>> Tuesday, August 24, 2010


பிரதமர் ஜூலியா கில்லார்ட்
ஆஸ்திரேலியா: அடுத்து யார் ஆட்சி?

சுயேட்சைகளிடம் ஆதரவு திரட்டுவதில் பிரதமர் ஜூலியா கில்லார்ட் ஈடுபட்டுள்ளார்
ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அங்கு எந்தக் கட்சி ஆட்சியமைக்கும், யார் பிரதமராக வருவார் என்பதெல்லாம் இன்னும் நிச்சயமற்றதாகவே இருக்கிறது.

இரண்டு முக்கியக் கட்சிகளுக்குமே ஆட்சியமைக்க மேலும் ஒரு சில ஆசனங்களே தேவைப்படுகின்ற ஒரு சூழலில், யார் ஆட்சியமைப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும் பலம் ஒரு சில சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கைகளுக்கு வந்துள்ளது.

ஆட்சி செய்துவந்த தொழிற்கட்சி மீண்டும் அரசு அமைக்க தற்போதையப் பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு பசுமைக் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள முதல் நபரான ஆடம் பேண்டின் ஆதரவு தேவைப்படும்.

ஆடம் பேண்ட் ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் தொழிற்கட்சியின் கொள்கைகளுடன் நன்கு ஒத்துப் போகக்கூடியவர் இவர்.

பசுமைக் கட்சி எம்.பி. தாராளவாதக் கட்சிக்கு ஆதரவு தர வாய்ப்பில்லை என்று பசுமைக் கட்சி வட்டாரங்கள் குறிப்புணர்த்துகின்றன. ஆகவே இவரது ஆதரவு தொழிற்கட்சிக்கு கிடைத்துவிடும் என்று கருத இடமுண்டு.

ஆனால் நான்கு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு என்பதுதான் இப்போது பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த சுயேட்சை உறுப்பினர்கள் எல்லாம் கிராமப் பகுதிகள் நிறைந்த பிராந்தியத் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள். கிராமப்புறங்களுடைய பிரச்சினைகளை முன்வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள்.

கடைசியில் எப்படியான முடிவு வருகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter