>> Wednesday, June 30, 2010


அங்கோலாவின் தலைநகரம் லுவாண்டா

வாழ அதிகம் செலவாகும் நகரங்கள்





உலகிலேயே மிக அதிகம் செலவாகக் கூடிய நகரமாக ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் தலைநகர் லுவாண்டா வந்துள்ளது. மிகக் குறைவாக செலவாகக் கூடிய நகரமாக பாகிஸ்தானின் கராச்சி வந்துள்ளது.
நாடு விட்டு நாடு போய் வாழ்பவர்களுக்கு மிக அதிகமாக செலவாகக் கூடிய நகரங்களின் தர வரிசைப் பட்டியல் ஒன்றை நிதித்துறை ஆய்வு நிறுவனமான மெர்சர் நிறுவனம் தயாரித்துள்ளது.

வாழ்க்கைச் செலவினங்கள் உலகிலேயே மிக அதிகம் கொண்ட நகரங்களின் பட்டியலில் லுவாண்டாவைத் தொடர்ந்து ஜப்பானின் டோக்கியோ, மூன்றாவதாக சாட் நாட்டின் தலைநகரம் ன்ஜமினா, அடுத்ததாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ ஆகியவை வந்துள்ளன.

ஏழாவது இடத்தில் கெபோன் என்ற ஆப்பிரிக்க தேசத்தைச் சேர்ந்த லீப்ரிவீல் வந்துள்ளது.

வாழ அதிகப் பணம் தேவைப்படும் நகரங்களாக உலகின் முதல் பத்து நகரங்களின் பட்டியலில் மூன்று ஆப்பிரிக்க நகரங்கள் இடம்பிடித்திருப்பது என்பது இதுவே முதல் முறை.

ஐந்து கண்டங்களில் இருந்து 240 பெருநகரங்களை ஒப்பிட்டுப் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்குமிடத்துக்கான செலவு, போக்குவரத்து செலவு, உணவு, உடைகள், பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு ஆகக்கூடிய செலவுகள் என்று பல்வேறு செலவினங்களை அளந்து ஒப்பிட்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது.

"லுவாண்டாவில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டியில் தங்க வேண்டுமானால் மாதவாடகை கிட்டத்தட்ட ஏழாயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகிறது. லண்டனில் இதேபோல ஒரு வீட்டுக்கு வாடகை சாதாரணமாக நான்காயிரம் டாலர்களுக்கு குறைவாகத்தான் இருக்கும்." என்கிறார் மெர்சர் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த மிலன் டெய்லர்.

இந்தியாவின் தில்லி இந்தப் பட்டியலில் 85ஆவது இடத்திலும் மும்பை 89ஆவது இடத்திலும் வந்துள்ளன.

Read more...


யு என் எச் சி ஆர் முத்திரை


யு என் எச் சி ஆர் அலுவலகம் மூடப்படும்''



ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் இலங்கையின் கிழக்குப் பகுதியில் தனது பணிகளை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இதன்படி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மட்டக்களப்பில் செயற்பட்டு வந்த அந்த அமைப்பின் அலுவலகம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் இதுவரை காலமும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அதனால் இடம்பெயர்ந்தவர்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தின் அலுவலகம் உதவி வந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக இடம்பெயர்ந்திருந்த நிலையில் இருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் தமது இருப்பிடங்களுக்கு திரும்பி விட்டதாகவும் அதனாலேயே தமது பணிகளை கிழக்கு மாகாணத்தில் குறைத்துக் கொள்வதாகவும் யு என் எச் சி ஆர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி மைக்கேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பியிருந்தாலும் பல காலமாக அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவிகளை தமது அமைப்பு செய்து வந்துள்ளது என்றும் மைக்கேல் ஸ்வாக் கூறியுள்ளார்.

இலங்கையின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற உச்சக்கட்டப் போரின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 1,60,000 பேர் இடம்பெயர நேர்ந்தது. மேலும் கிழக்கு மாகாணத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் 1,40,000 பேர் இந்த மாவட்டத்துக்கு வந்தனர்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்னமும் 2000 பேர் வரை மீளக் குடியேற்றப்படாத நிலையில் இருக்கிறார்கள் எனவும் ஐ நா வின் அதிகாரி கூறுகிறார். அவர்கள் வாழ்ந்து வந்தப் பகுதிகளில் கண்ணி வெடி அகற்றும் பணி முழுவதுமாக முடியவில்லை என அரசு கூறுவதே இவர்கள் தமது இடங்களுக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கே இன்னமும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் 54,000 மக்களின் நலன் குறித்தும் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று மீண்டும் வாழ்வது குறித்தும் தாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருவதாகவும் யு என் எச் சி ஆர் அமைப்பின் இலங்கை பிரதிநிதி மைக்கேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது பணிகளை நிறுத்திக் கொண்டு அலுவலகத்தை மூடுவது தங்களுக்கு கவலை அளிக்கிறது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கூறுகிறார்.

மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு இன்னும் முழுமையான வாழ்வாதாரங்கள் ஏற்படவில்லை என்றும் அதுவரை ஐ நா வின் அகதிகளுக்கான ஆணையம் போன்ற அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது எனவும் அவர் கூறுகிறார்.

Read more...



சம்பந்தர்-டக்ளஸ் தொலைபேசியில் பேச்சு



இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை எடுப்பது குறித்தும் அரசியல் ரீதியாக தமிழ்க் கட்சிகளை மேலும் நெருக்கமான ஒரு நிலையை எடுக்கவும், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கட்சிகள் பலவற்றுடன் கடந்த சில நாட்களாக பேச்சு வார்த்தைகளை நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுடனும், தான் உரையாடியதாக அமைச்சர் டக்ளஸ் அவர் பிபிசியிடன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக டக்ளஸ் தம்முடன் தொலைபேசியில் உரையாடினார் என்று தமிழோசையிடம் உறுதி செய்த இரா.சம்பந்தன் அவர்கள், ஆனால் நேரில் இருவரும் இதுவரை சந்திக்கவில்லை என்றார். ஆனால் யாருடனும் தமிழர் பிரச்சினை பற்றிப் பேசுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



இருவரும் பேசிக்கொண்ட விஷயங்கள் குறித்துக் கேட்டபோது, அவர் மக்கள் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய அளவில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த ஒரு முடிவையும் எடுக்கும் என்றார் சம்பந்தர்.

தமிழ்க் கட்சிகள் மத்தியில் பரந்துபட்ட அளவில் ஒரு கருத்தொற்றுமை வருவதைத் தாங்கள் எதிர்க்கமாட்டோம், வரவேற்போம் என்றார் அவர்.

இலங்கை அரசு, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அல்லது அனுதாபத்துடன் இருந்த புலம்பெயர் தமிழர் பிரமுகர்கள் ஒன்பது பேரை, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலி இயக்கப் பிரமுகர் கேபி என்ற குமரன் பத்மநாதன் அவர்களின் ஊடாக இலங்கைக்கு வரவழைத்து, அவரை சந்திக்க அனுமதித்து, வட மாகாணத்துக்கு அவர்களை அழைத்து சென்று , புனர்வாழ்வு நடவடிக்கைகளை பார்வையிட அனுமதித்தது பற்றி கேட்டதற்கு, இது குறித்து ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டோம், அரசுடன் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரங்கள் தமக்குத் தெரியாது என்றார் சம்பந்தன்.

Read more...



'இராணுவச் செலவில் சிறு குறைப்பு'



இலங்கை வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இந்த வருடம் 4 வீதத்தால் மாத்திரம் குறைந்துள்ள போதிலும், அதில் தற்போதைய நிலையில் மேலும் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என்று இலங்கை பொருளாதார ஆய்வாளரான முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகை கூட கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சற்றுக் குறைந்துள்ளதாகவும், சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகள் சற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை போர் முடிந்து விட்டதால், பாதுகாப்புத்துறை முதலீட்டுச் செலவுகள் சற்றுக் குறைந்தாலும், நடைமுறைச் செலவுகள் குறையவில்லை என்பதால், அதற்கான ஒதுக்கீட்டில் உடனடியாக அதிக குறைப்பை எதிர்ப்பார்க்க முடியாது என்றும் சர்வானந்தா கூறினார்.



அதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலையான முகாம்களை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதால், பாதுகாப்புத்துறை முதலீட்டுச் செலவுகளும் உடனடியாக பெரிய அளவில் குறையும் வாய்ப்பில்லை என்றும் அவர் கூறுகிறார்.

வடக்கு, கிடக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் நேரடியாக ஒதுக்கப்படும் நிதி கடந்த வருடத்தை விட, இந்த வருடம் குறைக்கப்பட்டிருப்பதாக கூறும் சர்வானந்தா அவர்கள், ஆனால் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பொதுவாக கொடையாளிகளின் உதவிகளின் மூலம் நடத்தப்படுவதால், அது வரவு செலவுத்திட்டத்தில் பிரதிபலிப்பதில்லை என்றும் கூறினார்.

Read more...

>> Tuesday, June 29, 2010



நளினி


நளினி புழல் சிறைக்கு மாற்றம்


முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வந்த நளினி இப்போது சென்னையை அடுத்த புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
உணவில் விஷத்தைக் கலந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாகவும், தன்னை சிறை அலுவலர்கள் பல வழிகளிலும் துன்புறுத்துவதாகவும் புகார் கூறி தன்னை வேலூரிலிருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு நளினி வேண்டிக்கொண்டிருந்தார்.

அவரது புகார்கள் குறித்து விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழு அண்மையில்தான் தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்திருந்தது.

சில தினங்களுக்கு முன் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் சிறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருப்பதாகவும், எனவே புழலுக்கு மாற்றம் தேவையில்லை என்று நளினி கருதுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திங்களன்று புழலுக்கு நளினி மாற்றப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கேள்வி
நாங்கள் கோரி வந்தபோது மாற்றாமல் இப்போது மாற்ற முன்வருவானேன்?


நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி

"இப்போது புழலுக்கு மாற்றியிருப்பதால் சில வசதிகள் உள்ளன என்றாலும், வேலூரில் இருந்தபோது அதே சிறையில் இருந்த தனது கணவர் முருகனை நளினியால் அடிக்கடி சந்திக்க முடிந்தது, இனி அத்தகைய சந்திப்புகள் நிகழ்வது கடினமாகும்" என புகழேந்தி குறிப்பிட்டார்.

19 ஆண்டுகளை நளினி சிறையில் கழித்துவிட்ட நிலையிலும் நாட்டின் பாதுகாப்பு காரணம் கருதி அவரை விடுதலை செய்யக்கூடாது என்ற சிறை ஆலோசனைக் குழுவின் முடிவினை எதிர்த்து நளினி தொடுத்திருக்கும் ஒரு வழக்கு வரும் வாரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

Read more...


தமிழக முதல்வர்

சர்ச்சையில் மாநாட்டு பிரகடனம்



தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என தமிழ் செம்மொழி் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு, அரசியல் சட்டப்படி செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழ் மீதும் தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும் பற்றுக்கொண்டவர்கள் அதை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டி, கடந்த ஒரு வாரமாக கோவையில் தங்கியிருந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்கள், சென்னை திரும்பும் முன்பு கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

மொரீஷியஸ் போன்ற வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பலர் தமிழை மறந்துவிட்ட நிலையில், அவர்கள் தங்கள் அடையாளத்தைத் தெரிந்துகொள்ள தமிழக அரசு ஏற்பாடு செய்யுமா, தமிழ்நாட்டிலிருந்து அறிஞர்கள், ஆசிரியர்களை, புத்தகங்களை அனுப்பி உதவுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, அவ்வாறு கோரிக்கைகள் வந்தால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அடுத்த மாநாடும் தமிழ் செம்மொழி மாநாடாக நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், ஜப்பானில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதியும் ஒத்துழைப்பும் கோரப்படுமா எனக் கேட்டபோது, எல்லா அமைப்புக்களின் ஒத்துழைப்புடனும் அடுத்த மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் பதிலளித்தார்.

செம்மொழி மாநாட்டை ஒட்டி கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த கருணாநிதி, அரசு அவ்வாறு எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

Read more...



குமரன் பத்மநாதன்


'கே.பி. ஏற்பாட்டில் இலங்கை பயணம்'



விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதனின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை சென்று அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்து வந்ததாக அவ்வாறு சென்று வந்த குழுவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர் சுகாதார அமைப்பைச் சேர்ந்த சார்ள்ஸ் அன்டனிதாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

சார்ள்ஸ் அன்டனிதாஸ் செவ்வி

இலங்கையில், கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட பலரை இலங்கையில் தாங்கள் சந்தித்ததாகவும் சார்ள்ஸ் பிபிசியிடம் கூறினார்.

கே.பி. இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கூறப்படுவதை சார்ள்ஸ் ஒப்புக்கொண்டர்.

இலங்கை அரசாங்கத்துடைய ஆணையின் கீழ் கே.பி. இருப்பதாக கூறலாம், ஆனாலும் கே.பி. அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறமுடியாது என்று சார்ள்ஸ் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, புலம்பெயர் விடுதலைப்புலிகளின் அனுதாபிகள் இலங்கை வந்து சென்றதை இலங்கையின் ஊகடத்துறை அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி செய்துள்ளார்.

'' அனைவரையும் அரவணைக்கும் இலங்கை அரசின் அரசியல் வழிமுறையின் ஒரு அங்கம்தான் இந்த முயற்சி என அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

Read more...

>> Monday, June 28, 2010


ஐ நா குழுவுக்கு இலங்கை எதிர்ப்பு


ஐ நா வின் தலைமைச் செயலர் அமைத்துள்ள குழுவை இலங்கை எதிர்க்கிறது
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த இறுதி கட்ட போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அமைத்துள்ள குழுவுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு மறைமுக செயற்திட்டம் உள்ளதாக இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்பாக ஐ நா வின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

புலிகளுக்கு புத்துயிர் எனப் புகார்

பான் கீ மூன் அவர்களின் இந்தச் செயற்பாடு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரூட்டும் ஒரு செயல் என இலங்கை அரசு முன்னர் வர்ணித்திருந்தது.


முள்ளிவாய்க்கால் மருத்துவமனையும் தாக்குதலுக்கு உள்ளானந்து
கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின் கடைசி ஐந்து மாதங்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் இறந்ததாக ஐ நா கூறுகிறது.

இந்த மூன்று உறுப்பினர்கள் குழுவை அமைப்பது தொடர்பான விடயம் கடந்த ஆண்டு மே மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்த போது ஜனாதிபதியுடன் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

நான்கு மாதங்களில் அறிக்கை

இந்தோனீசியாவின் மார்சூகி தாருஸ்மான் இந்த மூவர் குழுவுக்கு தலைவராக செயற்படுவார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூக்கா மற்றும் அமெரிக்காவின் ஸ்டீவென் ராட்னர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இந்த வல்லுனர் குழு தாங்கள் பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்களில் தமது பணியை முடிப்பார்கள்.

இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தவறுக்கு பொறுப்பு சுமத்தும் நடவடிக்கை குறித்து சர்வதேச அளவுகோள்களின் நடைமுறைகளுக்கு ஏற்க எப்படி முன்னெடுப்பது என்பது பற்றிய வழிமுறைகளை ஆராயும்.

இந்த குழுவின் பரிந்துரைகள், இது தொடர்பில் இலங்கை அரசு தமது வல்லுநர்களை கொண்டு விசாரிக்க முன்வருவதற்கு கொடுத்த உறுதிமொழியை காப்பாற்ற முன்வருமானால், அதற்கும் உதவியாக இருக்கும் எனவும் ஐ நா வின் அறிக்கை கூறுகிறது.

தங்களது செயற்பாடுகள் தொடர்பில் இந்த வல்லுநர் குழு இலங்கையிலுள்ள அதிகாரிகளுடனும் இணைந்து செயற்படும் என தாங்கள் நம்புவதாகவும் ஐ நா வின் தலைமைச் செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடும் எதிர்ப்பு


கடந்த ஆண்டு இலங்கை வந்த போது மஹிந்தவுடன் பான் கீ மூன்
இலங்கையில் நீடித்திருக்கக் கூடிய ஒரு அமைதி மற்றும் இணக்கப்பாட்டுக்கு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு யார் பொறுப்பு என்பது குறித்த விசாரணை அடிப்படையானது என்பது தொடர்பில் பான் கீ மூன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஐ நா வின் தலைமைச் செயலர் தனக்கு ஆலோசனை கூற அமைத்துள்ள இந்த குழுவானது தேவை இல்லாமல் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் ஒரு செயல் என்று கூறி இலங்கை அரசு தனது கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

தேவையில்லாத தலையீடு

முப்பது ஆண்டுகளாக நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகளை தோற்கடித்த பிறகு, இது தொடர்பாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ள நிலையில், ஐ நா வின் இந்த நடவடிக்கை தேவையற்றது என இலங்கை அரசின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

இலங்கை இறையாண்மையுள்ள ஒரு நாடு எனவும், தமது நாட்டில் சுதந்திரமான நீதி நிர்வாகம் இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ள அரசின் அறிக்கை, தமது நாடு தொடர்ந்து மனித உரிமைகளை பாதுகாத்தும் முன்னெடுத்தும் வருகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற ஒரு தலையீடாகவே ஐ நா வின் இந்த செயற்பாடு உள்ளதாகவும் கூறும் வெளியுறவு அமைச்சகம், இப்படியான நடவடிக்கைகள் மூலம் நாட்டில் இணக்கப்பாட்டை அரசு முன்னெடுத்து வரும் வேளையில் அதற்கு குந்தகம் விளைவிக்க சில சுயநல சக்திகள் செயற்பட வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

தெளிவின்மை

ஐ நா வின் தலைமைச் செயலர் அமைத்துள்ள இந்த வல்லுநர்கள் குழு அவருக்கு அலோசனை வழங்கும் வகையிலேயே உள்ளது என்பதும் அது விசாரணைகளை நடத்தும் ஒரு குழு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல இலங்கை அரசால் சில வாரங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள ஆணையம், எது குறித்து ஆராயும், யாரை விசாரிக்கும் என்பதும் கூட தெளிவில்லாமலேயே இருக்கின்றது.

Read more...


புத்தா பார் உணவு விடுதி



'புத்தா பார்': இலங்கை பிரதமர் கவலை



புத்தா பார் என்ற பெயரில் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் அமைத்து இயங்கும் உணவு விடுதிகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புத்த மதத்தை அவமதிப்பது போன்ற விஷயங்கள் இந்த உணவு விடுதிகளில் நடப்பதாகத் தெரிவித்து அது பற்றி கூடுதல் விபரங்களைத் திரட்டச் சொல்லி தங்களுடைய தூதரகங்களுக்குப் இலங்கைப் பிரதமர் பணித்துள்ளார்.

பாரீஸ் நகரில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த புத்தா பார் உணவு விடுதிகளுக்கு, துபாய், நியூயார்க், எகிப்தின் ஷரம் அல் ஷெய்க் போன்ற ஊர்களிலும் கிளைகள் இருக்கின்றன.

இந்த உணவு விடுதி ஒவ்வொன்றிலும் புத்த பிரானின் பெரிய உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புத்தர் சிலை முன்பு வாடிக்கையாளர்கள் மது அருந்துகின்றனர் நடனம் ஆடுகின்றனர் என்றெல்லாம் தான் கேள்விப்பட்டது தொடர்பில் இலங்கைப் பிரதமர் கவலை வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது பற்றி இலங்கைத் தூதரங்கள் கூடுதல் விபரம் சேகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏகான் பாடல் வீடியோ சர்ச்சை

இலங்கையின் அரசாங்கம் தங்களது நாட்டின் பெரும்பான்மை மக்களது மதமான பௌத்த மதத்தின் உணர்வுகளுக்கு குரல் கொடுப்பதில் முனைப்பாய் இருப்பதாய்த் தெரிகிறது என கொழும்பிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அண்மையில் சர்வதேச ராப் இசைக் கலைஞர் ஏகோன் இலங்கையில் நடத்தவிருந்த நிகழ்ச்சி ஒன்று ரத்தாக இலங்கை அரசு காரணமாக இருந்தது.

ஏகோனின் பாடல் வீடியோ ஒன்றில் புத்தர் சிலை அருகில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் இளைஞர் யுவதிகள் கும்மாளம் போடுவதாக காட்சி அமைந்திருந்தது அரசாங்கத்தின் கோபத்துக்கு காரணம்.

Read more...



உலகக் கோப்பை கால்பந்து
உலகக் கோப்பை-இங்கிலாந்து தோல்வி



தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
ஞாயிறன்று இடம்பெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி இங்கிலாந்து அணியை 4-1 என்கிற கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் ஜெர்மனி அணியின் ஆதிக்கம் தொடக்கம் முதலே இருந்தது.

ஆட்டத்தின் இருபதாவது நிமிடத்தில் ஜெர்மனி கோல்கீப்பர் நோயர் பந்தை தனது பக்கத்திலிருந்து ஓங்கி உதைக்க அது மிக அதிக தூரம் பறந்து இங்கிலாந்து கோலை நோக்கி வந்தது.

அந்த பந்தைப் பிடிக்க இங்கிலாந்து கோல்கீப்பர் ஜேம்ஸ் முன்னேறி வந்தபோது ஜெர்மன் வீரர் குளோஸ் முந்திப் பாய்ந்து வந்து பந்தை கோலுக்குள் இலாவகமாகத் தட்டிவிட்டு ஜெர்மனியின் முதல் கோலைப் போட்டார்.

ஜெர்மனியின் அடுத்த கோலை போட்டவர் பொடொல்ஸ்கி.

இடைவேளைக்கு முன்னர் இங்கிலாந்து அணி ஒரு கோல் போட 2-1 என்கிற நிலை ஏற்பட்டது.

பின்னர் இங்கிலாந்து அணி ஒரு கோலை அடித்ததாக கோரியது நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது.

எனினும் ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஜெர்மனி மேலும் இரண்டு கோல்களை அடிக்க இறுதியில் 4-1 என்கிற கணக்கில் ஜெர்மனி வென்றது.

Read more...


நெல் விவசாயி


விலைவீழ்ச்சி- விவசாயிகள் கவலை


இலங்கையில் அண்மைக் காலங்களில் நெல்லின் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக நியாய விலைக்கு சந்தைப்படுத்தல் வாய்ப்பின்றி சிரமப்படுவதாக விவசாயிகள் பரவலாக புகார் தெரிவிக்கின்றார்கள்.
ஒரு கிலோ நெல்லின் அரச நிர்ணய விலை 28 ரூபாய் 30 சதம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தனியார் துறையினரால் 20 முதல் 22 ரூபாய்க்கே நெல் கொள்வனவு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அநேகமான விவசாயிகள் தமது அறுவடையை சந்தைப்படுத்த இயலாதநிலை மட்டுமன்றி களஞ்சிய வசதிகள் கூட இன்றி சிரமப்படுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பெரும் போகத்தின் போது அறுவடை செய்யப்பட்ட நெல் 40 முதல் 45 சத வீதமே இது வரை சந்தைப் படுத்தப்பட்டுள்ளதாக வவுணதீவு பிரதேச கமநல சேவைகள் குழுவின் செயலாளரான கே.ரத்னசிங்கம் கூறுகின்றார்.

இதே வேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர் நோக்கும் இந்தப் பிரச்சினை குறித்து தான் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகக் கூறுகின்றார்.

எதிர் வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது விவசாயிகளின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

இதற்கிடையில் இப்பிரச்சினைகளை உடன் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரை ஜனாதிபதி பணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...



தமிழ்ச் செம்மொழி மாநாடு நிறைவு


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
இலங்கைத் தமிழர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கேற்ற முனைப்பான முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற உலகத் தமி்ழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்துள்ளார்.
மேலும், தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளித்திட உரிய சட்டம் இயற்றப்படும் என்றும் அந்த மாநாடடில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கோவை நகரில் கடந்த 23-ம் தேதி துவங்கிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 23-ம் தேதி மாலை நிறைவடைந்தது. நிறைவு விழா நிகழ்ச்சியில் இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார். இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் உட்பட மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.

சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு


சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது

மாநாட்டை ஒட்டி, சிறப்பு அஞ்சல் தலைகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா வெளியிட முதலமைச்சர் கருணாநிதி பெற்றுக் கொண்டார்.

பின்னர் அந்த விழாவில் நிறைவுரையாற்றிய முதலமைச்சர் கருணாநிதி, இலங்கைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் நடைபெற்ற மாநாட்டு ஆய்வரங்க அமைப்புக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், பொது மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் சில தீர்மானங்கையும் அறிவிப்புக்களையும் வெளியிடுவதாக அறிவித்தார்.

அதன்படி, தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்றப்படும் எனவும், தமிழை மத்தியில் ஆட்சிமொழியாக்க மத்திய அரசுக்குக் கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.

பாடத்திட்டத்தில் செம்மொழி

தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழி ஆக்கப்பட வேண்டும் என்ற கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர், அதை நிறைவேற்ற அலுவலர்களும் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இனி, பாடத்திட்டத்திலும் செம்மொழி இடம் பெறும் என அவர் அறிவித்தார்.

Read more...

>> Tuesday, June 22, 2010


பிரான்ஸ் அணியில் பிரச்சினை


பயிற்சியாளர் ரேமண்ட் டொமினிக்கும் வீரர் அனேல்கா தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது
தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுவரும் பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கும் அணியின் நிர்வாகிகளுக்கும் இடையில் எழுந்துள்ள ஒரு தகராறு பிரான்ஸில் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டு அணியின் வீரரான நிக்கோலா அனேல்கா தமது அணியின் பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற அனுமதிக்கப்படாமல் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணி 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது.

அந்தப் போட்டியின் இடைவேளையின் போது நிக்கோலா அனேல்கா தமது பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதை அணியில் இருந்த யாரோ ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்து விட்டார்கள் என்கிற புகார் தற்போது எழுந்துள்ளது.

தனது செயலுக்காக அனேல்கா மன்னிப்பு கோர வேண்டும் என பிரெஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ழான் பியர் எஸ்கலே கூறியிருந்தார். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று அனெல்கா கூறிவிட்டார்.

ஆட்டத்தின் இடைவேளையின்போது அவர் பேசிய வார்த்தைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என பிரெஞ்சு கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அனேல்காவை பிரான்ஸ் அணியின் தலைவரான பேட்டிஸ் எவ்ரா கண்டிக்கவில்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

தனது அணியில் உள்ள துரோகி ஒருவரே உள் விடயங்களை வெளியே தெரிவித்துவிட்டார் என்று எவ்ரா கூறியுள்ளார்.

தமது அணியின் உறுப்பினர் ஒருவர் போட்டியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது பயிற்சிகளில் ஈடுபட பிரெஞ்சு வீரர்கள் மறுத்துள்ளனர்.

உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையின் அணியினர் பயிற்சியில் ஈடுபட மாட்டோம் எனக் கூறியுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாதது என பிரெஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் மேலாண் இயக்குநர் கூறியுள்ளார்.


இது ஒரு மோசடி, பிரான்ஸுக்கு ஏற்பட்டுள்ள ஒரு அவமானம். இந்நிலையில் தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை.


பிரெஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் மேலாண் இயக்குநர்

பிரெஞ்சு வீரர்களின் நடத்தை உலகத்தில் அனைவரும் பார்த்து சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது என்று என்று அந்நாட்டின் பத்திரிகைகள் கடுமையாகச் சாடியுள்ளன.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பிரஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சரை அங்கே தொடர்ந்து தங்கியிருந்து நிலைமையைச் சீர்செய்யும்படி பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோசி பணித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு அணியின் பயிற்சியாளர் காரணம் என்று ஒரு சாராரும், நாட்டின் கால்பந்து சம்மேளனத்தின் அணுகுமுறையே காரணம் என்று இன்னொரு சாராரும் கூறிவருகின்றனர்.

எது எப்படியிருந்தாலும் பிரெஞ்சு அணியின் மானம் கப்பல் ஏறியுள்ளது என்பது உண்மை.

அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றால் அன்றி இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் நீடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

Read more...



திமிங்கல வேட்டை: சர்வதேச கூட்டம்


ஜப்பானியர்கள் தடையை மீறி தொடர்ந்து திமிங்கல வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்


திமிங்கல வேட்டை கட்டுப்பாட்டு சர்வதேச ஆணையத்தின் வருடாந்த கூட்டம் மொரொக்கோ நாட்டின் அகதிர் நகரில் நடக்கிறது.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திமிங்கலம் பிடிக்கும் தொழில்துறையை ஒழுங்கு செய்யக்கூடிய ஒரு ஒப்பந்தம் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

திமிங்கலம் வேட்டையில் ஈடுபடும் நாடுகளும், திமிங்கலம் பிடிக்கப்படுவதை எதிர்க்கும் நாடுகளும், சுற்றாடல் பேணல் ஆர்வலர் குழுக்களும் இது பற்றி விவாதிக்கின்றன.

திமிங்கல வேட்டை உலகில் முற்றும் முழுதுமாக முடிவுக்கு வர வேண்டும் என்று பிரிட்டன் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் வேறு பல நாடுகளும் விரும்புகின்றன.

ஆனால் திமிங்கலங்கள் பிடிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவது என்பது அரசியல் ரீதியில் சாத்தியமா என்ற கேள்வியை இவர்கள் எதிர்நோக்குகின்றனர். முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியம் இல்லை என்றே கூட சில நாடுகளும், கிரீன் பீஸ், வொர்ல்ட் வைல்ட்லைஃப் ஃபெடரேஷன் உள்ளிட்ட பசுமைக் குழுக்களும் அறிவித்துள்ளன.

மாறாக ஜப்பான் வேட்டையாடும் திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும், திமிங்கல வேட்டையின் சுற்றாடல் தாக்கங்கள் பற்றி தொலைநோக்கு பார்வையோடு அணுக வேண்டும், திமிங்கல இறைச்சி வர்த்தகம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கங்களில்தான் ஒப்பந்தம் ஒன்றை எட்ட தாங்கள் விரும்புவதாக இவை தெரிவிக்கின்றன.


திமிங்கல வேட்டையை எதிர்த்து ஆஸ்த்ரேலியாவில் நடந்த நூதன போராட்டத்தில் திமிங்கல வடிவத்தில் மனிதர்கள் குழுமி நிற்கின்றனர்



இந்த விஷயங்கள் நடந்தாலே தற்போதைய நிலவரத்தை விட கணிசமான அளவில் மேம்பட்ட சூழல் ஒன்று ஏற்படும் என்று இவை கருதுகின்றன.

ஆனால் இந்த வாதத்தைக் கேட்டு மற்ற ஆர்வலர்கள் கவலையும் அச்சமும் வெளியிடுகின்றனர். இது போல் பேசினால் கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக உலகளாவிய அளவில் அமலில் இருந்துவரும் திமிங்கல வேட்டை மீதான நிறுத்திவைப்பு உடன்பாடு அகன்றுபோகும், ஐஸ்லாந்து, ஜப்பான் நோர்வே போன்ற நாடுகள் தற்போது திமிங்கல வேட்டையில் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இந்நிலையில் இந்த யோசனைகள் ஒப்பந்தமாக மாறுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

கூட்டத்தில் பேச்சுவார்த்தைகள் காரசார வாக்குவாதங்களுக்கு பஞ்சமில்லாமல் இறுதிக்கட்டம் வரை இழுத்துக்கொண்டு போகும் என்றே தெரிகிறது.

Read more...


ப.சிதம்பரம்


போபால்: கூடுதல் நிவாரணம் பரிந்துரைப்பு


இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் 1984 ஆம் ஆண்டு நடந்த விஷவாயு பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது உட்பட பல நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
இந்த விபத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியிருந்தனர்.

இந்த விஷவாயு கசிவுக்கு காரணமான அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் அண்டர்சன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதை அமைச்சர் மட்டத்திலான குழு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் தேடப்படும் நபர்களை ஒருவரிடம் மற்றவர் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் உள்ளது.

ஆனாலும் ஆண்டர்சனை நாடு கடத்த வேண்டும் என்று இதுவரை இந்தியாவால் விடுக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் அமெரிக்காவால் புறந்தள்ளப்பட்டுவிட்டன.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நஷ்டஈடுகளைத் தாண்டி புதிதாக வாழ்வாதார உதவிகளுக்கென நிதி ஒதுக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக இந்த ஆய்வுக் குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Read more...



தமிழக காவல்துறை டி.ஜி.பி. லத்திகா சரண்
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் கைது



தமிழகத்தின் திருச்சி நகரில் விடுதலைப் புலிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீசார் கூறுகின்றனர்.
அண்மையில் தமிழகத்தில் கைதான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவின் தமிழகத் தலைவர் சிரஞ்சீவி மாஸ்டர் கொடுத்த தகவல்களின் பேரில் இப்போது மூவர் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் அமோனியம் நைட்ரேட்டை 2007 ஆம் ஆண்டு இலங்கைக்கு கடத்தியதாகவும் பின்னர் கண்ணி வெடி தயாரிப்புக்கு தேவைப்படும் உலோக உருளைகளை கடத்தியதாகவும் சிரஞ்சீவி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இலங்கைக்குத் தப்பிச்சென்றிருந்தாலும் போலீசாருக்கு தெரியாமல் இந்தியா வந்து போய்க்கொண்டிருந்த அவரை அண்மையில் காஞ்சிபுரத்தில் கைது செய்ததாகவும், பின்னர் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டதாகவும் தமிழக காவல்துறை கூறுகிறது.

சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. லத்திகா சரண் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "சிரஞ்சீவி மாஸ்டர் அளித்த தகவல்களின் விளைவாக சிவா, தமிழ், செல்வம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர், திருச்சியில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது வெடிகுண்டுகள் செய்ய பயன்படும் 4,900 சாதாரண டெட்டனேட்டர்கள் மற்றும் 430 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இந்தியாவில் நாச வேலைகள் எதுவும் செய்ய திட்டமிடவில்லை என்றும், இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காகவே வெடி பொருட்களை சிறிது, சிறிதாக வாங்கி பதுக்கி வைத்திருந்தததாகவும், தமிழக கடலோர பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால், இந்தப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முடியவில்லை, எனவே அப்பொருட்களெல்லாம் திருச்சியிலேயே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் லத்திகா சரணின் அறிக்கை கூறுகிறது.

தவிரவும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ரயில் தண்டவாள தகர்ப்பு சம்பவத்திற்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், இந்நிலையில் கைதான 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

Read more...

>> Monday, June 21, 2010


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தச் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்


1986 சம்பவம்: பாதிக்கப்பட்டோர் பேட்டி


இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவுக்கு எதிராக குற்றம்சாட்டப்படும் 1986 சென்னை துப்பாக்கி சூட்டு கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழோசைக்கு பேட்டி தந்துள்ளனர்.

பேட்டி

சமீபத்தில் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் வந்திருந்த இலங்கை அமைச்சரும் இ.பி.டி.பி. கட்சித் தலைருமான டக்ளஸ் தேவானந்தாவை ஒரு கொலை வழக்கு சம்பந்தமாக கைதுசெய்ய வேண்டும் என்று தமிழகத்தில் குரல்கள் எழுந்திருந்தன.

ஆனால் இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த திருநாவுக்கரசு என்ற இளைஞரின் குடும்பத்தினர், "இது தொடர்பில் கடந்த பல ஆண்டுகளாக எவ்வித நீதி விசாரணையும் நடைபெறவில்லை, கடவுள்தான் நீதி வழங்க வேண்டும்." என்று கூறுகின்றனர்.

சென்னையில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் டக்ளஸ் தேவானந்தா முக்கிய பங்காற்றினார் என்று குற்றம் கூறப்படுகிறது.

அந்த சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், வேறு சிலர் காயமடைந்து இருந்தனர்.


கடந்த 24 ஆண்டுகளாக யாரும் எவ்வித உதவியும் எங்களுக்கு செய்யவில்லை. இப்போது வழக்கு போடுவதால் எங்களுக்கு எவ்வித பயனும் இல்லை.


சம்பவத்தில் கொல்லப்பட்ட திருநாவுக்கரசுவின் சகோதரர் நடராஜன்

பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட வேண்டும் என்று கோரும் வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்த சூழலில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த குருமூர்த்தி என்பவர் தமிழோசையிடம் கூறும்போது, "இந்த துப்பாக்கிச் சூட்டில் தனக்கு கையில் காயமேற்பட்டது, அதிலிருந்து கடினமான வேலைகள் செய்வது இயலாததாக உள்ளது" என்றும் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஒவ்வொரு முறை வழக்கு விசாரணை வரும் போதும், நீதிமன்றத்தில் ஆஜராகும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இலங்கையில் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று ஒரு கட்டத்தில் தமக்கு சொல்லப்பட்டு வழக்கு முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Read more...


சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு



பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நிபுணர் நாகசாமி செவ்வி

தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளன.

கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் ஆய்வாளரும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார் .

தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிரத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாவது ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.

இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பதுபோல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.

Read more...



இணையத்தை கட்டுப்படுத்துவது யார்?


அமெரிக்க இணையத்தை கட்டுப்படுத்துவது யார் என்ற விவாதம்
அமெரிக்காவில் இணைய பாவனையின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது யார் என்பது குறித்து தேசிய மட்டத்திலான விவாதம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இணையத் தொடர்பை வழங்கும் வணிக நிறுவனங்கள் நிர்ணயிப்பதை தடுக்கும் நோக்கில், இணைய பாவனைக்கான அதிவேக தொடர்புகளை வழங்கும் நிறுவனங்களை ஒருங்குபடுத்த அமெரிக்க அரசு விரும்புகிறது.

இன்னும் 10 வருடங்களில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கும் திட்டம் ஒன்றை அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் கொண்டிருக்கிறது.

அத்துடன், அனைத்து இணைய தளங்களையும் சமமாக அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், யார் எதனைப் பார்ப்பது என்பதை கேபிள் இணைப்புக்களை வங்கும் நிறுவனங்கள் அல்லது வயர்லெஸ் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அது விரும்புகிறது.



இணையங்கள் வகைப்படுத்தப்படும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், ''என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது'' என்பதை இணைய விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடையாதுபோகும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் உரிமைகளுக்கான நிறுவனமான 'பப்ளிக் நொலேட்ஜ்'' ,அரசாங்கம் இணையத்தை தனது கட்டுப்பாட்டிலே எடுப்பதற்கு ஆதரவு வழங்குகிறது.

இணையத்தை அணுகுவதற்கான அனுமதி குறித்த முடிவுகள் வணிக நிறுவனங்களிடம் போய்விடக்கூடாது என்கிறார் ''பப்ளிக்நொலேட்ஜ்'' நிறுவனதத்தின் சட்ட இயக்குனரான ஹரோல்ட் ஃபெல்ட்.

ஆனால், சி ரி ஐ ஏ எனப்படுகின்ற அமெரிக்க வயர்லெஸ் அசோசியேசனைச் சேர்ந்த ஸ்டீவ் லார்ஜண்ட் அவர்கள், அரசாங்க தலையீடு ''முதலீட்டையும், துறைசார் புதிய கண்டுபிடிப்புக்களையும்'' பாதிக்கும் என்று கூறுகிறார்.

அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தும் திட்டம் குறித்த மறு ஆய்வு சட்டச் சவால்களால் சிக்கலுக்குள்ளாகும் போல் தெரிகிறது.

நீதிமன்றமும், அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றமுந்தான் அமெரிக்க இணைய விநியோகத் துறையை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு சேய்ய வேண்டிவரும்.

Read more...


கணவரைத் தேடும் உதா


உறவுகளை தேடும் உள்ளங்கள்


இலங்கையின் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் காணாமல் போனதாக கூறபப்டுபவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்று மட்டக்களப்பு நகரில் நடை பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது உறவினர்கள் காணாமல் போன சம்பவங்கள் மற்றும் அதற்கான பின்னிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாய் மூலமும், எழுத்து மூலமும் எடுத்துக் கூறி அவர்களை கண்டு பிடித்து தருமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்கு செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் நூற்றுக்கும் அதிகமானவர்களின் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான பொன் செல்வராஜா கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் மக்கள் காணாமல் போன சம்பவங்களுக்கு பாதுகாப்பு படையினரும், அந்த மாகாணத்தில் செயற்படும் சில ஆயுதக் குழுக்களுமே காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

Read more...




பெண் புலி உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பு


முன்னாள் பெண் போராளிகளுக்கு ஆடைத் தொழிற்சாலையில் வேலை
இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாகிய 400 பெண்களுக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
இதற்கென அவர்களுக்கு ஆறுமாத காலம் தையல் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் ஞாயிறன்று கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள்.

பம்பைமடுவில் உள்ள சரணடைந்த பெண் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 300 பேரும், பூந்தோட்டத்தில் உள்ள பெண்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து 100 பேருமாக 400 பேர் இவ்வாறு இந்த வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இவர்களுக்கு உணவுடன் கூடிய தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...


போர்வேளையில் வன்னிக்கு உணவு எடுத்துச் சென்ற ஐ.நா வாகனம் ஒன்று(ஆவணப்படம்)


கிளிநொச்சியில் ஐ.நா அலுவலகம்


விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர்களின் அரசியல் தலைநகரமாக கருதப்பட்ட கிளிநொச்சி நகரப்பகுதியில் ஐ.நா அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பேரழிவுக்கு உள்ளாகிய இந்த நகரப்பகுதியிலும் அதன் மாவட்டத்திலும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருவதையடுத்து பல்வேறு அரச அலுவலகங்களும் சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும் அங்கு செயற்பட முன்வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்து வருகின்ற ஐநா சபையின் முக்கிய அலுவலகங்களும் அங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன.

மீளக்குடியமர்ந்துள்ள குடும்பங்களுக்கான நிவாரண உணவுப் பொருட்களை பங்கீட்டு அடிப்படையில் இலவசமாக வழங்கி வருகின்ற உலக உணவுத் திட்டம், உணவு மற்றும் விவசாய நிறுவனம், குழந்தைகளின் நலன்களுக்கான ஐநாவின் சிறுவர் நிதியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடங்கிய ஐ.நாவின் அலவலகமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நாவின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கின்றார்.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கடும் மோதல்களையடுத்து, அங்கு செயற்பட்டு வந்த ஐநாவின் அலுவலகங்கள் மூடப்பட்டதாகவும், அந்த அலுவலகங்கள் இப்போது திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

Read more...

>> Saturday, June 19, 2010



துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை பெறுவதை ரொனீ லீ கார்டனர் தெரிவுசெய்திருந்தார்


துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை


அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மரண தண்டனை விதிப்பது சட்டத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்ட 1976ஆம் ஆண்டுக்குப் பின் அங்கு இவ்வகையில் நிறைவேற்றப்படும் மூன்றாவது மரண தண்டனை இது.

இரண்டு கொலைக் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு இருபத்தைந்து வருடங்களை சிறையில் கழித்திருந்த ரொனீ லீ கார்டனருக்கு, அவர் கேட்டுக்கொண்ட வகையிலேயே தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மரண தண்டனை விதிக்கப்படுபவர்கள், தங்களுக்கு எவ்விதமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ள இடமுண்டு.

துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு இடமிருப்பது அமெரிக்காவில் இந்த ஒரு மாகாணத்தில் மட்டும்தான்.

அங்கேயேகூட பதினான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இப்போது இந்த முறையில் ஒரு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல மாகாணங்களில் விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றுவது வழக்கம்.

கார்டனருக்கு செய்யப்பட்ட வகையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றுவதென்பது 'வைல்ட் வெஸ்ட் ஜஸ்டிஸ்' என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற, கவ் பாய் படங்களில் வருகிற மாதிரியான தண்டனை என்று விமர்சகர்கள் வருணித்துள்ளனர்.

Read more...


ஜாகிர் நாயக்

ஜாகிர் நாயக்குக்கு விசா மறுப்பு



இந்திய முஸ்லிம் பிரச்சாரகரான ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.
ஏற்க முடியாத நடத்தை என்று தாம் கருதும் நடத்தை உடையவர் ஜாகிர் நாயக் என்று காரணம் காட்டி விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஜாகிர் நாயக் லண்டனிலும், வடக்கு இங்கிலாந்திலும் பல உரைகளை நிகழ்த்தவிருந்தார்.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாம் குறித்து ஆளுமை கொண்டவராக அங்கீகரிக்கப்பட்டவர் என்றும், ஆனால் ஏனைய மதங்களை நிந்திக்கும் வகையிலான கருத்துக்களை வெளளியிடுபவர் என்றும் ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

இந்த நாட்டின் பொது நலனுக்கு பொருத்தமற்றவர்கள் இந்த நாட்டுக்குள் நுழைய தாம் அனுமதிக்க மாட்டோம் என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

Read more...



தீக்கிரையான திரை /தீவைக்கப்பட்ட திரை அரங்கம்

திரையரங்குக்கு தீ வைக்கப்பட்டது



இலங்கையின் மட்டக்களப்பில் தென்னிந்திய தமிழ் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ''ராவணம்'' திரைப்படம் திரையிடப்படவிருந்த அரங்கத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள சினிமா தியேட்டர்களின் உரிமையாளர்களுக்கு "சுதந்திர இலங்கையின் தமிழர்கள் " எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அநாமதேய துண்டுப் பிரசுரமொன்றில் 18ஆம் திகதி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தென்னிந்திய தமிழ் சினிமா எதிர்ப்பு வாரம் அனுட்டிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான துண்டுப் பிரசுரம் வெளியாகியுள்ள நிலையில் "ராவணன்'' தமிழ் திரைப்படம் திரையிடப்படவிருந்த மட்டக்களப்பு "சாந்தி" திரையரங்கின் திரை இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவமானது சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், தாக்கத்தையும் எற்படுத்தியுள்ளதாக சினிமா துறையுடன் தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றார்கள்.



தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில், "ஐபா" என்ற இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடைபெறவிடாமல் தடுக்க முயற்சித்த இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்த முற்பட்ட தென்னிந்திய தமிழ் சினிமா சமூகத்தினருக்கு எதிரப்பைத் தெரிவிக்கும் வகையிலும், இந்திய சினிமா வியாபாரம் இலங்கையில் தங்கியுள்ளது என்பதை நிருபிக்கவும் இந்த ''தென்னிய தமிழ் சினிமா எதிரப்பு வாரம்'' பிரடகனப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read more...


இராணுவ அணிவகுப்பில் இலங்கை ஜனாதிபதி

சர்வதேச அழுத்தம் தவறு: மஹிந்த



இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணை வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் தருவதை இலங்கை ஜனாதிபதி விமர்சித்துள்ளார்.
இலங்கையில் பாதுகாப்புப் படையினர் விடுதலைப் புலிகள் இடையில் நடைபெற்ற யுத்தத்தில் சென்ற வருடம் நடந்த இறுதிக் கட்ட மோதல்களின்போது போர்க்குற்றங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் தந்துவருகின்றது.

விடுதலைப் புலிகளின் தோல்வியடைந்த தினத்தின் முதலாம் ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக நடந்த இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த மோதலின்போது பொதுமக்கள் ஒருவரும் கொல்லப்படவில்லை என்றும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக மட்டுமே அத்தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்றும் கூறியுள்ளார்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடர்பில் எழுந்துள்ள மனித உரிமை விவகாரங்களைப் பரிசீலிப்பதற்கான விசேட ஐ.நா. நிபுணர் குழு இன்னும் ஒரு சில நாட்களில் ஏற்படுத்தப்படும் என ஐ.நா.வின் மூத்த அதிகாரி தெரிவித்திருந்த மறுநாள் ஜனாதிபதியின் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Read more...

>> Friday, June 18, 2010


அர்ஜெண்டினா வீரர் கொண்சாலோ

அர்ஜெண்டினா அபார வெற்றி



தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றுள்ளது. தகுதிச் சுற்றுப் போட்டியில் தென் கொரிய அணியை 4-1 என்கிற கணக்கில் அர்ஜெண்டினா வென்றது.
சாக்கர் சிட்டி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கொண்சாலோ ஹிகுயேன் அர்ஜெண்டினா அணிக்காக மூன்று கோல்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஆட்டத்தின் 16 ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கோல் அடிப்பதை தடுக்க முயன்ற தென் கொரிய வீரர் பார்க் சூ யங்கின் கால்களில் பட்ட பந்து கோல் வலைக்குள் செல்ல எதிர்பாராத வகையில் அர்ஜெண்டினா அணிக்காக தென் கொரிய வீரர் ஒரு கோலை போட்ட நிலை ஏற்பட்டது.

வியாழக்கிழமை இடம் பெற்ற மற்றொரு ஆட்டத்தில் கிரேக்க நாட்டு அணி நைஜீரிய அணியை 2-1 என்கிற கனக்கில் வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் கிரேக்கம் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

இந்த ஆட்டத்தின் முதல் கோலை நைஜீரிய வீரர் ஊச்சே அடித்தாலும் அந்த முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் இறுதியில் நைஜீரியா தோல்வியை தழுவியது.

Read more...


வறண்ட நிலம்

இலங்கையில் ஈரவலையம் குறைகிறது



இலங்கையில் ஈர வலையம் குறைந்து உலர் வலையம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் ஈர வலையத்துக்குள் உலர் வலையம் உட்புகுந்து வருகின்றது என கொழும்பு பல்கலைகழகத்தின் புவியியல் துறை நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புத்தளம், நீர்கொழும்பு, மாத்தளை, பதுளை, நுவரேலியா, அம்பாறை உட்பட பல இடங்களில் ஈர வலையம் குறைந்து வருகின்றது என அந்த ஆய்வு கூறுகிறது.

ஈர வலையம் குறைந்து வருவது பல வகையான தாக்கங்களை ஏற்படுத்தும் என கிழக்கு பல்கலைகழகத்தின் தாவரவியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் தங்கமுத்து ஜெயசிங்கம் கூறுகிறார்.

நாட்டின் பல்லினத்தன்மை இதனால் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகும் என்று அவர் கூறுகிறார்.

பல்லிதன்மை கூடியப் பிரதேசமாக ஈரவலையப் பகுதியே சுற்றுச் சூழல் ஆர்வலர்களால் கருதப்படுகிறது.

இலங்கைகுரிய சில சிறப்பு வகையான தாவரங்களும், விலங்கினங்களும் மிகவும் அதிகமாக இந்த ஈரவலையப் பகுதியிலேயே இருக்கின்றன எனவும் அவர் சுட்டிகாட்டுகிறார்.

Read more...


ஒரு வாரத்தில் ஆலோசனைக் குழு


லின் பாஸ்கோ
இலங்கையில் முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ நாவின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைக்கும் பணி அடுத்த வாரத்தின் முதல் பகுதியில் முடிவடையக் கூடும் என ஐ நா வின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
அந்நட்டு அரசின் எதிர்ப்பையும் மீறி இந்தக் குழு அமைக்கப்படுகிறது

இலங்கையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் மனக்கசப்பு ஒரே இரவில் மறையாது என்று ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்திருந்த அவர் தனது விஜயத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த போதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

பல தசாபதங்களாக ஏற்பட்டிருந்த காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளுக்கான பெரிய முயற்சி செய்யப்பட வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது எனவும் லின் பாஸ்கோ கூறியுள்ளார்.

போர் முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டியது முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். போர் எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொண்டு அதை களையும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் லின் பாஸ்கோ கூறியுள்ளார்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து நம்பகத்தன்மையுடன் கூடிய ஒரு விசாரணை தேவை என ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் தொடர்ந்து கூறி வருவதையும் லின் பாஸ்கோ சுட்டிக் காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளதை ஐ நா கவனத்தில் எடுத்துள்ளது எனவும் கூறிய லின் பாஸ்கோ அரசு விரும்பினால் அந்த ஆணையத்துக்கு ஆதரவளிக்கவும், உதவுவதற்கும் ஐ நா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன


வட இலங்கையில் லின் பாஸ்கோ(பழைய படம்)

இலங்கையின் வடக்கே போரினால் இடம் பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களுக்கு உண்மையாகவே பல பிரச்சினைகள் இருக்கின்றன எனவும் லின் பாஸ்கோ கூறியுள்ளார்.

பல மாதங்கள் முகாம்களில் இருந்துவிட்டு தங்களது வீடுகளுக்கு திரும்பும் போது அங்குள்ள நிலைமைகள் மக்களுக்கு கவலையளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“வீடுகளுக்கு கூரைகளே இல்லாத நிலையும், அல்லது வீடுகளே இல்லாத நிலையையும் காண்பது மிகவும் வேதனையான விடயம்” என்றும் லின் பாஸ்கோ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் கடுமையானவை என்றும், அதை அவர்கள் எழுப்புவதில் நியாயம் இருக்கின்றது எனவும் லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் உள்ளூர் அரசும், தேசிய அரசும் கடுமையாக செயற்பட்டு வருவதையும் தம்மால் காணக் கூடியதாக இருந்ததாகவும் லின் பாஸ்கோ கருத்து வெளியிட்டுள்ளார்.

Read more...

>> Thursday, June 17, 2010



இலங்கை வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க அரசுத்துறைச் செயலர் (ஆவணப்படம்)

இராஜதந்திரிகள் விஜயம்


இலங்கை அரசாங்கம் போரில் வெற்றிபெற்று ஒரு வருடம் கழிந்த நிலையில் அந்த நாடு எதிர்கொள்கின்ற சவால்களை விவாதிக்கும் வகையில் இந்த வாரத்தில் இலங்கைக்கு பல வெளிநாட்டு மூத்த இராஜதந்திரிகள் விஜயம் செய்கிறார்கள்.
ஐநாவின் மூத்த அதிகாரியான லின் பஸ்கோ மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான சிறப்புத்தூதுவரான யசூசி அகாசி ஆகியோர் வரவிருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகர்கள் இருவர் ஏற்கனவே இலங்கைக்கு வந்துவிட்டார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்ற ஒரு வருடத்தை கடந்த மாதம் இலங்கை பூர்த்தி செய்திருந்த நிலையில், இலங்கை அரசாங்கமும், விடுதலைப்புலிகளும் போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்களை செய்திருக்கலாம் என்று குற்றஞ்சாட்டி அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தொடர்ச்சியாக வெளியிட்ட அறிக்கைகள் இலங்கை அரசாங்கத்தை கடுமையாக கோபப்படுத்தியிருந்தன.

அப்படியான நடவடிக்கைகளில் தமது படையினர் ஈடுபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தது.

ஆனால், ''போர்க்குற்றங்கள் மற்றும் அக்கிரமங்கள்'' ஆகியவை குறித்த அமெரிக்க தேசிய பாதுகாப்புக் கவுன்ஸிலின் இயக்குனரான டேவிட் பிரஸ்மனும், அதிபர் ஒபாமாவின் மற்றுமொரு மூத்த ஆலோசகரான சமந்தா பவர் அவர்களும் ஏற்கனவே இலங்கையில் வந்தது தங்கியிருக்கிறார்கள் என்று திடீரென தெரியவந்துள்ளது.

அதிகாரிகளையும், சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து வருகின்ற அவர்கள், இலங்கையின் போர் நடந்த இடங்களுக்கும் விஜயம் செய்கிறார்கள்.

இலங்கை அரசாங்கம் போரின் போது கையாண்ட யுக்திகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்துவந்த அமெரிக்கா, அண்மைக்காலமாக, இலங்கையை ஊக்கம் தந்து திருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.

சில சர்வதேச விமர்சனங்களால் கவரப்படாமல், இலங்கை அரசாங்கத்தால், நியமிக்கப்பட்டுள்ள புதிய நல்லிணக்கக்குழு தனது பணியை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

அதற்கு எதிராக முத்த ஐநா அதிகாரிகள் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்று அழைப்புவிடுத்துவருகின்றார்கள்.

பல தடவைகள் தனது இலங்கைக்கான விஜயத்தை பின்போட்டு வந்த ஐநாவின் மூத்த அரசியல் அதிகாரியான லின் பாஸ்கோ அவர்கள் இறுதியாக புதனன்று இலங்கை வரவுள்ளார்.

இலங்கையில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டனவா என்பது குறித்த பொறுப்புக் சுமத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐநாவின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அவர்கள், இலங்கை விவகார நிபுணர்கள் குழு ஒன்றை நியமித்துள்ளார்.

''பொறுப்பு சுமத்தல்'' மற்றும் ''நல்லிணக்கம்'' என்ற இந்த இரண்டு பதங்கள்தான், அவற்றை வலியுறுத்தும் முறையே ஐநா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் போரின் பின்னரான இலங்கையில் எதற்கு முன்னுரிமை கொடுத்து ஆராய விழைவார்கள் என்பதற்கு ஒரு தடயமாகும்.

Read more...


சுவிஸ் வீரர் ஃபெர்ணாண்டஸ்

உலகக் கோப்பை ஸ்பெயின் தோல்வி



தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ஸ்பெயின் அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வியடைந்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், உலக ஆடவர் தரப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டின் அணி, 24 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாட்டு அணியால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பையை வெல்லக் கூடிய வாய்ப்பு ஸ்பெயின் அல்லது பிரேசிலுக்கு அதிகம் உள்ளது என்று பிரபல வீரர் பெலே கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குரூப் எச் பிரிவில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 52 ஆவது நிமிடத்தில் ஸ்விஸ் வீரர் ஃபெர்ணாண்டஸ் இந்த கோலை அடித்தார்.

இதே பிரிவில் மற்றொரு போட்டியும் இடம் பெற்றது. இதில் சிலி நாட்டு அணி ஹோண்டுரஸ் நாட்டு அணியை 1-0 என்கிற கணக்கில் வென்றது.

சிலி அணியின் பெய்ஸெயார் ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக இந்த கோலை அடித்தார்.

Read more...



போரில் சேதமடைந்த முள்ளிவாய்க்கால் மருத்துவமனை
பிர்ட்டன் அமைச்சர் அலிஸ்டர் பர்ட்

சுயாதீன விசாரணைக்கு ஆதரவில்லை



இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா மன்ற பொதுச்செயலருக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெற்காசிய விவாகாரங்களுக்கான பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக்குழு விவாதம் நடைபெற்ற போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.

அதே நேரம் இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த சுயாதீன விசாரணை நடைபெற வேண்டும் என்று எழும் கோரிக்கைகளை அவர் நேரடியாக ஆதரிக்கவில்லை.

விவாதத்தைத் துவக்கி வைத்து பேசிய தொழிற்கட்சி உறுப்பினர் சியோபன் மிக் டொனால்ட் அவர்கள், சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயங்களையும், சேனல் 4 இல் வெளியிடப்பட்ட வீடியோக்கள் போன்றவற்றை ஆதராம் காட்டிப் பேசினார். போர் குற்றங்கள் குறித்த ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




ஆனால் போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியதன் முதல் கடமை இலங்கை அரசுடையது என்று சர்வதேச சட்டம் கூறும் நிலையில் இது தொடர்பில் ஒரு விசாரணையை இலங்கை மீது திணிக்க முடியாது என்று அமைச்சர் அலஸ்டர் பர்ட் தெரிவித்தார்.

மேலும் போர் குற்றங்கள் தொடர்பாக அனைத்து தரப்புக்கும் எதிராக புகார் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொழிற்கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ் அவர்கள், இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்கள் குறித்த சாட்சியங்களை அழிக்கும் பணியைச் செய்ய ஒரு சீன நிறுவத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஊடக தகவல்கள் மூலம் தான் அறிந்ததாக கூறினார்.

தென் ஆப்பிரிக்க அரசின் இன வெறிக் கொள்கையை எதிர்க்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களை புறக்கணித்தது போல இலங்கைப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

Read more...



முல்லைதீவுப் பகுதியில் லின் பாஸ்கோ


ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலர் லின் பாஸ்கோ புதன்கிழமை பிற்பகல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் அங்கு நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைகள், புனரமைப்பு பணிகள் என்பவை தொடர்பாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார், போருக்கு பிறகு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அவருக்கு விளக்கியுள்ளார்.

வற்றாப்பளை. குமாரபுரம் பகுதிகளுக்குச் சென்று மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் நிலைமைகளையும், கண்ணிவெடி அகற்றும் பணிகளின் நிலைமைகளையும் நேரடியாகப் லின் பாஸ்கோ பார்த்தறிந்துள்ளார்.

வற்றாப்பளை பகுதியில் பொதுமக்களைச் சந்தித்த அவர் அவர்களது குறை நிறைகளைக் கேட்டறிந்ததுடன் குமாரபுரம் பகுதியில் இடம்பெறுகின்ற கண்ணிவெடி அகற்கும் பணிகள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளிடமும், எஃப்.எஸ்.டி கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினரிடமும் கேட்டறிந்து கொண்டார்.

எதிர்கட்சித் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் ஊடகத்துறையினரையும் லின் பாஸ்கோ சந்தித்து பேசவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.


இலங்கை ஜனாதிபதியுடன் லின் பாஸ்கோ
தனது முல்லைத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பிய ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலர், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளார்.

தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்த பொதுமக்கள், அழிவுக்குள்ளாகிய தமது வீடுகளைத் திருத்தவும், வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கவும் வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதிகளின் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தாங்கள் தொடர்ச்சியாகக் கவனித்து வருவதாகவும், தேவையான உதவிகளை அரசாங்கத்தின் ஊடாக வழங்கவுள்ளதாகவும் லின் பாஸ்கோ அந்த மக்களிடம் தெரிவித்துள்ளார்.

Read more...

>> Tuesday, June 15, 2010


படகு கவிழ்ந்து பயணிகள் பலி


இந்தியாவில் படகுகளில் அடிக்கடி அளவுக்கதிகமான கூட்டம் ஏறிவிடுவதுண்டு
இந்தியாவில் கங்கை நதியில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருபத்து ஐந்து பேரின் உடல்களை ஆற்றிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் பால்லியா நகரருகே ஒரு கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கையில் அப்படகு கவிழ்ந்தது.

30 பேர் வரைதான் பயணிகள் ஏறலாம் என்கிற இந்தப் படகில், இரு மடங்கு கூடுதலான பயணிகள் ஏறிச் சென்றிருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

பயணிகளில் நிறைய சிறார்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பதினேழு பேர் நீந்தி உயிர்பிழைத்துள்ளனர் என்றாலும், மேலும் பதினேழு பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை.

Read more...


இந்தியா நழுவவிட்டதா?


இரான் பாகிஸ்தான் எரிவாயுக் குழாய் திட்டம்
இரானிடமிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய்மூலம் எரிவாயு பெறும் திட்டத்தில் இந்தியா காட்டிய தயக்கங்கள் காரணமாக தனது எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை எட்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டதாகக் கூறமுடியுமா?
இரானிடமிருந்து எரிவாயுவை குழாய் மூலம் பாகிஸ்தானுக்கு வழங்கும் ஒரு திட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இரானிய அமைச்சர்கள் தற்போது கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, இரான் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளிடையே எரிவாயு குழாய்திட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் மூலம் இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கான எரிவாயுவை இரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என்றிருந்தது.

"இரானிடமிருந்து பாகிஸ்தான் வழியாகக் குழாய் மூலம் எரிவாயு பெறும் திட்டத்தில் இந்தியா காட்டிய தயக்கங்கள் காரணமாக தனது எரிசக்தி பாதுகாப்புத் தேவைகளை எட்டும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை இந்தியா இழந்துவிட்டதாகக் கூறமுடியாது. ஏனென்றால் பின்னர்கூட இந்தியா மீண்டும் இந்த ஒப்பந்தத்தை எட்ட முடியும்." என்று மத்தியக் கிழக்கு மற்றும் மேற்காசிய பிராந்திய வல்லுநர் பேராசிரியர் பி.ஆர்.குமாரஸ்வாமி கூறுகிறார்.


பேராசிரியர் குமாரஸ்வாமி
"இந்தியா, இரான் ஆகிய இருநாடுகளும் இதற்கான ஒப்பந்தத்தை 2005ம் ஆண்டிலேயே அறிவித்திருந்தாலும், எரிவாயு விலை குறித்த கருத்து வேறுபாடுகள் மற்றும் எரிவாயு குழாய் பாகிஸ்தான் ஊடாக வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்ற பிரச்சினைகளால் இந்த ஒப்பந்தத்தை முழுமைபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டது" என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இரானுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடாது என்று இந்தியா மீது அமெரிக்கா செலுத்திய நிர்ப்பந்தங்களும் இதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது என்று கூறும் குமாரஸ்வாமி, ஆனால் இதுவே ஒரு பெரிய காரணமல்ல என்று அவர் தெரிவிக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்த குழாய் பாதைக்கு பாகிஸ்தானால் பாதுகாப்பு கொடுக்கமுடியாத நிலை இருப்பதாக பல மட்டங்களில் கூறப்பட்டுவந்தது. "விலையைப் பற்றியும், பாதுகாப்பு குறித்தும் ஒரு முடிவு ஏற்படாத நிலையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமல்ல" என்று குமாரஸ்வாமி கூறுகிறார்.

Read more...


பாலியல் குற்றம்: சந்தேக நபர்கள் அடையாளம்



இலங்கையின் வடக்கே பெண்கள் இருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றச் சந்தேக நபர்கள் நான்கு பேர் அடையாளம் காணபபட்டுள்ளனர்.
கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கடந்த 6 ஆம் திகதி இந்த பாலியல் குற்றச் சம்பவம் நடந்திருந்தது.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக இவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சிகளின் முன்னால் நிறுத்தப்பட்டனர்.

அவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் தவிர ஏனைய இருவரையும் கிளிநொச்சி நீதவான் பெ.சிவகுமார் விடுதலை செய்துள்ளார்.

இந்த அடையாள அணிவகுப்பின்போது பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் கொழும்பில் இருந்து சென்றிருந்த முக்கிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்கள்.

கொழும்பு, மன்னார், வவுனியா ஆகிய பகுதிகளில் உள்ள பெண்கள் அமைப்பின் முக்கியஸ்தர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.

கிளிநொச்சி நீதிமன்றத்திற்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவில் இடம்பெற்றிருந்த மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல் கருத்து தெரிவிக்கையில், "இந்த வழக்கில் பொலிசார் உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி குற்றச் செயலில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண உதவியிருக்கின்றார்கள். எனினும் கடந்த காலங்களில் பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வன்முறைகள், பாலியல் குற்றங்கள் தொடர்பில் பொலிசார் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை" என சுட்டிக்காட்டினார்.

"சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், எதிர்காலத்தில் இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை வைத்து வழக்தைத் தொடர்ந்து நடத்துவதில் சட்டமா அதிபர் காட்டும் மும்முரத்தை பொறுத்தே இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா அல்லது கடந்த காலங்களைப்போல வழக்கு கிடப்பில் போடப்படுமா என்பது தெரியவரும்." என சட்டத்தரணி ரட்னவேல் தெரிவித்துள்ளார்.

Read more...

>> Monday, June 14, 2010


விஷமிகள் சதி; விபத்து தவிர்ப்பு



தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்தமை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சென்னை வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் ஆபத்தின்றி தப்பினார்கள்.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே, முண்டியம்பாக்கம் மற்றம் பேரணி ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே சனிக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது.

உஷார் நடவடிக்கை

சேலத்திலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், சித்தனி என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் பெரும் அதிர்வு உணரப்பட்டது. அதையடுத்து, ரயில் டிரைவரும் காப்பாளரும் பேரணி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அங்குள்ள நிலைய அதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்தார்கள்.

அந்த அதிகாரிகள் உடனடியாக முண்டியம்பாக்கம் ரயில்வே அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்கள். அதைத் தொடர்நது, திருச்சியிலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவரை நிலைய அதிகாரி உஷார்படுத்தினார்.

ரயில் பாதையில் பெரும் அதிர்வு உணரப்பட்டதால் மிகக்கவனமாக செல்லுமாறு டிரைவரை அவர் அறிவுறுத்தினார்.

அதன்படி, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது, சற்று தூரத்தில் ரயில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டிரு்பபதைப் பார்த்த டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

அதாவது, தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் ஆபத்தின்றி தப்பினார்கள்.

ரயில் பாதை அருகே உள்ள மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வயரைப் பொருத்தி, அதைத் தகர்த்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போஸ்டர் எச்சரிக்கை

சம்பவ இடத்தில் கையினால் எழுத்தப்பட்ட ஒரு போஸ்டர் இருந்ததாகவும், அதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சமீபத்தில் இந்தியா வந்ததைக் கண்டித்தும், அவரை வரவேற்ற இந்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காவல் துறையினர் சம்பவ இடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பொதுவாக உள்ளூர் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்த மார்க்கமாக வரவேண்டிய பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சேதமடைந்த ரயில் பாதை சரிசெய்யப்பட்ட பின்னர் ரயில்கள் அப்பாதையில் மீண்டும் செல்லத் தொடங்கின.

Read more...





முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களான 53 காதல் ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கான வவுனியா பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இந்த மெகா திருமண வைபவம் நடந்துள்ளது.


ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் இந்த திருமணங்களுக்குக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


ஜனாதிபதியின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய நாமல் ராஜபக்ச முக்கிய விருந்தினராக, பொலிவூட் நடிகர் விவேக் ஒபராயுடன் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.


இந்து ஜோடிகளுக்கு இந்து சமய ஆச்சாரப்படி திருமணம் செய்துவைக்கப்பட்டது.


கிறிஸ்தவ ஜோடிகளுக்கு பாதிரியார் மணம் முடித்து வைத்தார்.

Read more...


இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்


நேரடி உதவி: இந்தியா பரிசீலனை


இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கென இந்தியா ஒதுக்கியுள்ள ஆயிரம் கோடி ரூபாயை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே வங்கிகள் வழியாக வழங்குவது பற்றி யோசித்து வருவதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அண்மையில் இந்தியா வந்தபோது அவருடன் புதுடில்லியில் நடந்த ஆலோசனைகள் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதியைச் சந்தித்து அமைச்சர் சிதம்பரம் தகவல் வழங்கியிருந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதுதான் மறுவாழ்வுத்திட்டங்கள் பற்றி அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றவாளி என்று மத்திய அரசுக்கு தெரியாதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சிதம்பரம் அது பற்றி அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு எதுவும் வரவில்லை என்று மட்டும் கூறினார்.

விழுப்புரத்தில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு ஒரு தீவிரவாத, பயங்கரவாத செயலுக்கான முயற்சி என்பதால் இதை வன்மையாகவே கண்டிப்பதாகவும் தமிழக காவல்துறையும், உளவுத்துறையும் இணைந்து செயல்பட்டு குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் தன்னைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூற முடியாது. ஏனென்றால் தான் டெல்லியில் இருக்கும்போதே மலைக்கோட்டை ரயிலில் செல்லும் முடிவை ரத்துசெய்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் தமிழக காங்கிரசின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுபேசும்போது, அதிகாரப்பரவலுக்கான சட்டதிருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்று ராஜபக்சேயிடம் இந்தியா வற்புறுத்தியிருப்பதாகவும், யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம் ஒன்றைத் துவக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சிதம்பரம் கூறினார்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter