>> Saturday, October 30, 2010




மூன்று மாதமாகத் தவிக்கும் வெள்ள அகதிகள்


பாகிஸ்தானின் ஐந்தில் ஒரு பகுதி வெள்ளத்தில்
பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு அதனால் மூழ்கடிக்கப்பட்டு, 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், சுமார் 70 லட்சம் பேர் இன்னமும் தங்க இடமில்லாமல் அவதியுறுகிறார்கள்.
வாந்திபேதியும் மற்றும் போஷாக்கின்மையும் அங்கு பரவி வருகின்றன.

குளிர்காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நிலைமை மேலும் மோசமான கட்டத்துக்குள் சென்று கொண்டிருப்பதாக உதவி நிறுவனங்கள் கூறுகின்றன.

உயிர்களைக் காப்பாற்றுவதற்கு கொடையாளிகளிகளின் உதவி உடனடியாகத் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.



பாகிஸ்தானின் தென்பகுதி மாகாணமான சிந்து மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் சென்று வந்த எமது செய்தியாளர் ''தமக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை'' என்று மக்கள் குறை கூறுவதாகக் கூறினார்.

பலர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட தமது குழந்தைகளுக்கு கொடுக்க உணவின்றி தவிக்கிறார்கள்.

இன்னமும் பல இடங்களில் வெள்ள நீர் வடியவில்லை. எப்போதாவது வரும்

உதவிகள் கூட அங்கு காத்துக்கிடக்கும் மக்களுக்கு போதுமானவையாக இல்லை.

போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கூட மருத்துவமனைகளில் பார்க்க முடிகிறது.

தமது சொந்த அரசாங்கமும், சர்வதேச சமூகமும் தம்மை கைவிட்டு விட்டதாக மக்கள் புலம்புகிறார்கள்.

Read more...


தமிழோசை அலைவரிசை மாற்றம்


பிபிசி உலக சேவை
அக்டோபர் 31 ஆம் தேதி,2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் தமிழோசை அலைவரிசைகளில் மாற்றம் இடம்பெறுகின்றது.

தமிழோசை நேயர்கள் மறு அறிவித்தல் வரும் வரை

41 மீட்டரில் 7600 கிலோ ஹேர்ட்ஸ்

31 மீட்டரில் 9605 கிலோ ஹேர்ட்ஸ்

25 மீட்டரில் 11965 கிலோ ஹேர்ட்ஸ்

49 மீட்டரில் 6135 கிலோ ஹேர்ட்ஸ்

ஆகிய சிற்றலை வரிசைகளிலும்

இலங்கை நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை வலையமைப்பு மூலமாகவும் கேட்கலாம்.

Read more...



'எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும்'


கர்நாடகா-வரைபடம்
கர்நாடக மாநிலத்தில் யெதியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால், அந்தக் கட்சியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தமை செல்லுபடியாகும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஏற்கனவே, இரண்டு நீதிபதிகள் கொண்ட குழு இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது, இருவரும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிலைப்பாட்டுடன் தீர்ப்பளித்தார்கள்.

அதாவது, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கெஹர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்றும், இன்னொரு நீதிபதி என். குமார், செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.

அதையடுத்து, மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு அந்த வழக்கு அனுப்பப்பட்டது.

நீதிபதி வி.ஜி. சபாஹித், பாஜக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று முடிவெடுத்த நிலையில், பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லும் என முடிவு செய்யப்பட்டது.

பாஜகவைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும், அந்தக் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஐந்து பேரும், யெதியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அவரது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக ஆளுநரிடம் அவர்கள் கடிதம் கொடுத்தனர்.


பாஜக ஆதரவு கூட்டம்(ஆவணப்படம்)
அதையடுத்து, ஆளுநரின் உத்தரவுப்படி, இம் மாதம் 11-ம் தேதி நம்பிக்கை வாக்குக் கோரினார் யெதியூரப்பா. கட்சி விரோத நடவடிக்கைகளைக் காரணம் காட்டி, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும், வாக்கெடுப்புக்கு சற்று முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக சட்டப் பேரவைத் தலைவர் போபையா அறிவித்தார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
ஆனால், அது ஜனநாயக நடைமுறை அல்ல என்று கூறிய ஆளுநர் பரத்வாஜ், அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி, 14-ம் தேதி நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில், 106க்கு 100 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் யெதியூரப்பா அரசு வெற்றி பெற்றது.

இதனிடையே, முதல் வாக்கெடுப்பின்போது, தங்களைத் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து, 16 எம்.எல்.ஏ.க்களும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். 11 பாஜக எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும், 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு தனியாகவும் விசாரிக்கப்பட்டது.

தற்போது, பாஜக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, கட்சித் தாவல் தடை சட்டத்தின் 10-வது பிரிவின்படி, பேரவைத் தலைவர் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தென்னிந்தியாவில், முதலாவது பாஜக அரசான யெதியூரப்பா அரசுக்கு இது பெரும் ஊக்கமளிக்கும் தீர்ப்பாக அமைந்துள்ளது. இதனிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் மனு நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அதுதொடர்பான தீர்ப்பு எப்படி இருந்தாலும், யெதியூரப்பா அரசுக்கு தற்போதைய நிலையில் நெருக்கடி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று கூறப்படுகிறது.

Read more...


இலங்கையில் மாணவர் தலைவர் கைது


பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்-(ஆவணப்படம்)
அகில இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரத்ன பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்களை சந்தித்துவிட்டு வெளியேறும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் உயர்கல்வி அமைச்சின் கட்டடத்திற்குள் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அங்கு அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்ட குற்றச்சாட்டில் நீதவானின் பகிரங்க பிடியாணை உத்தரவின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

முன்னதாக இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 21 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொழும்பு நீதவான் பிணை வழங்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே பேராதனை, களனி,ரஜரட்ட, ஜயவர்தனபுர உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளையும் நிர்வாகங்களுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் போன்ற காரணங்களையும் காட்டி பிரச்சனைகள் எழுந்த வண்ணமே உள்ளன.

சில பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையே இன்னும் தொடர்கின்றது.

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைய அரசாங்கம் அனுமதியளித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களை நசுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாக தற்போது கைதாகியுள்ள மாணவர் அமைப்புத் தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களை சந்தித்த மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், அரசாங்கம் பல்கலைக்கழக பீடங்களை மூடிவிட்டு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு எதிரான குரல்களை நசுக்க முற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் பின்புலத்திலேயே சில மாணவர் அமைப்புகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றபோதும், இந்தப் பிரச்சனைகளுக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது

Read more...

>> Thursday, October 21, 2010


புலிகள்தடை நீடிப்பு பற்றி தீர்ப்பாயம்


வைகோ
இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையினை நீட்டிப்பது குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் புதன்கிழமை ஊட்டியில் கூடியது.
இந்த விசாரணையின் போது சாட்சியமளித்த மத்திய உள்துறை அதிகாரி பி.கே மிஸ்ராவிரிடம் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் சார்பில் குறுக்கு விசாரணை செய்யப்பட்டது.

இதன்போது மத்திய உள்துறை அதிகாரி பி.கே. மிஸ்ரா, 'விடுதலைப் புலிகள் மீதான ஆதரவு எல்லா மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் பல கிளர்ச்சிகள் நடக்கின்றன. எனவே தான் தடை விதித்திருக்கிறோம். அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் பல நாடுகளில் இந்த இயக்கத்திற்கு தடை உள்ளது’ என்றார்.

உடனே வைகோ, ‘அதற்கு ஆதாரம் இருக்கிறதா’? என்று கேட்டபோது, ‘தடை இல்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது’ என்று கேட்டார் மிஸ்ரா.’ ஊடகங்களின் செய்திகள் தான் அதற்கு ஆதாரம்’ என்று வைகோ கூறினார்.

சிறைவாசிகளின் உரிமைகளுக்கான அமைப்பின் சார்பாகவும் விடுதலைப் புலிகளுக்கு தடைவிதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய தீர்ப்பாயத்தின் மறு கூட்டம் சென்னையில எதிர்வரும் அக்டோபர் 28 திகதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...


'டக்ளஸ் தேடப்படும் குற்றவாளிதான்'


டக்ளஸ் தேவானந்தா
1986இல் சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேடப்படும் குற்றவாளி தான் என சென்னை நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி தெரிவித்திருக்கிறார்.
1986 சம்பவத்தில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை நான்காவது கூடுதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து 1994ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா சென்ற டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத நிலையில் டக்ளஸ் தேவானந்தா இலங்கை திருபினார். அந்த வழக்கும் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருப்பதை ரத்து செய்யவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். நீதிபதி அக்பர்அலி இந்த வழக்கின் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதன்படியே அமர்வு நீதிபதி பரஞ்சோதியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் டக்ளஸை 1994ம் ஆண்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழக்கறிஞர் வஜ்ரவேலு, சம்பந்தப்பட்ட அறிவிப்பு பொது அறிவிப்பாக முறையாக விளம்பரப்படுத்தப்படவில்லை. பத்திரிகை செய்திகள் வழியாகவே தெரிய வந்திருக்கிறது, எனவே விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அன்றையதினம் அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி அக்பர் அலி தெரிவித்தார்.

Read more...

>> Monday, October 18, 2010


சிறார்களை பிக்குகளாக்க எதிர்ப்பு


சிறார்களை புத்த பிக்குகளாக்க திட்டம்
இலங்கையில் அடுத்த வருடம் மே மாதத்திற்குள் 2600 சிறுவர்களை பெளத்த பிக்குகளாக்கும் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் திட்டத்தை சிறுவர் உரிமை ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

புத்த சாசனத்தை ஊக்குவிக்கவும் சிறார்களை வறுமையிலிருந்து காக்கவும் இந்தத்திட்டம் உதவும் வழிவகுக்கும் என பிரதமர் கருதுகின்றார்.

புத்த பகவான் ஞான நிலையை அடைந்த 2600வது வருடபூர்த்தி அடுத்த மே மாதம் அனுஷ்டிக்கப்படுகிறமையை முன்னிட்டு இந்த திட்டத்தை பிரதமர் முன்வைத்துள்ளார்.

இளம் பௌத்த துறவிகள் பல்கலைக்கழகம் வரை சென்று கற்பதற்கு நிதி உதவிகள் வழங்கவும், அவர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டீ.இம்.ஜயரட்ண பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறார்களை 10 வயது போன்ற மிகக்குறைந்த வயதி்ல் துறவறம் பூணச் செய்யும் திட்டத்திற்கு சமூக மற்றும் சிறுவர் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

18 வயதை அடையும் வரை சிறார்கள் அவர்களின் குழந்தைப் பருவத்தையும் இளமையின் குடும்பச் சூழலையும் அனுபவிக்கும் உரிமையை எவருக்கும் பறிக்க முடியாது என்பது சிறார் நல ஆர்வலர்களின் வாதம்.

மூத்த பெளத்தத் துறவிகள் இந்தத்திட்டத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென ஜநாவின் சிறுவர் உரிமைகள் குழுவிற்கு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட டொக்டர் ஹிரந்தி விஜேமான்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

பணக்கார குடும்பத்துச் சிறார்கள் மிக அரிதாகவே இளவயதில் துறவறம் பூணுவதாக தெரிவிக்கின்ற டாக்டர் ஹிரந்தி, சிறார்களை துறவறம் பூணச்செய்வது அவர்களின் உரிமைகளை மீறுவதற்குச் சமம் என வாதிடுகின்றார்.

சிறார்கள் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் நிலைக்கு இவ்வாறான சிறார் துறவறங்கள் வழிவகுக்கின்றது என்பது சமூக ஆர்வலர்களின் பரவலான வாதம்.

தமது பராமரிப்பில் உள்ள சிறார்களை பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பௌத்த துறவிகள் பலர் கடந்த காலங்களில் இலங்கையின் தேசிய சிறார் பாதுகாப்பு அதிகாரசபையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்க மதத்தலைவர் பாப்பரசரை பகிரங்கமாக மன்னிப்பு கோரும் நிலைக்குத் தள்ளிய கத்தோலிக்க பாதிரிமாரின் சிறுவர் துஷ்பிரயோக சர்ச்சைகளைப் போன்ற நிலையை பொத்த விகாரைகளிலும் இடம்பெற அனுமதிக்கக்கூடாது என சிறார் பாதுகாப்பு அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டீ சில்வா சுட்டிக்காட்டுகின்றார்.

Read more...

>> Wednesday, October 13, 2010


இலங்கை ஐனாதிபதிக்கு எதிர்ப்பு


இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ்
புதுடில்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளின் நிறைவு விழாவில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேக்கு அழைப்பு அனுப்ப்ப்பட்டிருப்பதற்கு தமிழகத்தில் சில தரப்புக்களிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போர் குற்றங்கள் நடைபெற்றனவா என்று ஆராய ஐ.நா மன்றமே மூவர் குழு ஒன்றை அமைத்திருக்கும் நிலையில், பொதுவாக உலகநாடுகள் மத்தியில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து கண்டன்ங்கள் எழுந்துள்ள நிலையில் மஹிந்த ராஜ பக்சேக்கு இப்படி சிறப்புச்செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாததென்றும், ஈழத்தமிழர்களுக்கு சிங்கள அரசு, கொடுமை செய்யவில்லை என்ற எண்ணத்தை, உலக நாடுகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு இந்திய அரசு செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

புறக்கணிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவள்வனும் மஹிந்தாவிற்கு அனுப்ப்ப்பட்டிருக்கும் அழைப்பை திரும்ப்ப்பெறவேண்டும் என்றும் இந்திய அரசின் தமிழின விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் நிறைவு விழாவை புறக்கணிக்கவிருப்ப்தாகவும் கூறியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய அரசின் அழைப்பு தமிழக மக்களின் வெந்த உள்ளங்களில் வேலைச் செருகுவதாகும் எனக்கூறியிருக்கிறார்.

Read more...

>> Tuesday, October 12, 2010


கர்நாடகம்: வாக்கெடுப்பு வெற்றியில் சர்ச்சை


வெற்றிக் களிப்பில் எடியூரப்பா
கர்நாடக மாநிலத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசு வெற்றி பெற்றதாகக் முதல்வர் எடியூரப்பா கூறுகிறார்.
ஆனால், குரல் வாக்கெடுப்பு மூலம் பெறப்பட்ட அந்த வெற்றி, சட்டவிதிகளுக்குப் புறம்பானது என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன.

மேலும், அந்த வாக்கெடுப்பு சட்டவிரோதமானது, போலியானது என்று கூறி, மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்து மாநில ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எடியூரப்பா எதிராகப் போர்க்கொடி
பா ஜ க வைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களும், எடியூரப்பா அரசுக்கு ஆதரவளிக்கும் ஐந்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மாதத் துவக்கத்தில் திடீரென அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களில் முகாமிட்டு, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பலப்பரிட்சை

இந்த மாதம் 12-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க யெதியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், திங்களன்று சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்னதாக, 16 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்வதாக பேரவைத் தலைவர் போபையா அறிவித்தார்.

224 பேர் கொண்ட அவையில் 16 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாஜக அரசுக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த நிலையில் சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் எடியூரப்பா நம்பி்க்கை வாக்கு கோரினார்.

குரல் வாக்கெடுப்பு மூலம் வாக்கெடுப்பு முடிந்து, எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சட்டை கிழிப்பு

ஆனால், எதிர்க்கட்சிகள் அதைக் கடுமையாக ஆட்சேபித்தன. அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. பல உறுப்பினர்கள் உள்ளே வராமல் தடுக்கப்பட்டதாகவும், அவைக்குள் போலீசார் நுழைந்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக அவைக்குள் கடுமையாக கோஷமிட்டார்கள். அவர்களில் ஒருவர் தனது மேல்சட்டையைக் கிழித்துக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தார்.

ஆனால், பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக எடியூரப்பா தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மறுப்பு

இதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா ஆட்சேபம் தெரிவித்தார் .

மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, பாஜக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தகுதி நீக்கம் செய்யப்ட்ட 16 உறுப்பினர்களும் திங்களன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், விசாரணைய செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனிடையே, பேரவையில் நடைபெற்றது சட்டவிரோதம் என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் திங்கட்கிழமை மாலை டெல்லியில் இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

Read more...

>> Friday, October 8, 2010


நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு


சரத் பொன்சேகா

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கத் துவங்கியிருப்பதால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டதாக இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் இலங்கையின் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியிருப்பதாக, துணை தேர்தல் ஆணையர் பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்திருக்கிறார்.

சரத் பொன்சேகாவின் பதவியிழப்பால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்கு புதிய நபரை நியமிக்கும்படி தேர்தல் ஆணையர் தயானந்த திஸ்ஸநாயகவிடம், இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக கிதுலகொட கேட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் இந்த கடிதத்துக்கு ஜனநாயக தேசிய முன்னணி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த பதவி பறிப்பு தவறு என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் பதில் அளித்த துணை சபாநாயகர் பிரியங்கர ஜெயரட்ன, இலங்கை அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே சரத்பொன்சேகாவின் பதவி பறிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

Read more...

>> Tuesday, October 5, 2010


மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு


குழந்தைகளுடன் டாக்டர் எட்வர்ட்ஸ்
மருத்துவத் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸுக்கு வழங்கப்படுகிறது.
1988 ஆம் ஆண்டு மரணமடைந்த பாட்ரிக் ஸ்டெப்டோப்புடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் சோதனைக் குழாய் குழந்தைகளுக்கு வழி வகுத்தன.

இவர்களது ஆராய்ச்சியானது மனிதக் கருவை உடலுக்கு வெளியே உருவாக வைத்து அதை கருப்பைக்குள் செலுத்தும் தொழில்நுட்பத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு கரு கருப்பையினுள் செலுத்தவும் பட்டது.

1950 களில் தொடங்கப்பட்ட அவரது ஆய்வுகளின் மூலம் 1978 ஆம் ஆண்டு உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறக்க வழி செய்தது.

அதற்கு பிறகு சோதனை குழாய் மூலமாக நாற்பது லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன.

உலகளவில் பத்து சதவீதமான மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் எட்வர்ட்ஸின் ஆய்வுகள் அந்தத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது

Read more...

>> Friday, October 1, 2010


பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து தீர்ப்பு


பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இருக்கும் அயோத்தியில் பாபர்மசூதி இருந்த நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பகுதி முஸ்லீம்களுக்கும், இரண்டாவது பகுதி நிர்மோகி அகாரா என்கிற இந்து சாதுக்களின் அமைப்புக்கும், மூன்றாவது பகுதி மற்ற இந்து அமைப்புகளுக்கும் அளிக்கும்படி அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை தீர்ப்பளித்திருக்கிறது.

அதே நேரத்தில், ஹிந்து கடவுளான ராமர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுவரும் இடம், ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில், 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சைக்குரிய அயோத்திப்பிரச்சினை வழக்கின் தீர்ப்பை, அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் லக்னோ பெஞ்ச் வியாழனன்று பிற்பகல் வழங்கியது.

அந்தத் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரித்து, ஒரு பகுதியை ஹிந்து மகாசபைக்கும், இன்னொரு பகுதியை, ஹி்ந்து சாதுக்களின் கூட்டமைப்பான நிர்மோகி அகாராவுக்கும், இன்னொரு பகுதியை முஸ்லிம்களின் சுனி வக்ஃப் வாரியத்துக்கும் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிதிகள் அகர்வால் மற்றும் எஸ்.வி. கான் ஆகியோர், சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்று பெரும்பான்மை தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி தரம்வீர் ஷர்மா மட்டும், அந்தப் பகுதி முழுவதும் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

குறிப்பாக, கடந்த 1992-ம் ஆண்டு ஹி்ந்து கடு்ம்போக்குவாதிகளால் இடிக்கப்பட்ட மசூதியின் மையப்பகுதி இருந்த சர்ச்சைக் குரிய இடம், ஹிந்து மகாசபைக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் மூன்று நீதிபதிகளும் ஒருமித்த கருத்தைக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில்தான் முதலில் 1949 ஆண்டும் பிறகு 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகும் ராமர் சிலைகள் வைக்கப்பட்டன.

அதேபோல், சீதா தேவியின் சமையலறை மற்றும் ராமரின் உடைமைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.


சில இந்து அமைப்புக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளன

முஸ்லிம்களைப் பொருத்தவரை, அவர்களுக்கும் மூன்றில் ஒரு பகுதி வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எந்த ஒரு தரப்புக்கும் மூன்றில் ஒரு பகுதி சரியாகக் கிடைக்காவிட்டால், மத்திய அரசு கையகப்படுத்தி வைத்துள்ள அருகில் உள்ள பகுதியிலிருந்து தேவையான இடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை இந்திய நடுவணரசு ஏற்கெனவே கையகப்படுத்தி வைத்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில், முதலில் கோயில் இருந்ததாகவும் அதை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் ஆவணங்களின் மூலம் அது நிரூபணமாகியுள்ளதாகவும் இரண்டு நீதிபதிகள் தெரிவித்துள் ளனர். கோயிலை இடித்துவிட்டு பாபர் அந்த மசூதியைக்கட்டி யது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதால் அதை மசூதியாகக் கருத முடியாது என்றும் அந்த நீதிபதிகள் கூறியுள்ளனர்.

ஆனால், மசூதியைக்கட்ட கோயில் இடிக்கப்படவில்லை என்றும், இடிந்துகிடந்த கோயிலின் மீதுதான் மசூதி கட்டப்பட்ட தாகவும் நீதிபதி எஸ்.வி. கான் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

மசூதி கட்டப்படும் வரை, பரந்த அந்த நிலப்பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் ராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், ஆனால், எந்த குறிப்பிட்ட இடத்தில் ராமர் பிறந்தார் என்பது குறித்த தெளிவான ஆதாரம் இல்லை என்றும் நீதிபதி கான் குறிப்பிட்டிருக்கிறார்.

சர்ச்சைக்குரிய கட்டிடம் அல்லது மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதே கேள்விக்குறியாக உள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய இடம் முழுவதும் தங்களுக்குச் சொந்தம் என்று கோரி சுனி வக்ஃப் வாரியம் தாக்கல் செய்த மனு, சட்டவிதி களின்படி காலம் கடந்து செய்யப்பட்டதால், அதைத் தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.

மேலும், சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போதுள்ள நிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித் துள்ளனர். தங்களுக்கான பகுதிகளை எவ்வாறு பகிர்ந்து கொள் வது என்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்கள் யோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter