>> Friday, March 18, 2011


"இலங்கையைக் காப்பாற்ற இந்தியா முயற்சி"


இலங்கை அதிபருடன் இந்தியப் பிரதமர்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
இலங்கையில், 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, போர் நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் சர்வதேச நாடுகள் கொடுத்த அழுத்தத்தில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கு இந்திய அரசு முக்கியப் பங்காற்றியதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் மூலம் வெளியான அமெரிக்க ராஜாங்க தகவல் பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

விக்கிலீக்ஸ் தகவல்களை ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது.

இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த போரில் பொதுமக்கள் பலியாவது குறித்துக் கவலை தெரிவித்த இந்திய அரசு, அதே நேரத்தில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்வதை எதிர்க்கவில்லை என்று அமெரி்க்கத் தகவல் பரிமாற்றத்தில் கூறப்பட்டுள்ளது.

முகர்ஜி முயற்சியின் 'நோக்கம்'

2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை ஜனாதிபதியை அவரது மாளிகையில் சந்தித்த அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி, மனித உரிமைகள் மற்றும் சிவிலியன்கள் பாதுகாப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கத்துடனும் தான் வரவில்லை என்று கூறியதாக அமெரிக்கத் தூதரிடம் இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

அதாவது, போர் தொடர்வதை இந்தியா எதிர்க்கவில்லை என்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலமே தெளிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில், 23 ஆண்டு மோதலுக்குப் பிறகு, இராணுவம் பெருகின்ற வெற்றி, இலங்கையின் வடக்கிலும் மற்ற பகுதிகளிலும் சகஜ நிலையையை நிலைநாட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்று கூறியிருந்தார்.

மத்தியில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுகவின் நெருக்குதலால் 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டும், போரை தாற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக முயற்சிகளை மேற்கொண்டது.

அதன் பிறகு மற்ற எல்லா நேரங்களிலுமே போர் தொடர்வதை இந்தியா தடுக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

சிவசங்கர் மேனன் 'யோசனை'

2009-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவருடன் அப்போதைய இந்திய வெளியுறவுச் செயலரும் தற்போதை தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் சந்தித்தபோது, மோதலுக்குத் தீர்வு காண்பதற்காக ஐ.நா. மன்றம் தனது பிரதிநிதியை அனுப்புவதை இலங்கை அரசு விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், விடுதலைப் புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கும், போர்நிறுத்தத்துக்கும் இலங்கை அரசு தயாராக இல்லை என்றும் மேனன் கூறியுள்ளதாக விக்கிலீக்ஸ் பெற்ற தகவல் கூறுகிறது.

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்காமல், குறைந்தபட்சம், விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா யோசனை கூறியதாக சிவசங்கர் மேனன் அமெரி்க்க அதிகாரியிடம் கூறியிருக்கிறார். அதே நேரத்தில், புலிகளின் முக்கியத் தலைவர்கள் யார், மற்ற தலைவர்கள் யார் என்பதை எப்படி அடையாளம் காண்பது என்ற கேள்வியும் எழுந்ததாக மேனன் கூறியிருக்கிறார்.

பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள அதே நேரத்தில், விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும் முரண்பட்ட தகவல்கள் வருவதாகவும், பிரபாரகனுக்காகப் பேசவல்லவர் யார் என்பது தெரியவில்லை என்றும், நிலைமையை பிரபாகரன் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பேச்சுவார்த்தை நடைபெற இந்தியா முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை என்றும் சிவசங்கர் மேனன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

2009-ம் ஆண்டு மே 6, 7 தேதிகளில், இலங்கைக்கான பிரிட்டனின் சிறப்புத் தூதர் டேஸ் பிரவ்ன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்தபோது, இலங்கை ராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நிலையில் உள்ளதால், இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம் குறித்து இந்திய அதிகாரிகள் கவலை தெரிவித்தாலும், போருக்குப் பிறகு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சம்மதிக்க வைக்க முடியும் என நம்பிக்கையுடன் இருந்ததாக பிரிட்டிஷ் தூதரக அதிகாரி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. மூலம் நடவடிக்கை எடுப்பதில் 'ஆர்வமில்லை'

ஐ.நா. பாதுகாப்பு மன்றக் கவுன்சில் கூட்ட நிகழ்ச்சி நிரலில், இலங்கைப் பிரச்சினையை சேர்த்து, அறிக்கை வெளியிட்டால், இலங்கைக்கு எதிராக ஐ.நா. குரல் கொடுத்தால், அது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என பிரிட்டன் சிறப்புத் தூதரிடம் சிவசஙகர் மேனனும், நாராயணனும் கூறியதாக விக்கிலீஸ்க் தகவல் கூறுகிறது.

ஐநா. பாதுகாப்புக் கவுன்சில் அல்லது மனித உரிமைக் கவுன்சில் மூலம் அழுத்தம் கொடுப்பதைவிட, ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளே பயனுள்ளதாக இருக்கும் என்று சிவசங்கர் மேனன் அமெரிக்கத் தூதரக அதிகாரியிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

Read more...


தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு


முதல்வர் கருணாநிதி
முதல்வர் கருணாநிதி
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில் தேர்தலில் நிற்கவுள்ள தனது கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வியாழனன்று வெளியிட்டுள்ளார்.

119 தொகுதிகளில் திமுக இம்முறை போட்டியிடுகிறது.

கருணாநிதி முதல்முறையாக தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுகிறார். அங்கிருந்துதான் தேர்தல் பிரச்சாரத்தையும் துவக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மகனும் துணை முதல்வருமான ஸ்டாலினும் இதுவரை ஆயிரம்விளக்குத் தொகுதியிலிருந்து போட்டியிட்டுவந்தார். ஆனால் இப்போது அவர் புறநகர் பகுதியிலுள்ள கொளத்தூரிலிருந்து போட்டியிடுகிறார்.

அமைச்சர் க.அன்பழகனும் துறைமுகம் தொகுதியிலிருந்து வில்லிவாக்கத்திற்கு மாறியிருக்கிறார்

அமைச்சர்க்ள் ஆற்காடு வீராசாமி மற்றும் கோசி மணி ஆகியோர் இம்முறை போட்டியிடவில்லை. அவர்கள் உடல்நலம் இடம்தராததே அதற்கு காரணம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அஇஅதிமுக அமைசர் முத்துசாமி ஈரோட்டிலிருந்து போட்டியிடுகிறார், அதே போல அண்மையில்தான் அஇதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்த சேகர்பாபு வடசென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

119 தொகுதிகளில் போட்டியிட்டாலும் பெரும்பான்மை இடங்களில் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாக வேறு ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் கருணாநிதி கூறினார்.

ஜெயலலிதா பிரச்சாரம் ஒத்திவைப்பு

இதனிடையே அஇஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிவடையாத நிலையில், மார்ச் 18 அன்று மதுரையிலிருந்து தான் துவங்கவிருந்த தேர்தல் பிரச்சாரத்தினை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைப்பதாக இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.

Read more...

>> Saturday, March 12, 2011


2 ஜி விவகாரம் - கனிமொழியிடம் விசாரணை


கனிமொழி
திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு அம்மாள் ஆகியோரிடம், சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்கள்.
2ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவர்களிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ரியால்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்வான் டெலிகாம், முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயனடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து 214 கோடி ரூபாயை வேறு நிறுவனம் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு அந் நிறுவனம் வழங்கியதாகவும் புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, கடந்த மாதம் கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அத்துடன், அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஷரத் குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 20 சத பங்குகளும், கனிமொழியிடம் 20 சதமும், தயாளு அம்மாளிடம் 60 சத பங்குகளும் உள்ளன.

பின்னர், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 214 கோடி ரூபாய், டி. பி. குரூப் நிறுவனமான சினியூக் பிலிமஸிடமிருந்து பங்குகள் பரிவர்த்தனைக்காக 214 கோடி ரூபாய் முன்பணமாகப் பெறப்பட்டதாகவும், ஆனால் பங்கு விலையில் ஏற்பட்ட முரண்பாட்டால் அந்தத் தொகை, வட்டியுடன் திருப்பித் தரப்பட்டதாகவும், அது வருமான வரித்துறைக்கும் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந் நிலையில், அடுத்ததாக, கனிமொழியிடம் விசாரண நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. அதன்படி, இன்று விசாரணை நடைபெற்றது. ஆனால், தயாளு அம்மாளிடம் விசாரணை நடைபெறுமா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில், அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டி.பி. குரூப் நிறுவனத்தைச் சேர்ந்த ஷாகித் பல்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய விசாரணை குறித்து, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த கனிமொழி, ஏற்கெனவே கலைஞர் தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் ஷரத்குமார் தெரிவித்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் தன்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து விவரங்களையும் தெரிவித்ததாகவும் கூறினார்.

Read more...


புலிகள் முகாம் குற்றச்சாட்டு வாபஸ்


இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர்
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் மூன்று முகாம்கள் இயங்குவதாக தான் கூறியது தவறு என்று இலங்கைப் பிரதமர் தற்போது தெரிவித்திருக்கிறார்.
கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இலங்கை பிரதமர் டி.எம். ஜயரட்ண அவர்கள், விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்கள், தமிழ் நாட்டில் மூன்று ரகசிய இடங்களில் பயிற்சி பெறுவதாக கூறியிருந்தார்.

அதில் இந்திய அரசாங்கத்துக்கு சம்பந்தமிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டவில்லை.

ஆனால், அதில் ஒரு முகாமில் முக்கிய பிரமுகர்களை கொலை செய்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாக தனக்கு உளவுத் தகவல்கள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அனைத்து இலங்கையும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்

இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு வன்மையாக மறுத்திருந்தது. தமிழகக் காவல் துறையும் இந்தக் கூற்றை மறுத்திருந்தது.

இந்நிலையில், வெள்ளியன்று இலங்கை பத்திரிகை ஒன்றுக்கு செவ்வியளித்த பிரதமர் ஜயரட்ண அவர்கள், அந்த விடுதலைப்புலிகள் முகாம்கள் குறித்த கருத்து தவறான தகவல்களின் அடிப்படையிலானது என்று கூறினார்.

Read more...


ஜப்பானில் பூகம்பம் - சுனாமி


சுனாமி பேரலைகள்
ஜப்பானில் பதிவுகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் வட கிழக்கு கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரமுடைய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
கரையோர நகரான செண்டாயில் முந்நூறு வரையிலான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர்.

கரிய நிறத்தில் கடலில் பெருந்திரளாக புகுந்து கார்கள், வீடுகள் படகுகள் போன்றவற்றை நிலத்துக்குள் நெடுந்தூரம் இழுத்து வந்து, பின்னர் அலை பின்வாங்கிபோது எல்லாமும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.

ரிக்டர் அளவையில் எட்டு புள்ளி ஒன்பது புள்ளிகளை இந்த நிலநடுக்கம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுக் கழகம் கூறுகிறது.

ஜப்பானில் சுனாமியின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் அளவானது அங்கு ஒட்டு மொத்த அழிவவு குறித்த மதிப்பீட்டைச் செய்வதை சிரமாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

பெரிய கடற்கரை நகரான செண்டாயும், அதனைச் சுற்றவரவுள்ள பண்ணை நிலங்களும், சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. அதேவேளை, அருகில் உள்ள பகுதிகளில் தீ பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பகுஷிமா டேய்சி அணு உலையில் குளிரூட்டும் முறைமை பழுதடைந்ததை அடுத்து அது மூடப்பட்டது. அந்தப்பகுதியில் இருந்த 2000 பேர் வரையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்க்கப்பட்டனர்.

மியாகி மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு அணு உலையில் ஒரு தீச் சுவாலையும் ஏற்பட்டது.

தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரியுள்ளது.

ஜப்பான் அருகே கடலில் நடந்த நிலநடுக்கம் பசிபிக் வட்டகை நாடுகளில் சுனாமி அபாயம் எழுந்துள்ளது.

ஆனாலும் ஹவாயி தீவுகளைச் சென்றடைந்த முதல் சுனாமி அலை ஒரு மீட்டருக்கும் குறைவான உயரமே இருந்ததாகவும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

லத்தீன அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலி ஆகியவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உருவாகின்ற சில சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளின் மொத்த தரை மட்டத்தை விட உயரமாக இருக்கக்கூடும் என்று செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, பிலிப்பைன்ஸ், குரில் தீவுகள், தாய்வான் போன்ற நாடுகளை ஒப்பீட்டளவில் உயரமும் சக்தியும் குறைவான சுனாமி அலைகள் சென்றடைந்துள்ளன.

Read more...

>> Friday, March 11, 2011


விடைபெறுகிறேன் - தலாய் லாமா


தலாய் லாமா
நாடு கடந்த நிலையில் செயல்பட்டுவரும் திபெத் அரசாங்கத்தின் அரசியல் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகப் போவதாக திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா அறிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரங்களை மற்றவரிடம் அளிக்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு உள்ளதை அவர் நெடுங்காலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.

தனது அதிகாரத்தை மற்றவரிடம் முறையாகக் கையளிப்பதென்பது அடுத்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

திபெத்தில் கம்யூனிஸ ஆட்சி வந்ததுக்கு எதிராக 1959ல் நடந்த வெற்றியடையாத கிளர்ச்சியின் ஆண்டு விழாவில் அவர் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.

அந்த கிளர்ச்சி தோல்வியடையவேதான் அவர் திபெத்தை விட்டு வெளியேற நேர்ந்திருந்தது.

தலாய் லாமாவின் தற்போதைய அறிவிப்பு எல்லோரையும் ஏமாற்றுவதற்கான ஒரு சாகசம் என்று சீன அரசு கூறியுள்ளது.

புத்தரின் மறுபிறப்பு

பௌத்த மதத்தைச் சேர்ந்த திபெத்திய மக்கள் தலாய் லாமாவை புத்தரின் மறுபிறப்பாகக் கருதுகின்றனர். தமது ஆன்மிகத் தலைவர்களின் மறுபிறப்பு வரிசையில் தற்போதைய தலாய் லாமாவை 14ஆவது மறுபிறப்பாக அவர்கள் நம்புகின்றனர்.

"திபெத்துக்கு என்று தனியொரு அரசியல் தலைவர் தேவை. அவர் திபெத்திய மக்களால் சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் தேர்தெடுக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டும்" என்றும் அவரிடம் தன்னுடைய அதிகாரங்களை தான் வழங்க விரும்புவதாகவும் தலாய் லாமா தற்போது கூறியுள்ளார்.

தலாய் லாமா திபெத்தை விட்டு வெளியேறி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது அவருக்கு 75 வயதாகிறது.

திபெத்துக்கு விடுதலை வென்றுதரும் போராட்டத்தில் தான் மனம் தளர்ந்துவிடவில்லை, தன்னுடைய பொறுப்புகளை தான் கைவிடவும் விரும்பவில்லை. ஆனால் மாற்றம் வருவதற்கான தருணம் வந்துவிட்டதால்தான் தான் இந்த அறிவிப்பைச் செய்துள்ளதாக தலாய் லாமா கூறுகிறார்.

நாடு கடந்த திபெத்திய அரசாங்கம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம்தான். அதற்கென பிரதமர் ஒருவரும் இருக்கிறார். ஆகவே தலாய் லாமா தற்போது கையளிக்க விரும்பும் அதிகாரங்கள் என்பவை சட்டங்களில் கையெழுத்திடுவது, பொறுப்புதாரிகளுக்கு சத்தியப்பிரமாணம் செய்துவைப்பது போன்ற சின்னச் சின்ன அதிகாரங்கள்தான்.

திபெத்தின் ஆன்மிகத் தலைவர் என்ற முக்கியமான பங்கில் தலாய் லாமா நீடிக்கவே செய்வார்.

சீனா சாடல்

தலாய் லாமாவின் தற்போதைய அறிவிப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான ஒரு சாகசம் என்று சீன அரசு கூறியுள்ளது.

தற்போதைய தலாய் லாமா இறந்த பின்னர் அடுத்த தலாய் லாமாவாக வருபவரை யார் தேர்ந்தெடுப்பது என்ற விடயத்தில் பெய்ஜிங்கிற்கும் நாடு கடந்து வாழும் திபெத்தியருக்கும் இடையில் இடையில் நடக்கும் அதிகாரம் போட்டி தற்போதைய விஷயங்களுக்கு பின்னணியில் உள்ளது எனலாம்.

Read more...


"தமிழகத்தில் புலிகள் முகாம் இல்லை"


தமிழக காவல் துறைத் தலைவர் லத்திகா சரண்
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இயங்கிவருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் ரகசிய பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாக இலங்கை பிரதமர் டி.எம். ஜயரத்ன நாடாளுமன்றத்தில் புதன் கிழமையன்று தெரிவித்திருந்தார்.

இலங்கையில் போரை உருவாக்கவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் தமிழகத்தில் பயிற்சி முகாம்களை நிறுவப்பட்டுள்ளதாக ஜயரத்ன குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் அவரது புகார்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தமிழக டிஜிபி லத்திகா சரண் சென்னையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் குறித்து தமிழக போலீசின் புலனாய்வுத் துறை விழிப்புடன் கண்காணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடலோர பாதுகாப்புக் குழுவுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என லத்திகா சரண் குறிப்பிட்டிருக்கிறார்.

அண்மையில் சென்னையில் புத்த மையம் ஒன்று தாக்கப்பட்டதற்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றவகையில் ஜயரதன் கூறியிருந்தார். அதுவும் தவறான தகவல், தாக்குதலை நட்த்தியது இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகள் அல்ல என லத்திகா சரண் மேலும் கூறியிருக்கிறார்

Read more...


இலங்கை துவக்க ஆட்டக்காரர்கள் புதிய சாதனை


துவக்க ஜோடி 45 ஒவர்கள் வரை விளையாடியது
ஐ சி சி உலகக் கோப்பையின் ஏ பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் ஜிம்பாப்வே அணியை இலங்கை அணி எளிதில் வென்றது.
கண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி இலங்கை அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்களான உபுல் தரங்கவும், திலகரத்ன தில்ஷானும் அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 282 ரன்களைக் குவித்தனர்.

உலகக் கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்காரர்கள் இந்த அளவுக்கு ரன்களை இது வரை எடுத்ததில்லை. இலங்கை அணி 282 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 133 ரன்களை எடுத்திருந்த உபுல் தரங்க ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மேலும் ஐந்து ரன்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக ரன்களை எடுத்த ஜோடி என்ற சாதனையை இவர்கள் பெற்றிருக்க முடியும்.

இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்காவும் ஜெயசூர்யாவும் முதல் விக்கெட்டுக்கு 286 ரன்களை எடுத்திருந்தனர்.

திலகரத்ன தில்ஷான் 144 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு களமிறங்கிய இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்ததன் காரணமாக வலுவான துவக்கத்தை முழுமையாக இலங்கை அணியால் பயன்படுத்தக் கொள்ள முடியாமல் போயிற்று. 50 ஒவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை எடுத்தது.

ஜிம்பாப்வே அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வேகமாக தமது ஆட்டத்தை துவக்கினர். இருந்தும் 116 ரன்களை அந்த அணி எடுத்திருந்த நிலையில் துவக்க ஆட்டக்காரர் ரெஜிஸ் சக்காபா ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்தன. ஜிம்ப்வே அணியின் மற்ற துவக்க ஆட்டக்காரரான பிரண்டன் டெய்லர் அதிக பட்சமாக 80 ரன்களை எடுத்தார். ஜிம்பாப்வே அணி 188 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

Read more...

>> Wednesday, March 9, 2011


எதிர்காலம்: உலக விதைகள் காப்பகத்தில்!


விதைகள் காப்பகத்துக்கான சுரங்கவழிப் பாதை
உலகின் மிக முக்கியமான விதை காப்பகங்களில் ஒன்றான ஸ்வால்பார்ட் காப்பகம், தனது மூன்றாவது ஆண்டு பூர்த்தியை எட்டியிருக்கின்றது.
94 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வகையான தாவர விதையினங்கள் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

விதைகளின் வடிவத்தில் இந்த அரியவகைத்தாவரங்களின் டீ.என்,ஏ மரபணுக்களை களஞ்சியப்படுத்தி வைப்பது, அவற்றின் எதிர்கால இருப்புக்கும் புதியவகை இனவிருத்திகளை கண்டறிவதற்கும் மிக அத்தியாவசியமானது என்கிறார் அமெரிக்க தாவரவியல் பூங்காவைச் சேர்ந்த விஞ்ஞானி
கிரிஸ்டின் ஃப்லனாகன்.

நோர்வேயின் உறைந்த பனிவெளியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் உலக விதைகள் காப்பகம், எந்தவொரு அவசரநிலையின் போதும் உலக உணவு விநியோகத்துக்கு பாதி்ப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வதேச முயற்சி.


காப்பகத்துக்குச் செல்லும் பெரு நாட்டு உருளைக் கிழங்கு
பெருவைச் சேர்ந்த லிமா வகை பாலைவன அவரையினங்கள், எதியோப்பாவைச் சேர்ந்த தாவரயினங்கள், பாலைவன பருப்புவகைகள் மற்றும் சீனாவின் சோயா அவரையினங்கள் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்க விவசாயத்துறை அதிகாரிகளால் 1920களில் சேகரிக்கப்பட்ட விதையினங்களும் இப்போது இந்த வடதுருவத்து ஸ்வால்பார்ட் காப்பகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள தாவரயினங்களில் அடங்குகின்றன.

பல பாகங்களிலும் உள்ள விதை வங்கிகள் பல இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இப்போது இந்த உலக விதைகள் காப்பகம் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.


'பனிப்பாலைவனத்தில்' ஸ்வால்பாட் காப்பகத்தின் நுழைவாயில்
எகிப்தில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, பாலைவன தாவரயினங்களில் ஈடுசெய்ய முடியாத அரியவகை மரபணுக்கள் சேமிக்கப்பட்டிருந்த இரண்டு விதைவங்கிகள் நாசகாரர்களினால் சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சுமார் ஆறுலட்சம் வகையான விதைகள் ஏற்கனவே சேமித்துப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள, ஸவால்பார்ட் உலக விதைகள் காப்பகத்தில் காட்டு தாவர இன வகைகளை தேடிப்பெற்று சேமித்துவைக்கும் தேவைக்காக நோர்வே அரசாங்கம் 50 மில்லியன் டொலர்களை மானியமாக வழங்கியுள்ளது.

Read more...


ஆண்-பெண் சமத்துவப் பட்டியல்


பெண்கள் தினம்
சர்வதேச பெண்கள் தினமான இன்று ஆண் - பெண் சமத்துவத்தில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்களின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தி உலக பொருளாதார மன்றம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா செவ்வி
இந்தப் பட்டியலில் சிறிய ஆப்பிரிக்க நாடான லெசோதோ முன்னணியில் வந்துள்ளதென்பதும், முஸ்லிம் உலகில் முற்போக்கான நாடாகப் பார்க்கப்படும் துருக்கி, இப்பட்டியலில் மிகவும் கீழாக வந்திருப்பதென்பதும் பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உரிமைகளில் உள்ள சமத்துவமின்மையைக் குறைப்பதில் ஒரு நாடு அடைந்திருக்கக் கூடிய வெற்றியைக் கணக்கிட்டு, அதன் அடிப்படையில் உலகப் பொருளாதார மன்றம் இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது.


வ.கீதா கருத்து
ஆசியாவைப் பொறுத்தவரை மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார்.
இந்தியாவில் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

இந்தப் பட்டியலில் ஆப்பிரிக்காவின் சிறிய ராஜ்ஜியமான லெசோதோ எட்டாவது இடத்தில் வந்துள்ளது. மற்ற எந்த ஆப்பிரிக்க நாட்டை விடவும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற செல்வந்த நாடுகளை விடவும் ஆண்- பெண் சமத்துவத்தில் இந்த நாடு முன்னணியில் உள்ளது என்பது பலருக்கு வியப்பைத் தந்துள்ளது.

இந்த நாட்டின் ஜனத்தொகை 18 லட்சம் மட்டுமே, அந்த சிறிய தொகையிலும் பாதிக்கும் அதிமானோர் மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளனர். ஆனாலும் ஆண்-பெண் சமத்துவத்தில் பல செல்வந்த நாடுகளை லெசோதோ விஞ்சியுள்ளது.

அரசியலில் பெண்களின் பங்கேற்பு, ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் கல்வி நிலை, சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்களுக்குள்ள உரிமைகள் போன்றவற்றை மதிப்பிட்டு ஒரு சமூகத்தில் ஆண் பெண் சமத்துவம் எந்த அளவில் உள்ளதென்பதை உலக பொருளாதார மன்றம் கணக்கிட்டிருந்தது.

அந்த நாட்டின் அமைச்சர்களில் ஐந்தில் ஒருவர் பெண். காவல்துறையின் தலைமை அதிகாரி பெண், ஆண் பிள்ளைகளோடு ஒப்பிடுகையில் அதிக அளவான பெண் பிள்ளைகள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக இருக்கின்றனராம்.

லெசோதோவில் ஆண் பெண் சமத்துவச் சூழல் வியக்கவைக்கும் நல்ல நிலையில் இருக்கிறதென்றால், வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் துருக்கியோ இந்தப் பட்டியலில் மிகவும் கீழே வந்திருக்கிறது.

பெண்கள் முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதில் துருக்கிய அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதையே இது காட்டுவதாக அந்நாட்டின் பெண்ணுரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

குடும்ப கௌரவத்தை காப்பாற்றிக்கொள்வதாக நினைத்து பெண்களை குடும்ப உறுப்பினர்களே கொல்லும் சம்பவங்கள் அங்கு தினந்தோறும் நடப்பது வாடிக்கையாகிவிட்டதாம். துருக்கியை ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி கடைப்பிடித்துவரும் இஸ்லாமியப் பழமைவாதக் கொள்கைகள்தான் இதற்குக் காரணம் என்று ஆர்வலர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துருக்கியப் பிரதமர் ரெஜெப் தயிர் எர்தோவான் ஆற்றிய ஒரு உரையில், பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டித்துள்ளார்.

இதற்கிடையே ஆசியாவைப் பொறுத்தவரை மேற்காசிய நாடுகளில், குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் பெண்ணுரிமை என்பது மிகவும் பிந்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், அங்கு இந்த விடயங்களில் சில சலனங்கள் ஏற்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணிய எழுத்தாளரான வ. கீதா கூறுகிறார்.

இந்தியாவில் நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கு இன்னமும் எவ்வளவோ முன்னேற வேண்டியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

Read more...


திமுக-காங்கிரஸ் உடன்பாடு


காங்கிரஸ் மற்றும் திமுக தலைவர்கள்
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக – காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், இதை செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு வைபவத்தில் உரையாற்றிய திமுக தலைவர் முதல் கருணாநிதி அவர்கள் இந்தக் கூட்டணி உடன்பாடு குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

திமுக காங்கிரஸ்சுக்கு 61 தொகுதிகளைத் தரும் என்றும், பாமக ஒரு தொகுதியையும், முஸ்லிம் லீக் ஒரு தொகுதியையும் காங்கிரஸுக்கு விட்டுத்தருவார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு, பிறகு 63 தொகுதிகள் கேட்பது நியாயமில்லை என்று கூறிய திமுக, கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்று கூறி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றியது.

அதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை உடன்பாடு ஏற்பட்டது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter