>> Wednesday, August 25, 2010


கப்பலில் வந்த இலங்கை அகதிகள்

கப்பல் அகதிகளுக்கான காவல் நீட்டிப்பு
இலங்கைத் தமிழர்களைச் சுமந்து கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி கனடாவின் மேற்குக் கரையை வந்தடைந்திருந்த எம்.வீ.சன் சீ என்ற சரக்குக் கப்பலில் வந்தவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்குமாறு கனடாவின் சுயாதீன குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் வந்திருந்த 492 பேரில் 49 சிறார்கள் தவிர ஏனையோரின் தடுப்புக் காவலை நீட்டிப்பதாக குடிவரவு மற்றும் அகதிகள் வாரியம் திங்களன்று வழங்கிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கப்பலில் வந்தவர்களுடைய அடையாள ஆவணங்களை ஆராய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அரசாங்கம் கேட்டிருந்தது. அவர்களது கோரிக்கைக்கு இந்த சுயாதீன வாரியத்தின் அதிகாரிகள் உடன்பட்டுள்ளனர்.

இந்த உத்திரவின்படி, முன்னூற்று எண்பது ஆடவர்களும் அறுபத்து மூன்று பெண்களும் தொடர்ந்து தடுத்துவைக்கப்படுவார்கள். 49 சிறார்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றாலும், சிறையில் உள்ள தமது பெற்றோருடனோ, பார்த்துக்கொள்வதற்கான பெரியவர்கள் இல்லை என்றால் சமூக சேவைகள் பராமரிப்பிலோதான் இவர்கள் வைக்கப்படுவார்கள் என அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில் தடுத்து வைக்கப்படுபவர்கள், கொஞ்சம் காலத்துக்கு ஒரு முறை கனடாவின் சுயாதீன குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தின் முன்பு தமது தடுப்புக் காவலை எதிர்த்து மனுச் செய்ய முடியும் என்பதாக கனடியச் சட்டம் அமைந்துள்ளது. அவர்களை விடுவிக்கச் சொல்லும் அதிகாரமும் இந்த வாரியத்துக்கு உண்டு.

தாய்லாந்திலிருந்து பயணத்தைத் துவங்கியிருந்த இந்த அகதிகள் முதலில் ஆஸ்திரேலியா செல்ல முயன்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் 90 நாட்களை கடல் பயணத்தில் கழித்து கனடா வந்தடைந்திருந்தனர்.

கடந்த ஒரு வருட காலத்தில் கனடாவை வந்து அடையும் இரண்டாவது தமிழ் அகதிக் கப்பல் இதுவாகும்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter