>> Wednesday, August 11, 2010


தமிழ் அகதிகள் படகு ஒன்று (கோப்புப் படம்)


கனடாவை நெருங்கும் தமிழ் அகதிக் கப்பல்

இலங்கையில் இருந்து அகதிகளைச் சுமந்து கொண்டு தஞ்சம் கோருவதற்காக கனடாவின் மேற்குக் கரைப் பரப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் கப்பல் ஒன்றை கனடிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
தாய்லாந்து கொடி ஏந்திய இந்தக் கப்பலில் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் உள்ளனர் என்று தாங்கள் நம்புவதற்கு இடமிருக்கிறது என கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விக் டொயெவ்ஸ் கூறியுள்ளார்.

"இந்தக் கப்பலுக்குள் யார் இருக்கிறார்கள், அவர்கள் எதற்காக இங்கே வருகிறார்கள் என்ற கவலை எங்களுக்கு நிச்சயம் உள்ளது" என்று திங்களன்று டொரொண்டோவில் கருத்து வெளியிட்ட அமைச்சர் தெரிவித்தார்.

"கடல் வழியாக ஆட்கள் கனடாவுக்குள் கடத்திக் கொண்டுவரப்படுவது என்பது தமது தேசியப் பாதுகாப்புக்கு பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது" என்று அவர் விளக்கினார்.

"வட அமெரிக்காவுக்குள் சுலபமாக நுழைவதற்கான வழியாக கனடாவை யாரும் பார்க்கக்கூடாது. எங்களது குடிவரவுத் துறையை குறுக்கு வழியில் பயன்படுத்தப் பார்க்கும் யாரையும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம்"என்றார் அவர்.

அமெரிக்க கரையோரக் காவல் படையினரும் இந்தக் கப்பலை கண்காணித்து வருகின்றனர்.

கப்பலில் வருகின்றவர்களைத் தடுத்துவைப்பதற்காக வான்கூவர் நகருக்கு வெளியே இரண்டு சிறைச்சாலைகள் தயாராகி வருவதாக மேப்ல் ரிட்ஜ் மாவட்ட நிர்வாகம் சார்பாகப் பேசவல்ல ஜான் லீபர்ன் தெரிவித்துள்ளார்.

ஆண்கள் பெரும்பான்மையாக கிட்டத்தட்ட ஐநூறு தமிழ் அகதிகள் கப்பலில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக இச்சிறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter