>> Monday, August 16, 2010



ஜிஎஸ்பி+ வரிச்சலுகை விலக்கம்


இலங்கையில் ஒரு ஆடைத் தொழிற்சாலை
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வந்த ஜி எஸ் பி+ எனப்படும் ஏற்றுமதி வரிச்சலுகை 15.8.10 அன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுவது அங்கு பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுர்கள் கூறுகிறார்கள்.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னேற்றங்கள் தேவைகள் என ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்பந்தங்களுக்கு இலங்கை அடிபணியாது என்று அரசு கூறியது.

நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்த எழுத்துபூர்வமான உத்திரவாதத்தை அரசு அளிக்காத நிலையல். வரிச்சலுகையை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் திரும்பப் பெறப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவால் இலங்கைக்கு சுமார் 400 முதல் 500 மில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும் என பொருளாதார ஆய்வாளர் கலாநிதி முத்துகிருஷ்ணன் சர்வானந்தன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

பெருமளவில் வேலை இழப்பு ஏற்படலாம்


பல ஆலைகள் மூட வேண்டிய நிலை ஏற்படலாம்

இந்த வரிச்சலுகை விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதால ஒரு லட்சம் பேர் வரையிலானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை இழக்க நேரிடக் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.

ஜி எஸ் பி+ வரிச்சலுகையை பயன்படுத்தி தைத்த ஆடைகள் உட்பட பல பொருட்களை பல நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டு காலமாக வரியின்றி ஐரோப்பிய சந்தைகளுக்கு அனுப்பி வந்தன.

தற்போது எழுந்துள்ள நிலையை அடுத்து, இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் தைத்த ஆடைகளையே நம்பியிராமல் வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் கலாநிதி சர்வானந்தன் கருத்து வெளியிடுகிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் ஜி எஸ் பி+ வரிச்சலுகை மூலம் இலங்கைக்கு கூடுதலாக கிடைத்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அது முந்தைய காலகட்டத்தை விட இரண்டு மடங்காக உயர்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய ஒன்றியம் சலுகையை விலக்கிக் கொண்டுள்ள நிலையில், இது தொடர்பில் அரசிடம் உறுதியான எந்த மாற்று திட்டங்களும் இருப்பதாகத் தெரியவில்லை எனவும் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter