>> Monday, August 30, 2010


பசில் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள்-கிளிநொச்சியில்
'கிளிநொச்சி மாவட்டம் முக்கியம்'-பசில்

இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிக முக்கியமானது என ஐனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் போர் முடிந்ததன் பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்துள்ள கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் முழுமையாக விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்த பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்த மாவட்டத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடர்பான உயர்மட்ட மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டபோதே இதனை அவர் கூறியிருக்கின்றார்.

‘இலங்கையின் பொருளாதாரத்தில் கிளிநொச்சி மாவட்டம் மிகவும் முக்கியமானது. இங்குள்ள விவசாயிகளுக்கு உதவுவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்க முடியும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏ9 வீதியில் காணப்படுகின்ற கூரையற்ற கட்டிடங்கள் அனைத்தையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் திருத்தி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும், மற்றவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசில் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ள தகவலின்படி, கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கையின் மூலம், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 222 பேரைக் கொண்ட 33 ஆயிரத்து 657 குடும்பங்கள் இதுவரையில் அந்த மாவட்டத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள விவசாய குடும்பங்கள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் நெற்செய்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter