாநிதிக்கு எதிராக சுவாமி மனு


முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு ஆளுநரிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நில ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டி, அது தொடர்பான விவகாரத்தில் தமிழக முதல்வரின் மீது வழக்கு தொடர அவர் அனுமதி கோருகிறார்.

முதல்வர் கருணாநிதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தகுதி இல்லாதவர்களுக்கு வீடுகளும் வீட்டுமனைகளும் ஒதுக்கியிருப்பதாக புகார் கூறி, அவர் மீது வழக்கு தொடுக்க அனுமதிவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, சுப்பிரமணியன் சுவாமிக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தனிப்பட்ட அரசியல் விரோதம் காரணமாகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் நீங்கள் தெரிவித்த இந்தக் கருத்து, முதல்வர் கருணாநிதியின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

தங்களது இந்தக் கருத்தை 24 மணி நேரத்துக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தங்கள் மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முதல்வர் கருணாநிதியும் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை முழுவதுமாக ஆதரிப்பதாக என்று அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Read more...


இலங்கை வெள்ள நெருக்கடி- ஐநா அறிக்கை


அவசர நிதியின் அளவை ஐநா மீளாய்வு செய்கிறது
இலங்கையின் பல மாகாணங்களில் அடுத்தடுத்து இரண்டாவது தடவையாகவும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டுக்கு அவசர உதவியாக தேவைப்படுகின்ற நிதியாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த தொகையை மீண்டும் மதிப்பீடு செய்து இம்மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.
51 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதித்தேவையாக கடந்த மாதம் ஏற்பட்ட முதற்கட்ட வெள்ளப் பாதிப்பின்போது ஐநா அறிவித்திருந்தது.

15 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்து 744 தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தங்குமிடம் உணவு, குடிநீர் உள்ளிட்ட உடனடி உதவிகளை செய்வதற்கு இந்த அவசர நிதி தேவைப்படுவதாக ஐநாவின் கொழும்பு தலைமையகம் விடு்த்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய, கால்நடை வாழ்வாதாரங்கள் நாசம்

இதேவேளை, வெள்ளப் பெருக்கு மக்களின் நாளாந்த செயற்பாடுகளை மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.


இலங்கை வெள்ள நெருக்கடி
விவசாயத்தை நம்பி வாழ்கின்ற பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏனைய மக்களும் பெரும் துயரங்களை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் கால்நடை பண்ணைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களும் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.

தமது பயிர்ச் செய்கைகள் வெள்ளத்தில் அழிந்துவிட்ட நிலையில் அரசாங்கம் தமக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேசத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் பயிர்ச்செய்கை மழையில் அழிந்துவிட்டதாக மட்டக்களப்பு வவுணதீவு கமநல அமைப்புக்கள் ஒன்றியத்தின் தலைவர் காத்தமுத்து பிறைசூடி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, பயிர்களுக்கு காப்பீடு செய்யாதவர்கள் தமது சேதங்களுக்கு பெருமளவு இழப்பீட்டை அரசாங்கத்திடம் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசியி்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பல வாரங்களாக நாட்டில் நீடிக்கின்ற குளிர் காலநிலை காரணமாகவும் வெள்ளப் பெருக்கினால் பரவிவருகின்ற சில நோய்த் தாக்கங்களாலும் பெருமளவிலான கால்நடைகள் அழிவடைகின்ற நிலையில் தமது பால் பண்ணைத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பால் உற்பத்தியை நம்பியிருக்கின்ற குடும்பங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

'அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'

2015 இல் நாடு பாலில் தன்னிறைவடைய வேண்டுமென அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில், அதனை அடைவதற்கான அடிப்படை உதவிகள் எதுவும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வில்லையென இலங்கை பாற் பண்ணையாளர்களின் தேசிய இயக்கத்தின் தலைவர் லொக்கு பண்டா ஜயசுந்தர கூறுகின்றார்.


இலங்கை வெள்ள நெருக்கடி
நாட்டில் ஏற்கனவே தேங்காய் விலையேற்றத்தின் பாதிப்பால் புண்ணாக்கு உள்ளிட்ட மாட்டுத் தீவனங்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், தாம் தற்போது வெள்ளத்தின் பாதிப்பையும் எதிர்கொண்டுள்ளதாக
லொக்கு பண்டா ஜயசுந்தர சுட்டிக்காட்டுகின்றார்.

தற்போதைய காலநிலை காரணமாக ஏற்பட்ட பாதிப்பினால் நாட்டில் பாலுற்பத்தி 40 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டுமென கோரி கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சருக்கு தமது அமைப்பு கடந்த மாதம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதுதொடர்பில் இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லையெனவும் ஜயசுந்தர கூறினார்.

Read more...

>> Monday, February 7, 2011


தாயின் தவிப்பு


தாயாருடன் முத்துவேல்-பல ஆண்டுகளுக்கு முன்
தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற தனது மகனை இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய நடுவணரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

தாயார் பாப்பம்மாள்-செவ்வி


செல்லையா முத்துவேல்-செவ்வி


சட்டத்தரணி பாலு-செவ்வி

தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த முத்துவேல் செல்லையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கே வானிலை ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இவர், பல ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்துவருகிறார்.

1978 முதல் 1998 வரை இவர் பலமுறை இந்தியா வந்து தமிழ்நாட்டில் இருக்கும் தனது தாயார் பாப்பம்மாள் உட்பட தனது உறவினர்கள் அனைவரையும் சந்தித்து வந்தார்.

அனால் 2002 ஆம் ஆண்டு இவரது இந்திய கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் இவருக்கு தெரிவித்தனர்.


முத்துவேல் தாயாருடன்-பல ஆண்டுகளுக்கு முன்
இப்படி ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பதை இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் கூற மறுத்து வருவதாக பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த முத்துவேல் செல்லையா அவர்கள், தனக்கு மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளுக்கும் இந்தியா செல்ல கடவுச்சீட்டு மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதன் விளைவாக, 90 வயதான தனது தாயார் பாப்பம்மாள் அவர்களை தன்னால் இந்தியா சென்று நேரில் சந்திக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

பார்வை மங்கி, காது கேட்கமுடியாத நிலையில் இருக்கும் தனது தாயாரை நேரில் சென்று சந்திக்க விரும்பி தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கடந்த 13 ஆண்டுகளாக பயனளிக்கவில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவரது தாயார் பாப்பம்மாள் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தொடுத்திருக்கிறார்.

அதில் இந்தியாவில் பிறந்த தனது நான்காவது மகனான முத்துவேல் செல்லையா இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய அரசு அனுமதிக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பில் இந்திய நடுவணரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Read more...


பறவைகளின் மூளை அளவு குறைவு


பறவைகளுக்கு பாதிப்பு
செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட இடத்தில் காணப்படும் பறவைகளின் மூளை அளவானது 5 சதவீதம் வரையில் குறைவாக இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

இந்த பகுதியில் காணப்பட்ட சுமார் 48 இனங்களை சேர்ந்த 550 வகையான பறவைகளிடம் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தி பிளோஸ் ஒன் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளது.

நார்வே, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

கடந்த 1986 ஆம் ஆண்டு செர்னோபில் அணு ஆலையின் நான்காவது உலை வெடித்து சிதறியது.

இதனை தொடர்ந்து வடக்கு துருவத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகளில் கதிர்வீச்சின் தாக்கங்கள் காணப்பட்டன.

விபத்து ஏற்பட்ட பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தனர். எனினும் கதிர் வீச்சின் தாக்கம் இந்த பகுதியில் உள்ள உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பது குறித்து அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.

இங்கு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உயிரினங்களின் வகைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதே போன்று கதிர் வீச்சு உயிரினங்களை எவ்வாறு பாதித்துள்ளது என்பதை அறிய உயிரினங்களின் மரபணுக்கள் சோதனை செய்யப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தான் பறவைகளின் மூளைகள் கிட்டதட்ட 5 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
பல பறவைகள் முட்டையாக இருக்கும் கட்டத்தில் அழிந்துள்ளன.

பறவைகள் கடுமையான சூழ்நிலைக்கு உள்ளாகும் போது தங்களுடைய உடல் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு. உதாரணமாக நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் சக்தியை சேமிப்பதற்காக தங்கள் உடலின் பாகங்களை சுருக்கி கொள்வது இயல்பு.

ஆனால் மூளையை சுருக்குவது என்பது ஒரு புதிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

இது கதிர்வீச்சினால் ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிந்தால், பறவையின் மற்ற உடல் பாகங்களிலும் மாற்றம் ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

Read more...


கிழக்கில் தொடரும் பாதிப்பு


மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் மழை காரணமாக வாவிகளிலும் ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு முதலைகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

வெள்ளம் காரணமாக தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் வீடுகளைப் பார்வையிட சென்றிருந்த போது முதலைகளின் நடமாட்டத்தை அங்கு காண முடிவதாக கூறுகின்றார்கள்.

வாவி மற்றும் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் தங்கள் கால்நடைகளும், வளர்ப்பு பிராணிகளும் முதலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பழுகாமம் நலன்புரி முகாமொன்றில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றார்கள்.

நேற்று சனிக்கிழமை இரவு கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலுள்ள அம்பிலாந்துறையில் விவசாயியொருவர் முதலைக் கடிக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

தனது வீடு வெள்ள நீரால் சூழப்பட்டுள்ள நிலையில் வீட்டிற்கு வெளியேயுள்ள மலசல கூடத்திற்கு சென்று சுத்தம் செய்வதற்காக பாத்திரமொன்றில் வெள்ள நீரை அள்ளிய போது முதலையொன்று தனது கையைக் கவ்வியதாக சம்பவம் தொடர்பாக 45 வயதான விவசாயி நாகப்பன் பரமானந்தம் கூறுகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ள நிலையில் ஒரு சிறுவன் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ள அதே வேளை மேலும் இரண்டு சிறுவர்கள் காணமடைந்துள்ளார்கள்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்து ஓடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் தொடரும் சீரற்ற கால நிலை காரணமாக மக்கள் அச்சம், வாழ்வாதாரங்களில் உறுதியற்ற தன்மை போன்ற காரணங்களினால் வீடுகளுக்கு திரும்ப தயங்குகின்றனர்.

குற்றச்சாட்டு

இதற்கிடையே, இலங்கையில் விவசாயத்திலும் மீன்பிடி தொழிலிலும் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி சுற்றுநிரூபங்களை அனுப்பியுள்ள போதிலும், கடந்த கால அழிவுகளின் போது ஏற்பட்ட அனுபவங்கள் காரணமாக அதிகாரிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்கு தயங்குவதாக அந்தக்கட்சியின் பிரசாரச் செயலாளர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் இவ்வாறான அழிவுகளின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, பொது நிகழ்வுகளிலும் பெரிய அமைச்சரவையை அமைத்து வரிச்சலுகையுடன் கூடிய வாகனங்களை இறக்குமதிசெய்து அமைச்சர்களின் நலன்களிலும் அதிகளவு வீண் செலவினங்களைச் செய்வதாகவும் விஜித்த ஹேரத் கூறினார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் குற்றச்சாட்டை இலங்கையின் இடர்முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர மறுத்துள்ளார்.

அரச அதிகாரிகளுக்கு நிவாரணங்களில் பணச்சிக்கல் வராதவாறு மாவட்டச் செயலாளர்கள் ஊடாக போதுமான நிதியை தாம் அனுப்பிக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த அமரவீர பிபிசிக்குத் தெரிவித்தார்,

Read more...


வெள்ளத்தால் மன்னார் கடும் பாதிப்பு


வெள்ளத்தால் கடும் பாதிப்பு
இலங்கையின் வடக்கே, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வெள்ள நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படாத அதேவேளை, மன்னார் மாவட்டத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

மன்னார் மாவட்டத்தின் அயல் மாவட்டமாகிய அனுராதபுரம் மாவட்டத்தில் பெய்யும் கடும் மழை காரணமாக அங்குள்ள குளங்கள் யாவும் நிறைந்து வழிவதுடன் அவற்றின் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்படுவதனால் மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் அபாயகரமான வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நீரை ஏந்தி வருகின்ற அருவியாற்றின் நீர் மட்டம் வரலாறு காணாத வகையில் 22 அடி உயர்ந்திருப்பதனால் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

வெள்ள அபாயத்திலிருந்து நானாட்டான், முசலி பிரதேசங்களில் அருவியாற்றின் கரைகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களைப் பாதுகாப்பதற்காக அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 2800 பேர் மன்னார் நகரத்தில் உள்ள 6 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மடு உட்பட வேறு இடங்களுக்கும் மக்கள் பாதுகாப்பிற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

நானாட்டான் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வெள்ள அபாயம் குறித்து மக்கள் அங்கு பெரும் அச்சமடைந்துள்ளதாகவும். நிலைமை மேலும் மோசமடையும் பட்சத்தில் இங்குள்ள மக்களை பாதுகாப்பான வேறிடத்திற்கு அழைத்துச் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாக் கூறினார்.

அருவியாற்றின் வெள்ள நீர் மட்டம் அரையடி குறைந்துள்ளதாகவும் மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் வவுனியா பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் குமாரவேலு சிவபாலசுந்தரம் கூறியுள்ளார்.

அருவியாற்றின் ஒரு பகுதி வெள்ளம் வவுனியா மன்னார் வீதியில் கட்டையடம்பன் பகுதியில் குறுக்கறுத்து உயரமாகப் பாய்வதனால் இந்த வீதியின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மதவாச்சி பகுதியில் ஏ9 வீதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள போதிலும், வவுனியா மாவட்டத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் மாற்று வீதிவழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரத்தில் இருந்து ரயில் மூலமாகப் போதிய எரிபொருளும் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரச அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter