>> Wednesday, August 25, 2010


விஸ்வநாதன் ஆனந்த்
ஆனந்திடம் கபில் சிபல் மன்னிப்பு

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் குடியுரிமை தொடர்பான சர்ச்சை காரணமாக அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான நிகழ்ச்சி ரத்தானதற்காக மத்திய அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்தின் குடியுரிமை தொடர்பாக இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.

அதற்காக, இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம் ஹைதபாராத் நகரில், சர்வதேச கணிதவியல் மாநாடு நடைபெற்று வருகிறது. அதையொட்டி, அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம் முடிவெடுத்தது.

அவ்வாறு பட்டம் வழங்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்ய வேண்டும். அதற்கு, பல்கலைக் கழகத்தின் விசிட்டர் என்ற முறையில், இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஆனால், கடந்த ஜூலை மாதம், ஆனந்தின் இந்தியக் குடியுரிமை தொடர்பாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் சந்தேகம் எழுப்பினார்கள். அதுதொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், அதுதொடர்பான ஆவணங்களையும் கேட்டார்கள். ஆனந்த் அவர்களின் மனைவி அருணா ஆனந்தும், பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

சிறப்புப் பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கடைசி வரை, ஆனந்துக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பான ஒப்புதல், அமைச்சகத்திடமிருந்து வரவில்லை. அதையடுத்து, கடைசி நேரத்தில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

அமைச்சர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, கெளவப் பட்டத்தை ஆனந்த் ஏற்றுக்கொள்வாரா என்று அவரது மனைவி அருணா ஆனந்திடம் கேட்டபோது, ஆனந்துக்கு அடுத்த பிப்ரவரி மாதம் வரை செஸ் போட்டிகள் அதிக அளவில் இருப்பதால் அதுவரை சாத்தியமில்லை என்று தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter