>> Wednesday, August 11, 2010


பிரதமர் மன்மோகன் சிங்
'காஷ்மீரிகளுக்கு வேலைவாய்ப்பு திட்டம்'





இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க தனது பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் தலைவர் சி. ரங்கராஜன் தலைமையில் புதிய நிபுணர் குழு அமைக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முழுமையான பலனைத் தராத நிலையில் புதிய முயற்சி எடுக்கப்படுவதாக பிரதமர் ஒப்புக்கொண்டார்.

தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து கலவரம் நடைபெற்று வருகிறது.

அப்பாவி இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றதாகக் கூறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த ஆர்ப்பாட்டாங்கள் கலவரங்களாக மாறி, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஏறத்தாழ 30 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.

டெல்லியில் கூட்டம்

இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். அதில், மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பி.டி.பி. எனப்படும் மக்கள் ஜனநாயகக் கட்சி கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தனக்கு மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்தார்.


காஷ்மீர் தெருக்களில் கோபத்துடனும் வெறுப்புடனும் காணப்படும் இளைஞர்களின் வலியையும் கோபத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.


பிரதமர் மன்மோகன் சிங்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு காஷ்மீர் இளைஞர்கள் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்த பிரதமர், இளைஞர்கள் படிக்காவிட்டால் காஷ்மீரின் எதிர்காலம் என்னவாகும் என்று பெற்றோருக்கு கேள்வி எழுப்பினார்.

அனைவரும் இணைந்து ஒரு புதிய துவக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார்.

காஷ்மீர் மக்களின் கெளவரத்தைக் காப்பாற்றும் வகையில் இப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுவது முக்கியம் என்று குறிப்பிட்டார்.

மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் வன்முறைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter