>> Thursday, August 12, 2010


யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் போர்க்குற்றங்கள் நடந்ததாகக் காட்டும் படங்கள் வெளியாகியிருந்தன.

'யுத்த படிப்பினை' விசாரணை ஆரம்பம்

இலங்கையில் அரச படையினர் விடுதலைப் புலிகள் இடையிலான யுத்தத்தின் இறுதி ஆண்டுகளில் இவ்விருதரப்பாரும் நடந்துகொண்ட விதம் பற்றி விசாரிப்பதற்காக இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள சர்ச்சைக்குரிய ஆணையத்தின் முதல் நாள் அமர்வு நடந்து முடிந்துள்ளது.
'படிப்பினை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையம்' என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தின் உறுப்பினர்களை அரசாங்கம் நியமித்துள்ளது. இந்த ஆணையத்தின் அதிகாரமும் அதன் பணிகளின் வீச்சும் குறைவு.

இலங்கையில் இதனது விசாரணைகளைத் தொடங்கியிருக்கும் இந்த ஆணையத்துக்கு, அதன் நோக்கங்களை எட்ட போதுமான அதிகாரங்கள் அளிக்கப்படவில்லை; உதாரணத்துக்கு, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, மேல் நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய அதற்கு அதிகாரம் இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், கடந்த காலங்களில் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன்களும் எந்த வித பலனுமின்றி முடிந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் அமைக்கப்பட்டிருந்த 'உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின்' பாணியில் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளதாக அராசாங்கம் கூறுகிறது.

2002ஆம் அண்டில் ஆரம்பித்த விடுதலைப் புலிகளுடனான போர்நிறுத்தம் உடைந்து போகக் காரணமான சூழ்நிலை தொடர்பில் இந்த ஆணையம் கூடுதல் கவனம் செலுத்தும் என்பதாகத் தெரிகிறது.

2006ம் ஆண்டு வாக்கில் 16 பாரிய மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷனில் அங்கம் வகித்து, பின்னர் அந்தக் கமிஷனில் இருந்து விலகிய முன்னாள் அரசு அதிகாரி, தேவநேசன் நேசையா, தற்போதைய ஆணையமும் எதிர்பார்க்கப்படும் பலனைத் தருவது சந்தேகத்துக்குரியதுதான் என்று தமிழோசையிடம் தெரிவித்தார்.


தேவநேசன் நேசையா செவ்வி

இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. தனியாக விசாரணை நடத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்று தனக்கு அறிவுறுத்துவதற்காக விசேட ஆலோசனைக் குழு ஒன்றை ஐ.நா. தலைமைச் செயலர் அண்மையில் நியமித்திருந்தார் என்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter