>> Friday, April 30, 2010





வீழ்ச்சியில் ஊடக சுதந்திரம்


இலங்கையில் ஊடக சுதந்திரம் கோரி நாடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்று
உலகின் அனைத்து பாகங்களிலும் தொடர்பூடக சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாக ஃபிரீடம் ஹவுஸ் என்னும் சுயாதீன கண்காணிப்புக் குழுவின் கணிப்பீடு ஒன்று கூறுகிறது.
கடந்த தொடர்ச்சியான 8 வருடங்களாக தொடர்பூடக சுதந்திரம் வீழ்ச்சியடைந்து வருவதாக 2009 ஆம் ஆண்டுக்கான தனது அறிக்க்கையில் வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயற்படும் இந்த அமைப்பு கூறியுள்ளது.

உலகில் சராசரியாக 6 பேர்களில் ஒருவர் மாத்திரமே தொடர்புசாதன சுதந்திரத்துடன் இருப்பதாகவும் அது கூறுகிறது.

ஒவ்வொரு வருடமும் தொடர்பூடகங்கள் செயற்படுகின்ற அரசியல் மற்றும் சட்ட சூழ்நிலை குறித்து ஃபிரீடம் ஹவுஸ் ஆராய்கிறது. தொடர்பூடகங்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார அழுத்தங்கள் குறித்தும் அது கவனம் செலுத்துகிறது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலை அடிப்படையாக கொண்டு பார்க்கும் போது உலக மட்டத்தில் கடந்த வருடத்தில் மீண்டும் ஊடக சுதந்திரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை தெரியக்கூடியதாக இருக்கின்றது என்று அந்த அமைப்பு கூறுகின்றது.

மிகவும் முக்கியமான மாற்றம் என்பது சகாராவுக்கு தென்பகுதியில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில்தான் நடந்துள்ளது.


வீழ்ச்சியடையும் ஊடக சுதந்திரம்
2008 இல் தென்னாபிரிக்காவும், நமீபியாவும் ஊகட சுதந்திரம் உள்ள நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அங்கெல்லாம் பாதியளவிலான சுதந்திரமே காணப்படுகின்றது.

மெக்சிகோவில் ஊடக சுதந்திரம் கிடையாது என்ற நிலை எட்டப்பட்டுள்ளதுடன், லத்தின் அமெரிக்கா குறித்தும் கவலைகள் அதிகரித்துள்ளன.

ஹொண்டியூஸும் ஊடக சுதந்திரம் அற்ற நாடாகவே கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தேர்தலின்போது செய்தியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறையின் காரணமாக தனது பிராந்தியத்தில் ஊடக சுதந்திரம் பெரும் வீழ்ச்சியடையும் நாடாக இரான் பதிவாகியுள்ளது.



ஒருவர் இணையம் மூலம் தகவ்வல் பெறுவதில் மேற்கொள்ளப்படும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பது குறித்தும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது. தகவலை தணிக்கை செய்யவும், இணையத்தில் இணைபவர்களை கண்காணிக்கவும், சீனா, ரஷ்யா மற்றும் வெனிஸ்ஸுவேலா ஆகிய நாடுகள் மிகவும் நுட்பமான பொறிமுறைகளை பயன்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.

ஆசிய பசுசிபிக் பிராந்தியத்தில், குறிப்பாக பூட்டான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறப்பான ஊடக சுதந்திரத்தை நோக்கிய நகர்வுகள் குறித்தும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Read more...


குடும்பத்தினருடன் பிரபாகரன்



பிரபா தாயார்--தமிழக அரசின் பதிலென்ன?



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை ம்றுபடி இந்தியாவிற்கு வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து தமிழக அரசு அளிக்கும் பரிந்துரையை இந்திய நடுவணரசு பரிசீலிக்கும் என்று நடுவணரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து இந்த விடயத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை நாளை வெள்ளிக்கிழமை (30.4.10) மதியத்துக்குள் நீதிமன்றத்திடம் தெரிவிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்திரவிட்டது.

கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

அந்தச் சம்பவம் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி கூறியிருந்தார்.

தமக்கு முன்பு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று 2003 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் இருந்த நடுவணரசு அதிகாரிகள் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதாக தமக்கு தெரிய வந்திருப்பதாகவும் கருணாநிதி கூறியிருந்தார்.

பார்வதியம்மாள் சென்னையில் சிகிச்சை பெற விரும்பினால், அவர் இந்தியா வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தாம் கோரத்தயார் என்றும் கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்த பின்னணியில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாளை சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பொது நலவழக்கொன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் வெளிநாட்டவர்கள் வருகைக்கு அனுமதி வழங்குவது என்பது நடுவணரசின் கட்டுப்பாட்டில் உள்ள விடயம் என்பதால், இந்த வழக்கில் மாநில அரசை சேர்க்கக் கூடாது என்று கோரினார்.

இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதங்களின்போது இந்திய நடுவணரசின் வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், இந்த வழக்கில் மத்திய அரசின் நிலை குறித்து வியாழக்கிழமை பதில் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, வியாழனன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடுவணரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ஒரு வெளிநாட்டுப் பிரஜையை இந்தியாவுக்குள் அனுமதிப்பதா இல்லையா என்பதை முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டு என்று கூறினார்.

மேலும், பார்வதியம்மாள் பிரச்சினையை பொறுத்தவரை, அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்று 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு செய்திருந்த பரிந்துரையின் அடிப்படையில் தான் அவர் அனுமதிக்கப்படவில்லை என்று விளக்கினார். தற்போதைய மாநில அரசு பார்வதியம்மாளை அனுமதிக்கலாம் என்று கூறினால் அதை நடுவணரசு பரிசீலித்து முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்த விடயத்தில் தற்போதைய தமிழக அரசின் நிலை என்ன என்பதை நாளை வெள்ளிக்கிழமை மதியம் ஒருமணிக்குள் தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு தெரிவிக்கும்படி கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

Read more...


இடிந்து போன பிரபகரனின் வீடு



பிரபாகரன் வீடு இடிப்பு


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக வீட்டை இலங்கை இராணுவத்தினர் இடித்து தள்ளிவிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டுகிறார்.
யாழ் குடா நாட்டின் வல்வெட்டித் துறையில் உள்ள பிரபாகரன் குடும்பத்தினரின் பூர்வீக வீட்டை பார்க்க தெற்கில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் இதை பொறுத்துக் கொள்ளமுடியாதவர்கள் வீட்டை இடித்திருக்கலாம் என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்த வீட்டிற்கு இராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்ததாகவும், வீட்டை சிறிது சிறிதாக உடைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாகவும், இது பற்றி தான் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால் வீடு இடிந்து போனதற்கும் இராணுவத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்றும் வீட்டை இடிக்க வேண்டிய தேவையேதும் இராணுவத்துக்கு இல்லை என்றும் இலங்கை ராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தமிழோசையிடம் கூறினார்.

1987 இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இராணுவ நடவடிக்கையின் போது இந்த வீடு பலமாக சேதமடைந்தது. பிரபாகரனின் வீட்டார் இந்த வீட்டை விட்டு 1983 இல் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இலங்கையின் வன்னிப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் கல்லறைகள், அலுவலகங்கள் போன்றவைகளும் கடந்த சில மாதங்களில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுவருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

Read more...



இலங்கை அதிபர் மஹிந்தவும் இந்திய பிரதமர் மன்மோகனும்




“மேலவையில் தமிழர் பிரதிநிதித்துவம்”



இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேலவையை உருவாக்கி அதில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உறுதியளித்திருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி அங்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்துவதில் தனது அரசு தீவிரமாக இருப்பதாகவும், தமிழர்களுக்கு நாடாளுமன்ற மேலவையில் மேலும் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும் என்றும் மன்மோகன் சிங்கிடம் ராஜபக்ஷ அவர்கள் எடுத்துரைத்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களிடமும் தமிழர்களின் தலைமையிடமும் தனது அரசு நேசக்கரம் நீட்டும் என்று ராஜபக்ஷ அவர்கள் கூறியதாகவும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியா வருவதாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை

இதற்கிடையே இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியுறவு அமைச்சர்கள் நிலையில் மீண்டும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க முடிவு செய்துள்ளன.

பூடான் தலைநகர் திம்புவில் நடைபெறும் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒட்டி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ராஸா கிலானியும் இன்று சந்தி்த்துப் பேசினார்கள். அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தைக்கான வழிகளைத் திறந்து வைப்பது அவசியம் என்று இரு நாட்டுத் தலைவர்களும் முடிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஷர்மல் ஷெக்கில் நடந்த சந்தி்ப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் மீண்டும் இன்று சந்தித்துள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும், தங்களது வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் சந்தித்தனர். பின்னர் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

அந்தச் சந்திப்பு வெளிப்படையாகவும் திறந்த மனதுடனும் இருந்ததாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Read more...

>> Thursday, April 29, 2010

குடும்பத்தினருடன் பிரபாகரன்



சிகிச்சை அளிக்கக் கோரி வழக்கு



விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை மறுபடி இந்தியாவிற்கு வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய அரசு தனது நிலை என்ன என்பதை வியாழக்கிழமை(29.4.10) தெரிவிக்கவேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் இன்று உத்திரவிட்டது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திரும்பி அனுப்பப்பட்டார்.

அச்சம்பவம் பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தியிருந்தது.

முதல்வர் கருணாநிதி பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தனது அரசுக்கும் எத்தொடர்பும் இல்லையென்றும், அவர் விரும்பினால் அவர் இந்தியா வர அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் தான் கோரத்தயார் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர் கருப்பன் பார்வதி அம்மாளை சிறப்பு விமானத்தில் தமிழகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கோரி பொது நலவழக்கொன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு புதன்கிழமை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் வெளிநாட்டவர்கள் வருகைக்கு அனுமதி வழங்குவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். எனவே மாநில அரசை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என்றார்.

இதை நீதிபதிகள் ஏற்று கொண்டு வழக்கில் இருந்து தமிழக அரசை நீக்க உத்தரவிட்டனர்.

பின்னர் நடந்த வாதங்களின்போது மத்திய அரசு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் மத்திய அரசு நிலை குறித்து நாளை பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வியாழன் பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read more...



இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
சார்க் சாதித்தது என்ன?


சார்க் நாடுகளுக்கு இடையே மேலும் இணக்கம் தேவை
தெற்காசிய நாடுகள் அமைப்பு எனப்படும் சார்க் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் அது ஆரம்பிக்கப்பட்ட இலக்கை எட்டியதாகக் காணப்படவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
எனினும் இந்த 25 ஆண்டு காலப்பகுதியில் உலக அளவில் “தெற்காசிய நாடுகளுக்கான ஒரு அடையாளத்தை” சார்க் அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று புதுடில்லியில் இருக்கும் தெற்காசிய ஆய்வாளர் டாக்டர் சகாதேவன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

அந்த அடையாளம் ஏற்பட்டிருந்தாலும் அந்த அமைப்பு இன்னும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக ரீதியில் தெற்காசிய பிராந்தியம் இன்னமும் ஒரு இணைக்கப்படாத பகுதியாவே இருந்து வருகிறது என்றும் டாக்டர் சகாதேவன் சுட்டிக்காட்டுகிறார்.

குறைகள் இருந்தாலும் சார்க் அமைப்பு ஏதும் சாதிக்கவில்லை, அந்த அமைப்பினால் பலன்கள் ஏதும் இல்லை என்று கூறுவதையும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறுகிறார்.

திட்டங்களை நிறைவேறுவதில் சிக்கல்கள்


இணைந்த கொடிகள்-இணையாத கொள்கைகள்
தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் ஏராளமான திட்டங்கள் சார்க் அமைப்பால் தீட்டப்பட்டிருந்தாலும், அதை செயற்படுத்துவதில்தான் பிரச்சினைகள் இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டுகிறார் சகாதேவன்.

சமூக ரீதியிலான சில அபிவிருத்துகளை சார்க் அமைப்பு செய்துள்ளது என்று கூறும் அவர், பொருளாதார இணைப்பு என்பதில் ஏதும் முன்னேற்றங்கள் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டியது என்கிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே அரசியல் உறவுகள் எப்போது மேம்பாடு அடையுமோ அப்போதுதான் சார்க் அமைப்பின் செயற்பாடுகள் திறம்பட அமையும் எனவும் கூறுகிறார் புதுடில்லி ஜவஹர்லால் பல்கலைகழகத்தின் தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான பேராசிரியராக இருக்கும் டாக்டர் சகாதேவன்.

தெற்காசிய நாடுகளுக்கு இடையே இருக்கும் பலவித முரண்பாடுகளும் சார்க் அமைப்பின் வெற்றிக்கு தடைகளாக இருக்கின்றன எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்தியா போன்ற நாடுகள் பரப்பளவில் பெரிதாகவும், பொருளாதார வல்லமையும் மிகுந்த நாடுகள் ஒரு புறமும், நிலப்பரப்பில் சிறியதாகவும், பொருளாதார துறைகளிலும் பின் தங்கிய நாடுகளும் இருக்கும் நிலையுமே தெற்காசிய நாடுகளுக்கு இடையே நெருக்கமான இணக்கப்பாடு ஏற்படுவதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதும் அவர் கருத்தாக இருக்கிறது.

இந்தியா சில விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும்



ஐரோப்பிய ஒன்றியத்தை போல தெற்காசிய நாடுகள் இணைந்து செயற்பட முடியாததற்கு அரசியல் ரீதியான காரணங்களுக்கு அப்பாற்பட்டு அப்பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகள் இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள் எடை போடுகிறார்கள் என்பது போன்ற வேறு காரணங்களும் இருக்கின்றன எனவும் பேராசிரியர் சகாதேவன் கூறுகிறார்.

தெற்காசிய நாடுகளிலேயே பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் பங்களிப்பு கூடுதலாக இருந்தாலும், அரசியல் பொருளாதார ரீதியில் சில விட்டுக்கொடுப்புகளை இந்தியா செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவின் கொள்கைகளில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன எனவும் டாக்டர் சகாதேவன் கூறுகிறார்.

Read more...


அமைச்சர் மில்ராய் பெர்ணாண்டோ


“ஆறு மாதத்தில் மீள்குடியேற்றம்”


அமைச்சர் மில்ராய் பெர்ணாண்டோ
போரினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனைவரும் இன்னும் ஆறு மாத காலத்தினுள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என இலங்கையின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைச்சராகப் பதவியேற்றுள்ள மில்ராய் பெர்னாண்டோ தெரிவித்திருக்கின்றார்.
வவுனியாவில் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈடு ஒரு சிலருக்கு மாத்திரமே கிடைத்திருக்கின்றது. பலருக்குக் கிடைக்கவில்லை.

பல வீடுகள் முற்றாக அழிந்திருப்பதனால், மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் தற்காலிக வீடுகளில் மூன்று நான்கு குடும்பங்களாகச் சேர்ந்து வசிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள்.

இவர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் புதிய வீடுகளை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்ணி வெடியகற்றும் வேகத்திற்கு ஏற்ப மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.


இடம்பெயர்ந்துள்ளவர்களின் பிரதேசங்களில் உள்ள கண்ணிவெடிகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்குமானால், நாளையே இடம்பெயர்ந்தவர்கள் அனைவரையும் மீள்குடியேற்றம் செய்துவிட முடியும்





மீள்குடியேற்றப்பட்டுள்ளவர்களின் இழப்பீடுகள், வீடமைப்பு மற்றும் தொழில் முயற்சிகளுக்கான விடயங்களில் காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறினார்.

இதற்கிடையில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்து கடந்த இரு தினங்களில் நிலைமைகளை நேரடியாக ஆராய்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றா

Read more...

>> Wednesday, April 28, 2010



இந்திய சினிமா தடை தொடரும்?


வங்கதேச திரைப்படக் காட்சி ஒன்று
வங்கதேச திரையரங்குகளில் இந்திய திரைப்படங்களை திரையிடுவது என்று அந்த நாட்டு அரசாங்கம் கடந்த வார இறுதியில் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்குமாறு தாம் அழுத்தம் கொடுத்ததாக வங்கதேச சினிமா நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கூறியிருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படங்கள் ஆயிரக்கணக்கான வேலைகளை துப்பரவாக ஒழித்துவிடும் என்று அவர்கள் முறையிடுகிறார்கள்.

இது குறித்து அரசாங்கத்திடம் இருந்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

ஆனால், இந்தியத் திரைப்படங்கள் மீதான தடை நீக்கப்பட மாட்டாது என்று பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட வகையில் கூறியதாக முன்னணி வங்கதேச திரை நட்சத்திரமான ரஷாக் பிபிசியிடம் கூறியுள்ளார்.

ஆகவே இந்திய திரைப்படங்களை கண்டிக்கும் வகையில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்கனவே திட்டமிட்டபடி நடக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வங்கதேச திரையரங்குகள் இந்திய திரைப்படங்களைக் காண்பிக்கத் தொடங்கினால், 25,000 பேர் வேலைகளை இழக்கும் நிலை உருவாகும் என்று திரைப்படத் துறை தலைவர்கள் கூறுகிறார்கள்.


திரையரங்கு ஒன்று
உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களையும், உள்ளூர் கலாச்சாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று கூறி வங்கதேசத்தில், 1972 களில் இந்திய திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், வங்கதேசப்படங்கள் போதிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெறவில்லை என்றும், ரசிகர்கள், திருட்டு வீசிடிக்கள் மூலம், தமது வீடுகளிலேயே இந்தித் திரைப்படங்களை பார்க்கிறார்கள் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆபாசத் திரைப்படங்களை திரையிட்ட திரையரங்குகள் மீது முன்னாள் அரசாங்கம் தடைகளைக் கொண்டுவந்தது. அவற்றில் சில இன்னமும் மீண்டும் திறக்கப்படவில்லை.

திரையரங்குகளுக்கு உதவும் வகையில் இந்திய திரைப்படங்களுக்கான தடை நீக்கப்படும் என்று கடந்த சனிக்கிழமை வணிக அமைச்சர் அறிவித்தார். ஆனால் தற்போதைக்காவது இந்தத்தடை அகற்றப்படாது போலத்தான் தென்படுகிறது என்கிறார் எமது செய்தியாளர்.

Read more...


நாய்களுக்கான இரத்த வங்கி


நாய்களின் இரத்தம் சேமிக்கப்பட்டு வைக்கப்படும் இடம்
ஆசியாவில் நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் திறந்து வைக்கப்பட்டிருப்பதாக தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான டாக்டர். பி. தங்கராஜு தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.

டாக்டர் தங்கராஜு பேட்டி

துரித நகரமயமாதல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தல் காரணமாக வீட்டு வளர்ப்பு விலங்குகள் விபத்தில் சிக்குதல் மற்றும் காயமடைதல் அதிகரித்துள்ளன.

ஆகவே அவ்வாறான சந்தர்ப்பங்களில் அத்தகைய விலங்குகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு அவற்றுக்கான இரத்த சேமிப்பு அவசியமாகிறது. அந்த வகையில் ஆசியாவிலேயே நாய்களுக்கான முதலாவது இரத்த வங்கி சென்னையில் தற்போது திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.


நாயொன்றிடம் இருந்து இரத்தம் எடுக்கப்படுகிறது
வீதிகளைக் கடக்கும் போதும், அடுக்குமாடி வீடுகளில் இருந்து விழுவதன் மூலமும் நாய்கள் அடிக்கடி காயமடைகின்றன. ஆகவே அவற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கான போதிய இரத்தம் உடனடியாக கிடைக்காவிட்டால் அவை இறக்கும் வீதமும் அதிகரிக்கும் என்றும் டாக்டர். தங்கராஜு கூறுகிறார்.

ஒரு வயது முதல் 8 வயது வரையிலான மற்றும் சுமார் 20 கிலோ எடையுடைய நாய்கள் இங்கு இரத்ததானம் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவெங்கிலும் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நாய்களில் 10 வீதம் விபத்துக்களால் காயமடைந்த நிலையிலேயே வருகின்றன.

Read more...


நிர்வாக சேவையில் சிறுபான்மையினர்


இலங்கை நிர்வாக சேவை
இலங்கை நிர்வாக சேவையில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான உரிய சட்டங்கள் தேவை என்று முன்னாள் நிர்வாக சேவை அதிகாரியான பிரதாபன் இராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இராமானுஜம் செவ்வி

இலங்கை நிர்வாக சேவையில், அதிலும் குறிப்பாக அமைச்சுக்களின் செயலாளர் போன்ற உயரிய பதவிகளில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் போதாது என்று பல தரப்பாலும் குறை கூறப்பட்டு வருகின்றது.

இலங்கையின் புதிய அமைச்சரவையின் பல்வேறு அமைச்சுகளுக்கு தலைமை தாங்கும் செயலாளர்கள் பட்டியல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் ஓரிரு அதிகாரிகளே, தமிழ், முஸ்லீம் போன்ற இனச்சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இலங்கை போரின் காரணமாக பல தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று விட்டதன் காரணமாகவே அவ்வாறு நிர்வாக சேவையில் போதிய அளவு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தற்போது இல்லை என்று இராமானுஜம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அத்தகைய சேவைகளுக்கு ஆட்களைச் சேர்க்கின்ற போது சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு செய்வதற்கான சட்டங்களும் தற்போது இலங்கையில் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னர் ஆர். பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அப்படியான இட ஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட போதிலும், பின்னர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றினால், அந்த ஏற்பாடு ரத்துச் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே அரசியலமைப்புக்கு அமையும் வகையில் அவ்வாறான சட்டம் ஒன்று மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேவேளை அமைச்சு செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளுக்கான நியமனங்களின் போது ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி நிர்வாக சேவைக்கு வெளியே இருந்தும் ஆட்களை நியமிக்க முடியும் என்றும் இராமானுஜம் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே அப்படியான வசதிகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு சில சாதகமான நியமனங்களை செய்ய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.

Read more...


தமிழகத்தில் பந்த் தோல்வி


சில மாநிலங்களில் மாத்திரம் கடையடைப்பு வெற்றிபெற்றது
விலைவாசி உயர்வைக் கண்டித்தும், நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று குறை கூறியும் இடது சாரி கட்சிகள் மற்றும் அவற்றின் தோழமைக்கட்சிகள் அகில இந்திய அளவில் இன்று நடத்திய 12 மணிநேர பாரத் பந்திற்கு தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பில்லை.
பஸ்கள், ரயில்கள் வழக்கம் போல ஓடின. சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. இடதுசாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டும் தங்கள் ஆட்டோக்களை இயக்கவில்லை ஆங்காங்கே சில கடைகள் மூடப்பட்டிருந்தன.

தொழில் நகரமான கரூர் போன்ற இடங்களில், மின் வெட்டு காரணமாக பாதிக்கப்பட்ட தொழில் அதிபர்கள் தங்கள் நிறுவனங்களை மூடிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

ஓரிரு இடங்களில் சில வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மற்றபடி குறிப்பிட்டு சொல்லும்படியாக பாதிப்பு எதுவும் இல்லை.


சில இடங்களில் பொதுப்போக்குவரத்து பாதிப்பு
சட்டமன்றத்தில் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் இன்று காலை அவை கூடியதும் விலைவாசி உயர்வு, பந்த் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினர்.

கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம் என்று பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் கூறினார். ஆனால், அதை ஏற்காமல் அவையின் மையப் பகுதிக்கு வந்து அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவர்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு உத்திரவிட்டார் ஆவுடையப்பன்.

அதே போல புதுச்சேரி சட்டசபையில் இதே பிரச்சினையை முன்வைத்து அதிமுக, மதிமுக மற்றும் இந்திய கம்யூனி்ஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இடதுசாரிகளின் ஆட்சியில் உள்ள் சில மாநிலங்களில் முழுமையான கடையடைப்ப்பு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

Read more...

>> Tuesday, April 27, 2010



பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு கையாலாகாத ஒரு தமிழனின் கடிதம்


[ பிரசுரித்த திகதி : 2010-04-26 12:08:46 PM GMT ]


அன்புள்ள சுபவீ வணக்கம்.

கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது.

வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

இப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.

"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, `உதவிட இயலுமா?` என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?

சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே `இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்` என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?

இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்.

கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், அருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார்.

உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?

நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.

ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?

நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.

நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக‌ தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம்.

நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். “இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?” என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக‌ இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,

கையாலாகாத ஒரு தமிழன்

வெல்க‌ தமிழ்! வீழ்க தமிழன்!

நன்றி : கீற்று

Read more...


குட்டிமணியின் கதிதான் பொன்சேகாவுக்கும் கிடைக்கப் போகிறது..! – பழ.நெடுமாறன் பேட்டி..!


[ பிரசுரித்த திகதி : 2010-04-26 05:37:28 PM GMT ]


தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி இது..!

“மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன! நெஞ்சில் கொஞ்சம் இரக்கத்தையும் ஈரத்தையும் வைத்திருப்பவர்கள் அத்தனை பேரையும் ரத்தக் கண்ணீர் வடிக்கவைத்த ஈழத்துக் கொடூரங்கள் அரங்கேறி ஓராண்டு முடியப்போகிறது.

இறந்து மண்ணுக்குப் போனவர் எண்ணிக்கைகூட முழுமையாக இன்னமும் எடுக்கப்படவில்லை. மனரீதியாக இறந்துபோய் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்போர் நிலை குறித்தும் முழுமையாக அறிய முடியவில்லை. ஆனால், அவர்கள் இரண்டு தேர்தலை நடத்தி முடித்துவிட்டார்கள்.

கோமா நிலையில் கிடக்கும் ஈழத்தின் இன்றைய நிலவரங்கள் குறித்து அறிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைச் சந்தித்தோம்…

”ஈழத்துக் கொடூரங்கள் நடந்து முடிந்து ஓராண்டு ஆகப்போகிறது. என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்பட்டுஉள்ளன?”

கொடூரங்கள் நடந்து முடியவில்லை. இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈழத் தமிழர் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஏமாற்றமே இன்னமும் தொடர்கிறது. மேலும் மேலும் துன்பம் அதிகமாகி வருகிறது. முள்வேலி முகாமில் இருந்த மக்களை உலக நிர்பந்தத்துக்குப் பயந்து விடுவிப்பதாக ராஜபக்சே கூறினார். முழுமையாக விடுவிக்கவில்லை. ஒரு பகுதி மக்களையே விடுவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்டவர்களும் தங்களது ஊருக்குப் போனால் அவர்கள் வீடுகள் எல்லாம் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டு உள்ளன. எனவே, இருப்பதற்கு இடம் இல்லாமல் பள்ளி, கோயில்களில் அடைக்கலம் புகுந்தார்கள். அவர்கள் தங்களது சாப்பாட்டுக்காக விவசாயம் பார்க்கவோ மீன் பிடிக்கப் போகவோ சிங்கள ராணுவம் அனுமதிக்க மறுக்கிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், ‘வன்னிப் பகுதியில் ஏராளமான ராணுவ முகாம்கள் இருப்பதால் தமிழ்ப் பெண்கள் வெளியே நடமாட அஞ்சுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். முகாம்களில் இருப்பவர்களுக்கும் அளிக்கப்பட்டு வந்த உதவிகள் அரைகுறையாகவே கிடைக்கின்றன.

சுதந்திரமாக நடமாடலாம் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தாலும், எங்கு போவது என்று தெரியாமல் திகைத்துப் போயிருக்கிறான் தமிழன். முகாம்களில் இல்லாத தமிழர்கள், சிங்கள ராணுவம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற குழுக்களால் அதிகமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

இதைவிடக் கொடுமையான செய்தி என்னவென்றால், இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்காகக் கொடுத்த 1,000 கோடி ரூபாய் பணத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகிறார்கள். அவர்களுக்காக புத்தக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன.

சிங்களப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. தமிழ்ப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்க் குழந்தைகள் சிங்களம் படித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

தமிழ்ப் பெயர் தாங்கிய ஊரின் பெயர்கள் சிங்களமாக மாற்றப்படுகின்றன. அதாவது, தமிழ்ப் பகுதிகள் என்று இலங்கையில் எதையும் சுட்டிக் காட்டிவிடக் கூடாது என்பதற்கான வேலைகள்தான் இந்த ஓராண்டு காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன!

”ஜனாதிபதி தேர்தலில் வென்றது மாதிரியே நாடாளுமன்றத் தேர்தலிலும் ராஜபக்சே வென்றிருக்கிறார். இந்தத் தொடர் வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் 70 சதவிகிதத் தமிழர்கள் இந்தத் தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள். அதாவது, சிங்கள தேசத்தின் இனவாத அரசியலுக்குள் எமது நலன்களைத் தேட நாங்கள் விரும்பவில்லை என்பதைத்தான் இந்தப் புறக்கணிப்பின் மூலம் தமிழர்கள் உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்கள்.

பொதுவாகவே, இலங்கையில் இதுவரை நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் 75 சதவிகித வாக்குகள் பதிவாகும். ஆனால், வரலாற்றில் முதன்முறையாக 55 சதவிகித வாக்குகள்தான் பதிவாகி உள்ளன. தமிழ் மக்கள் மட்டுமல்ல; சிங்கள மக்களும் இந்தக் கேலிக்கூத்தான நடைமுறைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன!

“பொன்சேகா, தனது தொகுதியில் வெற்றிபெற்றுள்ளாரே?”

”ராஜபக்சே, பொன்சேகா மோதலின் விளைவாக சிங்கள மக்கள் பிளவுபட்டு உள்ளார்களே தவிர, தமிழர்களுக்கு இதனால் எந்த ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை.

கடந்த ஆண்டின் இதே ஏப்ரல் மாதங்களில் நடந்த கொடுமைகளுக்கு அவர்கள் இருவரும்தானே காரணம். இவர்களின் மோதல் என்பது தேர்தல் மோதலாக மட்டும் நின்றுவிடாது. ராணுவத்துக்கும் மோதல் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. பொன்சேகாவுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் பதவியில் இருந்து விலக்கப்பட்டு உள்ளனர். இது ராணுவத்தினர் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா ஒரு உறுப்பினராக வென்றிருந்தாலும் அவரை நாடாளுமன்றத்துக்குள் வர அனுமதிக்க மாட்டார்கள். 1980-களின் முதற் பகுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்த டெலோ தலைவர் குட்டிமணி, சிறையில் இருந்தபோதே வட்டுக்கோட்டை தொகுதி உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், அவரை நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதிக்காமல் கொலை செய்துவிட்டார்கள். இந்தக் கதி பொன்சேகாவுக்கும் ஏற்படலாம்!

”இதையெல்லாம் உலக நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்கக் காரணம்?”

”வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை, சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுத்தாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது என்பதுதான் உண்மை.

போர்க் குற்றவாளியாக ராஜபக்சேவை மேற்கு நாடுகளும் ஐ.நா-வும் குற்றம் சாட்டி வருகின்றன. அதில் இருந்து தப்புவதற்கு அவர் பெருமுயற்சி செய்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் கூடிய நிரந்தர மக்கள் நீதிமன்றம் என்ற அமைப்பு நடத்திய விசாரணையின் இறுதியில் வழங்கப்பட்ட தீர்ப்பில் ‘ராஜபக்ஷே போர்க் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர்’ என்று தெளிவாகத் தீர்ப்பளித்து உள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு பிறகு, பிரிட்டிஷ் அரசாங்கம், ‘நாங்கள் இலங்கைக்கு இதுவரை ஆயுதம் வழங்கியதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். இனி வழங்கமாட்டோம்’ என்று மன்னிப்பு கேட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆயத்த ஆடைகளுக்கு இதுவரை கிடைத்து வந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்து செய்துள்ளது. உலக நாடுகள் இந்தக் கொடூரத்தை உணர்ந்துள்ளன.

ஆனால், இந்தியாதான் இன்னமும் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் உதவி செய்துவருகிறது. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் திரிகோணமலைக்குச் சென்று சிங்கள கடற்படைக்கு பயிற்சி அளித்து வருகிறது. தமிழ் மீனவர்களைக் காப்பாற்ற வக்கற்ற இந்தியக் கடற்படைக்கு ஏன் இந்த வீண் வேலை?

இந்திய அரசும் கருணாநிதி அனுப்பிய தூதுக் குழுவும் தவிர, உணர வேண்டியவர்கள் அனைவரும் ஈழத்துக் கொடுமையை உணர ஆரம்பித்து இருக்கிறார்கள்!

”சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் இந்த ஓராண்டு காலத்தில் அதிகமாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?”

இலங்கையில் சீனா அதிகமாகக் காலூன்றுவது இந்துமாக் கடல் மார்க்கம் அவர்களது கட்டுப்பாட்டில் போவதற்குத்தான் வழிவகுக்கும். இதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அவர்களைவிட இது இந்தியாவுக்குத்தான் பெரும் ஆபத்தாக முடியும்.

ஏற்கெனவே, இந்தியாவைச் சுற்றி உள்ள நேபாளம், மியான்மர், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சீனா பலமாக வேரூன்றிவிட்டது. பாகிஸ்தானும் நெருங்கிய கூட்டாளி ஆகி விட்டது. எஞ்சியிருந்த இலங்கையும் சீனாவின் பக்கம் சாய்ந்து விட்டது. இந்தியாவைச் சுற்றி சீனா உருவாக்கி வரும் பேராபத்தை டெல்லியில் உள்ளவர்கள் உணரவில்லை.

‘சீனாவைவிட நான் அதிகமாக உதவிகள் செய்கிறேன்’ என்று இந்தியா கையாளும் தந்திரம் தற்கொலைக்குச் சமம். இந்தியாவைத் தனது நேசநாடாக ராஜபக்சே எப்போ தும் நினைக்க மாட்டார். அதை டெல்லி எவ்வளவு விரைவாக உணர்கிறதோ அது நம்முடைய நாட்டுக்கு நல்லது!

”விடுதலைப் புலிகள் அமைப்பு இன்று இயங்குகிறதா?”

ஈழத் தமிழர் பிரச்னை இன்று உலகளாவிய பிரச்னையாக இருப்பதற்கு பிரபாகரனும் விடுதலைப்புலிகள் இயக்கமும் செய்துள்ள தியாகம்தான் காரணம். 30 ஆண்டுகாலம் புலிகள் நடத்திய போராட்டத்தால்தான் தமிழர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

2 லட்சம் தமிழர்கள் உயிர் இழந்தும், 45 ஆயிரம் புலிகள் வீர மரணத்தைத் தழுவியும், 10 லட்சம் தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ முடியாமல் அகதிகளாக வெளியேறியும், 5 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே எல்லாவற்றையும் இழந்து தவித்த ஈழத்து சோகம் சொல்லி மாளாது. ஆனாலும், தங்கள் துன்பத்துக்குத் தமிழீழமே தீர்வு என்பதைத் தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இப்போது நடந்திருப்பது தற்காலிகப் பின்னடைவு என்றுதான் கருதுகிறார்களே தவிர, எல்லாம் முடிந்துவிட்டது என்று எவரும் நினைக்கவில்லை. புலிகளை அழித்துவிட்டோம் என்று கொக்கரிக்கிற ராஜபக்சே, கூடுதலாக ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்கிறார். ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறார். புலிகள் அமைப்பு இயங்குகிறது, முன்னிலும் பலமாக இயங்குகிறது, அடுத்த தாக்குதலை அவர்கள் ஆரம்பித்தால் அது பலமானதாக இருக்கும் என்பது ராஜபக்சேவுக்குத் தெரியும்!

”ஏற்கெனவே கேட்கப்பட்டதுதான்… பிரபாகரன் இருக்கிறார் என்று இன்னமும் எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

பிரபாகரனின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து கிடைத்து வந்த தகவலை வைத்துதான் நான் உறுதியாகக் கூறுகிறேன். பிரபாகரன் உள்பட முக்கியத் தளபதிகளை ஒழித்துவிட்டதாக ராஜபக்சே சொல்வதை சிங்கள மக்களே நம்பவில்லை. இன்னமும் அவர்களுக்கு அச்சம் இருக்கிறது.

பிரபாகரன் தலைமையில் அந்தப் போராட்டம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம். எப்போது எந்தக் காலகட்டத்தில் என்பதை பிரபாகரன் மட்டுமே முடிவு செய்ய முடியும். உற்ற தருணம் நோக்கி அவர் காத்திருக்கிறார். அந்தக் காத்திருப்பு வீண் போகாது!

நன்றி : ஜூனியர்விகடன்

Read more...







'புலிகள்' 7 பேர் கைது


நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் சந்தேக நபர்கள் கைது
நெதர்லாந்து நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பு குறித்து நடத்தப்பட்ட கவனமான மற்றும் விரிவான புலனாய்வுகளை அடுத்து, அந்நாட்டின் தேசிய குற்றப் புலனாய்வு சேவைகள் அமைப்பினர் சந்தேகத்துக்குரிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.
இது தவிர 16 வீடுகள் மற்றும் வியாபார நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இதன் போது கணினிகள், காகித ஆவணங்கள், தொலைபேசிகள், புகைப்படங்கள், டிவிடிக்கள் ஆகியவை சோதனைக்கு உள்ளாயின.

மேலும் இந்த நடவடிக்கையின் போது 40,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.

நெதர்லாந்து நாட்டின் தேசிய குற்றப் புலானாய்வு போலீசாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் விடுதலைப் புலிகளுக்காக நிதிகள் சேகரிக்கப்பட்டமை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2002 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படி, அப்படியான அமைப்புகளுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதரவு வழங்குவது சட்டப்படி பொருளாதாரக் குற்றமாக கருதப்படும்.

மேலும் இந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் ஆராயப்படுகின்றது.


குமுதம் விவகாரம்- விசாரிக்க குழு


குமுதம் பப்ளிகேஷன்சின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜன்
குமுதம் நிறுவன விவகாரம் குறித்து விசாரிக்க குழு ஒன்றை தமிழக அரசு நியமிக்கும் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு கருணாநிதி சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு குமுதம் பப்ளிகேஷன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பி வரதராஜன் பலகோடி ரூபாய் மோசடி செய்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழக சட்டமன்றத்தில் திங்கட்கிழமையன்று விவாதிக்கப்பட்டது.

குமுதம் பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனின் புகாரின் பேரில்தான் வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்று கூறிய முதல்வர் மு கருணாநிதி, தமது அரசு பத்திரிகை சுதந்திரத்தை மதித்தே நடக்கும் என்றும், தமிழ்நாட்டின் முன்னணி வார இதழான குமுதம் நிர்வாகிகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

குமுதம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பு வகிக்கும் பி.வரதராஜன் கடந்த வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு, அன்றிரவே சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆறு லட்ச ரூபாய் சம்பளத்தை 10 லட்சம் ரூபாயாக திருத்தி, பல கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்தார் என்று வரதராஜன் மீது பழனியப்பன் புகார் கூறியிருந்தார்.

ஆனால் வரதராஜனோ, தன்னிடமுள்ள பங்குகள் அனைத்தையும் தன்னிடம் விற்றுவிடுமாறு பழனியப்பன் தன்னை வற்புறுத்தினாரென்றும் அதற்கு தான் மசியாததால் தன் மீது வீண்பழி சுமத்துவதாகவும் கூறுகிறார்.



தமிழர் எதிர்ப்பு-அமிதாப் பரிசீலனை


சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமி முத்திரை
சர்வதேச இந்திய திரைப்பட அக்கடமியின் விருது வழங்கும் விழா இலங்கையில் நடத்தப்படவுள்ளமை குறித்து தமிழர் அமைப்புக்களால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அடுத்து அதன் ஏற்பாட்டுக்குழு உடனடியாகக் கூடி விவாதிக்கவுள்ளதாக அந்தக் குழுவின் விளம்பரத் தூதுவரான நடிகர் அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா ஜூலையில் இலங்கையில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் அரசாங்கப் படைகளால் அநியாயமாக கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்ற இந்திய தமிழர் அமைப்புக்கள் இந்த விழாவை இந்திய திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

அத்துடன் இந்த விழாவின் ஏற்பாட்டில் முக்கியஸ்தராக திகழுகின்ற சர்வதேச இந்திய திரைப்பட அமைப்பின் விளம்பர தூதுவரான நடிகர் அமிதாப் பச்சனும் இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள்.

அதன்படி ''நாம் தமிழர் இயக்கத்தினர்'' அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றையும் மும்பையில் ஞாயிறன்று நடத்தினார்கள்.


அக்கடமியின் உறுப்பினர்கள் சிலர்
அதனையடுத்து கருத்து வெளியிட்டிருக்கின்ற நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள், அனைவரின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக இணையத்தில் கருத்து வெளியிட்டிருக்கின்ற அமிதாப்பச்சன் அவர்கள், அந்த ஏற்பாட்டுக் குழுவினர் போராட்டம் நடத்தியவர்களை சந்தித்துப் பேசியதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர் ஒன்றையும் அவர்கள் பெற்றுக் கொண்டதாகவும் கூறினார்.

அத்துடன் இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக அந்தக் குழுவினர் உடனடியாக கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து ஒரு இறுதி வழியையும், தீர்வையும் காண அவர்கள் முயற்சிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


'ஐ.பி.எல்.லில் ஊழல்': மோடி இடைநீக்கம்


லலித் மோடி
இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த அதன் தோற்றுநர் லலித் மோடி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து இடைக்காலத் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் நடந்த மூன்றாம் வருட ஐ.பி.எல். பந்தயத்தின் இறுதி ஆட்டம் முடிந்த சற்று நேரத்தில் மோடியை இடைநீக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

மோடிக்கு எதிராக இருபதுக்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகள் முன்வைக்கின்றனர்.

அணிகளை ஏலம் விட்டதில் முறைகேடு, நிதி மோசடி , தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமங்கள் வழங்கியது தொடர்பில் எட்டு கோடி டாலர்கள் கட்டணம் பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

இது தவிர வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் மீது தனிப்பட்ட விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவருக்கு இரண்டு வாரகால அவகாசம் தரப்பட்டுள்ளது.

லலித் மோடி

இந்திய மக்களின் இருபெரும் மோகங்களான கிரிக்கெட்டையும் சினிமா உலகையும் ஒரு வகையாகக் கலந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ள ஐ.பி.எல். யோசனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர் லலித் மோடிதான்.

ஐ.பி.எல்.லின் தலைவராக மரபு வழுவியும், படோடாபத்துடனும், தன்னிச்சையாகவும் அவர் செயல்பட்ட விதம் பலரை சீண்டிவிடுவதாய் இருந்தது.

லலித் மோடி அளவுக்கதிமான அதிகாரத்துடன் கோலோச்சுகிறார் என இந்தியாவின் கிரிக்கெட் நிர்வாக அமைப்பான பி.சி.சி.ஐ.யில் சில உறுப்பினர்கள் நினைத்திருந்தனர்.

சஷி தரூர்


சஷி தரூர்
ஐ.பி.எல்.லில் புதிதாக ஏலம் விடப்பட்ட இரண்டு அணிகளின் உரிமையாளர்கள் பற்றிய விபரத்தை லலித் மோடி வெளியிட்டிருந்தார்.

மத்திய அரசு துணை அமைச்சர் சஷி தரூரின் நண்பி ஒருவருக்கு ஓர் அணியில் இலவசமாக பங்கு வழங்கப்பட்டுள்ளது எனும் விதமாக மோடி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனை அடுத்து ஐ.பி.எல். மூலம் ஆதாயம் அடைகிறார் என்று சஷி தரூர் மீது இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பிரச்சினை செய்திருந்தனர்.

இதனால் எழுந்த அழுத்தம் காரணமாக சஷி தரூர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

அரசாங்கத்துக்கும் இவ்விவகாரம் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

அரசாங்கம் நடவடிக்கை

ஐ.பி.எல். மற்றும் அதன் அணிகளின் நிதி விவகாரங்கள் குறித்து பரந்துபட்ட ஒரு விசாரணைக்கு உத்தரவிடுவதாக அரசாங்கம் பதில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா பின்னணி கொண்டவராகக் கருதப்படும் லலித் மோடி மீது தற்போது தீவிரமான விசாரணைகள் நடத்தப்படுகிறன.

லலித் மோடி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துவருகிறார்.

மோடியின் இடைநீக்கத்துக்குப் பின்னர் ஆளும்கட்சிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சிராயு அமீன் என்பவர் ஐ.பி.எல்.லின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read more...

>> Monday, April 26, 2010






அவசர நிலை நீக்கம்: அரசு பரிசீலனை


இலங்கை வெளியுறவு அமைச்சர்
இலங்கையில் அவசர நிலையை ரத்து செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அதற்கான கால வரையறை எதனையும் அரசாங்கம் கொண்டில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து கரிசனைகள் வெளியிடப்பட்டு வந்துள்ள ஒரு சூழலில், அந்நாட்டில் அமலில் இருந்துவரும் அவசர நிலையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட அவசரகால சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தற்போது முற்றுப்பெற்றுவிட்ட நிலையில், நாட்டில அவசர நிலை தேவையில்லை என்ற கருத்தும் மேலோங்கிவருகிறது.

மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள், வெளியுறவு விவகாரங்களில் இலங்கையின் நிலையை முன்னேற்ற உதவும் என்று கருதப்படுகிறது.

நாட்டின் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ள ஒரு நிலையில், அரசாங்கம் சில பாதுகாப்பு விதிகள் குறித்து மீள்பார்வை செய்துவருவதாகவும், இதன் அடிப்படையில் அரசாங்கம் விரைவில் அறிவிக்கவுள்ள சில திட்டங்கள் சர்வதேச அரங்கில் வரவேற்பைப் பெறும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய அரசின் வெளிவிவகார கொள்கை

நாட்டின் பொருளாதாரமும் வேலை வாய்ப்பும் மேம்படும் வகையில் புதிய அரசின் வெளிவிவகார கொள்கை அமையும் என்று பீரிஸ் கூறினார்.

"நாட்டில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், மற்ற நாடுகளுடனான நல்லுறவுகளை மேம்படுத்துவதில் முனைந்து செயல்படுவது என்பதுதான் எமது வெளியுறவு கொள்கையின் அடிநாதமாக இருக்கும்." என்றார் அவர்.

சார்க்

பூட்டான் தலைநகர் திம்புவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் (சார்க்) மாநாடு நடக்கும்போது இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது என்றும் பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் அப்போது விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனாலும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்தப் பிரேரணையும் சார்க் கூட்டத்துக்கு இலங்கை அரசு கொண்டு செல்லவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

முதல்வர் விழாவில் வன்முறை


சென்னை உயர்நீதிமன்ற வளாகம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக முதல்வர் கருணாநிதி கலந்துகொண்ட விழாவில் அவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பிய சில வழக்கறிஞர்கள் விழா நடந்துகொண்டிருக்கும்போதே கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

சம்பவத்தின்போது அங்கிருந்த இரு தொலைக்காட்சி சானல்களைச் சேர்ந்த புகைப்படக்காரர்கள் மூவரும் காயமடைந்திருக்கின்றனர். அவர்களது காமிராக்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலையினை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

சிலை திறப்பிற்குப் பிறகு கருணாநிதி பேசத் துவங்கியபோது, மக்கள் கலை இலக்கியக் கழகம் எனும் அமைப்பைச் சேர்ந்த ஒரு சில வழக்கறிஞர்கள் கருப்புக் கொடிகளை வீசிய வண்ணம், "வழக்கறிஞர்களுக்கு நியாயம் வழங்காத கருணாநிதி பேசக்கூடாது" என முழக்கங்கள் எழுப்பினர்.


சென்ற வருடம் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போலீசார் இடையே மோதல்கள் நடந்திருந்தன
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கு இடையே நடந்த மோதல்கள் தொடர்பாக போலீசார் எவர் மீதும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, அவர்கள் தங்கள் எதிர்ப்பை அவ்வாறு தெரிவித்தனர்.

உடனே பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் வெகுண்டெழுந்து, வழக்கறிஞர்கள் மீது நாற்காலிகளை வீசத்தொடங்கினர். இன்னும் சிலர் நேரடியாக அவர்களை நெருங்கி தாக்கத் தொடங்கினர்.

சம்பவங்களை வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி சானல் நிருபர்களும் தாக்குதலுக்குள்ளாயினர்.

சற்று நேரம் மோதல் நடந்த பிறகு, போலீசார் தலையிட்டு அடிபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டி முழக்கங்கள் எழுப்பியவர்களில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால் வழக்கறிஞர்களும் தொலைக்காட்சி சானல்களைச் சேர்ந்தவர்களும் தாக்கப்பட்டது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் அழைப்பு


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஈ.பி.டி.பி கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்.

டக்ளஸ் செவ்வி

யுத்தம் முடிவடைந்துள்ள சூழ்நிலையில் சகல தமிழ் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தமிழோசையிடம் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அரசியல் தீர்வுதிட்டத்தின் அவசியம் பற்றியும் அதற்கான தமது ஒத்துழைப்பு பற்றியும் வெளியிட்ட கருத்தினை வரவேற்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெவரிவித்தார்.

13வது அரசியல் சட்டதிருத்தத்தை அடித்தளமாகக் கொண்டு அரசியல் தீர்வுத்திட்டம் நோக்கிய பயணித்தை அனைத்து தமிழ் கட்சிகளும் ஆரம்பிக்க முன்வரவேண்டும் என கோருவதாகவும் அவர் கூறினார்.

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவங்கள் இனிமேலும் தொடராதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்குடாநாட்டில் உளவுப்பிரிவினரின் பெயரில் சட்டவிரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தவிர்ப்பதற்காக மக்கள் பொலிசாருடனோ அல்லது ஊர் மக்களுடனோ இணைந்து செயற்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.


தொண்டாமானும் அமைச்சுப் பதவியும்?


ஆறுமுகன் தொண்டமான்
தோட்டத் தொழிலாளர்களின் அபிவிருத்திகளை கவனிக்கும் அமைச்சு கிடைக்காததால்தான் ஆறுமுகம் தொண்டமான் இலங்கை அரசில் அமைச்சராக பொறுப்பேற்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது.
அவருக்கு கால்நடை அபிவிருத்து அமைச்சு மட்டுமே இம்முறை கொடுக்கப்பட்டது என்றும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமது கட்சி இல்லை என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான முத்து சிவலிங்கம் தமிழோசையிடம் தெரிவித்தார்.


முத்துசிவலிங்கம் பேட்டி

இந்த விடயத்தை தமது தரப்பு ஜனாதிபதியிடம் முன்னரே தெரிவித்ததாகவும், அதை அடுத்தே வெள்ளிக்கிழமையன்று தொண்டமானுக்கு அமைச்சர் பதவி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் முத்து சிவலிங்கம் கூறுகிறார்.

மலையகம் வாழ் மக்களின் அபிவிருத்திகளுக்கான சில துறைகளை ஒன்றிணைத்து ஒரு அமைச்சு வழங்க அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


முத்து சிவலிங்கம்
ஜனாதிபதியை தாங்கள் சந்தித்து உரையாடியுள்ள நிலையில் தாங்கள் நம்பிக்கையுடனேயே இருப்பதாகவும் பொருளாதார அபிவிருத்தி துறையின் துணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள முத்து சிவலிங்கம் கூறுகிறார்.

கடந்த நாடாளுமன்றத்தை விட தற்போது இலங்கை தொழிலாளர் கட்சிக்கு குறைவான உறுப்பினர்களே இருந்தாலும் தமது பேரம் பேசும் திறன் குறைந்துவிடவில்லை என்றும் அவர் கருத்து வெளியிடுகிறார்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கும் மலையக மக்களை தமது கட்சி சார்ந்துள்ளதால் அரசு தம்மை ஒதுக்கி விடமுடியாது என்று தாங்கள் கருதுவதாகவும் முத்து சிவலிங்கம் கூறுகிறார்.


இலங்கையின் முழுப் பொருளாதாரத்தையும் கையில் அடக்கிய மக்களைக் கொண்டவர்கள் நாங்கள்


முத்து சிவலிங்கம்

மலையகப் பகுதியில் தமது கட்சிக்கு பலமான ஆதரவு இருப்பதாகவும் அதன் காரணமாக தங்களை யாரும் சுலமபாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

நடப்பு நாடாளுமன்றத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தமைக்கு அரசியல் மாற்றங்கள் மற்றும் மக்கள் மாறி மாறி வாக்களிப்பதே காரணம் எனவும் கூறும் அவர், அது தமது அடித்தளத்தை பாதிக்காது என்றும் கூறுகிறார்.

Read more...

>> Friday, April 23, 2010


சரத் பொன்சேகா கன்னி உரை


நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலைபெற வேண்டும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா தனது முதலாவது நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த 12 தினங்களில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதை அடுத்து சரத் பொன்சேகா அவர்கள் பொது இடத்தில் பேசிய முதலாவது தருணம் இதுதான்.

சுருக்கமான தனது உரையில், முதலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரை வாழ்த்திய பிறகு, பொன்சேகா அவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தாக்கிப் பேசினார்.

இலங்கைக்கு, ஜனநாயகமும், சட்டத்தின் ஆட்சியும், தனிநபர் மற்றும் ஊடக சுதந்திரமும் தேவை என்று அவர் கூறினார்.

தான் வருத்தத்துடன் பேசுவதாக கூறிய அவர், பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வெள்ளை உடையில் வந்திருந்த பொன்சேகா அவர்கள், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன், பார்வையாளர் அமரும் பகுதியை நோக்கி கையசைத்தார்.

அவர் இராணுவ தளபதியாக இருந்த காலத்தில் அரசியலில் தலையீடு செய்தார் என்ற குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒரு இராணுவ நீதிமன்றத்தின் முன்னர் விசாரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று மறுத்துள்ள அவர், அந்த இராணுவ நீதிமன்றம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும் கூறுகிறார்.

அரசாங்கம் சரத் பொன்சேகா விடயத்தை மிகவும் சிக்கலுக்குரிய விடயமாக பார்க்கிறது.

செய்தியாளர்கள் அவரை அணுக அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் நாடாளுமன்ற முதல் நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்ட அரசாங்க தொலைக்காட்சி, அவரது பங்களிப்பை புறக்கணித்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரரான சாமல் ராஜபக்ஷ அவர்கள் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


ஐ.தே.மு. இலிருந்து திகாம்பரமும் விலகினார்


சிக்கலில் ரணில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பீ. திகாம்பரம் ஐக்கிய தேசிய முன்னணியியிலிருந்து விலகி தனித்து இயங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

திகாம்பரம் செவ்வி

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கப் போவதாகவும்
அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் திகாம்பரம் கூறியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஜெனரல் பொன்சேகாவை ஆதரித்த தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் பீ.திகாம்பரம், நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியின் கீழேயே போட்டியிட்டார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் தமக்கும் தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளதாக திகாம்பரம் தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதப்போக்கு இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் அந்தக்கட்சி தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் திகாம்பரம் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலே தவிர எதிர்காலத்திலும் அந்தக் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழோசையிடம் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் கருத்துக்கள் நகைப்புக்கிடமானவை என தெரிவித்தார்.


அரசாங்கத்துக்கு தாவும் முயற்சிகளாகவே ஐ.தே.க மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன


ரவி கருணாநாயக்க

அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு இந்தக் கட்சிகள் மேற்கொள்ளும் தந்திரோபாய நடவடிக்கையாகவே இத​னைப் பார்ப்பதாக ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இந்தக்கட்சிகளுக்கு தேசியப் பட்சியல் உறுப்புரிமை வழங்குவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவினால் எந்தவிதமான வாக்குறுதிகளும் அளிக்கப்படவில்லையெனவும் ரவி கருணாநாயக்க கூறினார்.


வட ஐரோப்பா வழமைக்கு திரும்பியது

மீள ஆரம்பித்துள்ள விமானசேவைகள்
ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் காரணமாக கடந்த ஐந்து நாட்களாக விமான போக்குவரத்தில் நீடித்த தடைக்குப் பின்னர் வட ஐரோப்பிய வான்போக்குவரத்து பாதை பெரும்பாலும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
ஒரு வாரத்துக்குரிய முழுமையான எண்ணிக்கையில் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் குறைந்தளவான சேவை ரத்துகளே எதிர்பார்க்கப்படலாம் எனவும் ஐரோப்பிய வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் நோர்வேயும் சுவீடனும் தமது வான் போக்குவரத்து மார்க்கத்தில் சில பகுதிகளை மீண்டும் மூடியுள்ளன.

காற்றில் புதிய சாம்பல் மேகங்கள் அள்ளுண்டு வந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்கள் பல முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடையை விமர்சித்துள்ளன.

இரண்டு பில்லியன் டொலர்கள் வரை நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கூறும் இந்த நிறுவனங்கள் நிதி ரீதியான உதவிகளை கோரியுள்ளன.

தென்னிந்தியாவிலும் ஐரோப்பிய சேவைகள் தொடங்கின


விமான சேவைகள் மீளத்தொடங்கின
இதேவேளை தென்னிந்தியாவிலும் ஐரோப்பாவுக்கான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன.

எனினும் கடந்த ஆறு நாட்களாக இருந்த தடைகளால் ஏற்பட்ட தேக்க நிலை காரணமாக விமான சேவைகளை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பின் தமிழ் நாட்டு பிரிவுத் தலைவர் ஐ. பஷீர் தெரிவித்தார்.

ஏற்கனவே இடைவழியில் பயணம் தடைப்பட்டவர்களை விட புதிய பயணிகளுக்கே தற்போது அனுமதி வழங்கப்படுவதாகவும் தொடர்ந்தும் தேக்கநிலை ஏற்படுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பயணம் தடைப்பட்டவர்களுக்கு வேறு தினங்கள் ஒதுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Read more...

>> Thursday, April 22, 2010


சமரான்ச் காலமானார்


யுவான் அண்டோனியோ சமரான்ச்
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் யுவான் அண்டோனியோ சமரான்ச் காலமானார். ஸ்பெயினில் ஒரு மருத்துவமனையில் இறந்த இவருக்கு வயது 89.
சமரான்ச் ஒரு பலமான மற்றும் ஒன்றுபடுத்தப்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தை கட்டியமைத்தவர் என்று தற்போதைய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஷாக் ரோஹ்ஹ சமராஞ்சுக்கு அஞ்சலி செலுத்தினார்.

1980லிருந்து 2001ம் ஆண்டுவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக பதவி வகித்த சமரான்ச் அந்த அமைப்பின் தலைவராக நீண்டகாலம் பதவி வகித்தவர்களில் இரண்டாமவர்.

ஏறக்குறைய திவாலாகும் நிலையிலிருந்த ஒலிம்பிக் இயக்கத்தை , தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வருமானம் ஈட்டும் விளம்பர ஆதரவு போன்றவைகளை ஈர்த்ததன் மூலம், ஒலிம்பிக்கை ஒரு பல கோடிக்கணக்கான டாலர்கள் ஈட்டும் வர்த்தக காட்சிப்பொருளாக்கினார் சமராஞ்ச். ஆனால் இந்த சீர்திருத்தங்கள் ஒலிம்பிக் லட்சியங்களுக்கு எதிரானவை என்று சிலர் விமர்சித்தனர்.

Read more...





இலங்கையின் புதிய பிரதமர் ஜயரட்ண

இலங்கையின் புதிய பிரதமராக தி மு ஜயரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை மாலை அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்கும் தி மு ஜயரட்ண



இவர் இலங்கையின் 14 ஆவது பிரதமர்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து கட்சிகள் தேசியப் பட்டியலுக்கான தமது உறுப்பினர்களை நியமித்துள்ளன.

ஆளும் கூட்டணியின் பட்டியலில் த மு ஜயரட்ண இடம் பெறுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இருக்கும் பெரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களின் டி எம் ஜெயரட்ணவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் 17 பேரும், ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் 9 பேரும், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் ஒருவரும், தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் இருவரும் தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமானவர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கூட்டணியின் பட்டியலில் முன்னாள் பிரதமர் ரட்ணஸ்ரீ விக்ரமநாயக்க, மூத்த அமைச்சர்களாக இருந்த டல்லஸ் அழகப்பெரும, ஜி எல் பீரிஸ், டியூ குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் இருக்கின்றனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான முத்து சிவலிங்கம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவரான விநாயமூர்த்தி முரளிதரன், பிரபல திரைப்பட நடிகை மாலினி ஃபொன்சேகா உட்பட பலர் ஆளும் தரப்பு பட்டியிலில் இடம் பெற்றுள்ளனர்.

எதிர்கட்சிகள் தரப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில், ஐ தே க வின் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க, துணைத் தலைவர் டி எம் சுவாமிநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஐ தே க வில் இணைந்த யோகராஜன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஹஸன் அலி, அஸ்லாம் முகமது சலீம் உட்பட பலர் இடம் பெற்றுள்ளனர்.

மனோ கணேசனுக்கு இடம் இல்லை

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கு தேசியப் பட்டியலில் இடம் அளிக்கப்படவில்லை.

ஐ தே மு சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட மனோ கணேசன் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவின் தலமையில் செயற்படும் ஜனநாயக தேசிய முன்னணி, அனுர குமார திஸ்ஸநாயக்க மற்றும் டிரன் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



ரணில் மனோ உறவு முறிந்தது


கொடுத்த வாக்குறுதியை ரணில் மீறிவிட்டார்-மனோ கணேசன்
இலங்கையின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியிலிருந்து விலகுவதாக மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணி வாக்களித்தபடி தேசியப் பட்டியலில் நியமனம் வழங்கப்படாததை எதிர்த்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் தம்முடன் எழுத்துபூர்வகச் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி நடந்து கொள்ளவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.


கொடுத்த வாக்குறுதியை ரணில் விக்ரமசிங்க அவர்கள் காப்பாற்றவில்லை, எமக்கும் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டார் அதனால் கூட்டணியிலிருந்து விலகுகிறோம்


பிரபா கணேசன்

நாடாளுமன்றத் தேர்தலின் போது தமது கட்சிக்கு கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் ஒரு இடத்தை விட்டுக் கொடுப்பதற்கு ஈடாக தேசியப் பட்டியலில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஒரு இடம் வழங்கப்படும் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகவும் மனோ கணேசன் கூறுகிறார்.

அரசாங்கத்தை ஆதரிப்பது தொடர்பில் எந்த முடிவும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படவில்லை எனவும் பிரபா கணேசன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் அரச தரப்பு தம்முடன் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் பிரபா கணேசன் கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குளேயே இருக்கும் சில பேரினவாத நபர்களாலேயே தமது கட்சிக்கு தேசியப் பட்டியலில் இடம் கிடைக்காமல் போனது என்றும் பிரபா கணேசன் கருத்து வெளியிடுகிறார்.


ஐபிஎல்:தொடர் சோதனைகள்


பெரும் பணம் புழலும் ஐபிஎல் போட்டிகள் சிக்கலில் உள்ளன
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஒலி மற்றும் ஒளிபரப்பு உரிமைகளை பெற்றுள்ள மூன்று நிறுவனங்களின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
பெரும் பணம் புழலும் இந்தியன் பிரீமியர் லீகில் ஊழல்கள் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து நடைபெற்று வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனைகள் நடந்துள்ளன.

இந்தப் போட்டிகளில் புதிதாக இணைந்து கொண்ட கொச்சி அணி தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து இந்தியாவின் வெளிவிவகாரத் துறையின் துணை அமைச்சராக இருந்த சஷி தரூர் ராஜிநாமா செய்ய வேண்டிய நிலமை ஏற்பட்டது.

விளையாட்டு அரங்குகளுக்கு வெளியே விளையாட்டுகள்

விளையாட்டு அரங்குகளில் நடைபெறும் இந்தப் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, வெளியே எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்த தகவல்கள் மற்றும் செய்திகளிலேயே இந்திய மக்கள் ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.


லலித் மோடியுடன் விஜய் மல்லையா



ஊழல்,மோசடிகள்,நேர்மையற்ற தன்மை, போட்டிகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகையிலான சூதாட்டம், சட்ட விரோதமாக வெளிநாடுகளிலிருந்து பணத்தை இந்தியாவுக்குள் கொண்டுவருதல் போன்ற பல்வகையான குற்றச்சாட்டுகளுக்கு ஐ பி எல் ஆளாகியுள்ளது.

இப்போட்டிகளில் புதிதாக இணைந்து கொண்ட கொச்சி அணி தொடர்பான விடயத்தில் ஐபிஎல் ஆணையாளர் லலித் மோடிக்கும், இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சஷி தரூருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களை அடுத்தே இப்படியான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


பல்லாயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் இந்தப் போட்டிகளுக்கு பணம் எங்கிருந்து வந்தது, அவை எப்படி நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன என்பவை, அரசால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் அடங்கும்



கொச்சி அணியின் உரிமையாளர்களில், சஷி தரூரின் நெருங்கிய தோழியும் ஒரு பங்குதாரர் என்ற தகவலை மோடி வெளிப்படுத்த தரூர் அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

தற்போது இந்தப் போட்டியின் அனைத்து பண விடயங்கள் தொடர்பிலும் உச்சி முதல் பாதம் வரையான விசாரணைகள் தொடங்கியுள்ளன.

விசாரணைகளை அடுத்து பெரும் அளவில் பணம் புழலும் இந்தப் போட்டியில் மேலும் பல தலைகள் உருளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more...

>> Wednesday, April 21, 2010




திருகோணமலை முடிவு


தேர்தல் முடிவு
இலங்கையில் மறுவாக்குப்பதிவை அடுத்து இதுவரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி திருகோணமலை தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னிலை பெறுகின்றது. அடுத்த இடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், அதனையடுத்த இடத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இருக்கின்றன.

இருந்தபோதிலும், திருகோணமலை மாவட்டத்துக்கான ஒட்டுமொத்த முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே அங்கு ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளது.

அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு அந்த மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களும், இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு ஆசனமும் கிடைத்துள்ளன.

இலங்கையில் தேர்தல் முறைகேடுகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு பகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்புகள் இன்று நடந்து முடிந்திருக்கின்றன.

திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டிப் பகுதி மற்றும் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டிப் பகுதி ஆகிய இடங்களிலேயே இன்று வாக்குப் பதிவு நடந்திருக்கின்றது.

கும்புறுப்பிட்டியில் ஒரு வாக்களிப்பு நிலையத்திலும், நாவலப்பிட்டியில் முப்பதியேழு வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு நடந்தது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை, தேர்தல் முறைகேடுகள் காரணமாக மறுவாக்குப் பதிவு நடப்பது இதுதான் முதல் தடவையாகும்.

இந்த இரு இடங்களிலும் மறு தேர்தல் நடப்பதால், நாடாளுமன்ற தேசிய பட்டியல் ஆசனங்களுக்கான ஒதுக்கீடுகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த இரு இடங்களிலும் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் திருகோணமலை மற்றும் கண்டி மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சேவைகள் படிப்படியாக ஆரம்பம்


விமானப் பயணிகள்
வட ஐரோப்பாவின் சில பகுதிகளில் எரிமலை சாம்பல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட விமானங்கள் மீண்டும் படிப்படியாக பறக்க ஆரம்பித்திருக்கின்றன.
ஆனாலும் ஐரோப்பிய கண்டம் நெடுகிலும்,விமானப் போக்குவரத்தில் பாரிய அளவு நிலைகுலைவு தொடர்கிறது.

பிரிட்டிஷ் வான்பரப்பு பெருமளவில் மூடப்பட்டிருக்கிறது. லண்டனைச் சுற்றியுள்ள எல்லா பெரிய விமானநிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன.

ஆனால், பாரிசிலிருந்தும் ஆம்ஸ்டர்டாமிலிருந்தும் சில விமானங்கள் பறந்திருக்கின்றன. மேலும் தென் ஐரோப்பாவில், இத்தாலிய, ஸ்பானிய மற்றும் துருக்கிய விமான நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு தணிந்து கொண்டு வருவது போல் தோன்றினாலும், ஐரோப்பிய பெருநிலப்பரப்பை நோக்கி புதிய எரிமலைச் சாம்பல் மேகம் ஒன்று உமிழப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.

இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் சிப்பாய்கள் 500 பேர் ஸ்பெயினில் இருந்து பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலில் ஏறியிருக்கிறார்கள். எரிமலைப் புகை காரணமாக பிரிட்டிஷ் வான் பரப்பு பாதிக்கப்பட்டிருந்ததால், இவர்கள், சைப்பிரஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

கார் உற்பத்தியில் முடக்கம்

அதேவேளை, ஐஸ்லாந்தின் எரிமலை சாம்பல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகள் உலகெங்கும் வர்த்தகத்தின் மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன.

ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான, பிஎம்.டபுள்யூ கார் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள், குறிப்பாக மின்னணு பாகங்கள் கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக ஜெர்மனியில் அதற்கு இருக்கும் மூன்று தொழிற்சாலைகளில் உற்பத்தியை தான் இடைநிறுத்துவதாகக் கூறுகிறது.

ஜப்பானில், நிஸ்ஸான் கார் நிறுவனமும் அயர்லாந்திலிருந்து பாகங்கள் வருவதில் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், தயாரிப்புப் பணிகளை இடை நிறுத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனமும் கார் தயாரிப்பு வேலைகளில் ஒரு பகுதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

சீனாவில் தேங்கிக்கிடக்கும் ஏற்றுமதிப்பொருட்கள் குவிந்து வருவதாகவும், தென்கொரியாவில், பல லட்சக்கணக்கான மொபைல் தொலைபேசிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேங்கிக்கிடப்பதாகவும், வங்க தேசத்திலிருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவேண்டிய துணிமணிகள் மலை போல் குவிந்து கிடப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன


'தேவைக்கு அதிகமான எச்சரிக்கை'



ஐஸ்லாந்திலுள்ள எரிமலை வெடித்து சிதறியதால் வெளியான சாம்பலின் அளவுகள் மற்றும் அதன் தன்மைகளை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள், அறிவியல் குறிப்புகள் மற்றும் ஆய்வுகளைக் காட்டிலும் கணினி மூலமான வரைபடங்களை வைத்து தேவைக்கும் அதிகமாக கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டார்கள் என்கிற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.

இந்த எரிமலை வெடிப்பு விமானப் போக்குவரத்தின் மீது ஏற்படுத்திய முன்னுதாரணமற்ற பாதிப்பு காரணமாக ஐரோப்பிய வான் பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவுக்கு பின்னுள்ள அறிவியல் அடிப்படையை பல விமான நிறுவனங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

பிரிட்டனின் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் உண்மைகளின் அடிப்படையில் செயல்படாமல், அச்சத்தின் அடிப்படையில் செயல்பட்டது என்று விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது.

விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தர, உலக அளவில் அமைந்துள்ள ஒன்பது எரிமலை சாம்பல் தகவல் மையங்களில் இந்த பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமும் ஒன்று.

ஐஸ்லாந்து எரிமலை கடந்த வாரம் மீண்டும் வெடித்தபோது, பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் பயன்படுத்திய கணினி மாதிரிகள் இந்த எரிமலை சாம்பல் துகள்கள் விரைவாக பிரிட்டன் மற்றும் வட ஐரோப்பாவை மூடிவிடும் என்று கணித்தன.

இந்த கணிப்புதான், சுற்றுச்சூழலில் எந்த அளவுக்கு சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கக்கூடும் என்பது குறித்த துல்லியமான தரவுகள் இல்லாத நிலையிலும், வான்பரப்பை மூட எடுக்கப்பட்ட முடிவிற்கு முக்கிய அடிப்படையாக அமைந்தது.



இந்த முடிவு விஞ்ஞானிகள் கூறும் முன்னெச்சரிக்கை கோட்பாடு என்பதனை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த கோட்பாட்டின்படி, எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதில் ஒரு வரையறுக்கப்படாத ஆபத்து இருந்தால், அந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று பிரேரிப்பவர்கள்தான், அந்த நடவடிக்கை ஒரு பாதுகாப்பான நடவடிக்கை என்பதை நிரூபிக்க வேண்டியர்கள் ஆவார்கள்.

எரிமலை வெடிப்பு போன்ற அபூர்வமாக நிகழும் சம்பவங்களை ஆராயும்போது, இது போன்ற கணினி மாதிரிகளைத்தான் ஓரளவுக்கு நாம் நம்ப வேண்டியிருக்கிறது என்கிறார் இங்கே பிரிட்டனில் எக்சிடர் பல்கலைக்கழகத்தில் ஆபத்து நிர்வாகத்தில் வல்லுநராக இருக்கும் டாக்டர் ஸ்டிபான் ஹாரிசன்

பிரிட்டிஷ் வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தாங்கள் பலூன்கள் மூலமாகவும், லேசர் கதிர்கள் மூலம் எடுத்த அளவீடுகளைக் கொண்டும் சேகரித்த பிந்தைய தகவல்கள், இந்த சாம்பல் துகள்கள் நிறைந்திருக்கும் பகுதி மற்றும் அவைகளின் அளவை உறுதிப்படுத்தியிருப்பதாக, தங்கள் தரப்பு நியாயத்தைச் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு விஞ்ஞானம் குறித்து சில மிக விவரணமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஜெட் விமான இயந்திரங்களில் இந்த நுண் துகள்களில் எந்த அளவு துகள்கள் அடைத்துக் கொள்ளும், எப்போது இந்த சாம்பல் திரள் கலையும், போன்ற இந்த மாதிரிக் கேள்விகளுக்கு இப்போதைக்கு அறிவியல் ரீதியாக விடைகள் தர தேவைப்படும் தரவுகள் இல்லை.

Read more...

>> Tuesday, April 20, 2010




''ஐபிஎல் நிதி பற்றி விசாரணை''


ஐபிஎல்
நிதித்துறை அவதூறில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தியாவின் பிரிமியர் லீக் கிரிக்கெட் குறித்து விசாரணை நடத்தப்ப்பட வேண்டும் என்று இந்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
கிரிக்கெட் லீக்கிற்கு வரும் பணம் எங்கெங்கு இருந்து வருகின்றது என்று இந்த விசாரணையில் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார்.

தவறு இழைத்தவர் யாராக இருந்தாலும் அவருக்கு விதிவிலக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குற்திப்பிட்டுள்ளார்.

''கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கிரிக்கட் பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

நிதித்துறையில் ஒழுங்கீனங்கள் எவையும் கிடையாது என்று கிரிக்கட் லீகின் ஆணையர் லலித் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நாவில் இந்திய அரசின் இராஜதந்திரியாக முன்பு பணியாற்றிய, சசி தரூர் இந்த நிதி அவதூறு காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.

இதற்கிடையே இந்த அறிவிப்பு காலதாமதாக எடுக்கப்படும் நடவடிக்கையே என்று எழும் விமர்சனங்கள் சரியானவை என்று ஓய்வு பெற்ற இந்திய வருவாய்த்துறை செயலர் எம்.ஆர்.சிவராமன் கூறினார்.


''கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற கிரிக்கட் பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.



கடந்த காலங்களிலேயே, கிரிக்கெட் விளையாட்டில், முன்கூட்டியே முடிவுகளை சட்டவிரோதமாகத் தீர்மானித்துக்கொண்டு ஆடுதல், பந்தயம் கட்டுதல் போன்ற முறைகேடுகள் வெளிவந்து அதன் தொடர்பாக கிரிக்கெட் பிரமுகர்கள் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய சிவராமன், இந்த சூழ்நிலையில் அரசு விழிப்புடன் இருந்து, இந்த விளையாட்டை கண்காணித்திருக்க வேண்டும் என்றார்.

“கிரிக்கெட் மைதானம் எப்போது ஒரு சூதாட்ட மைதானமாக மாறிவிட்டதோ, அப்போதே அரசாங்கத்தின் வருமானவரித்துறை போன்ற துறைகள், விழிப்பாக இருந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காது” என்றார் சிவராமன்.

ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் போன்ற அமைப்புகளை இந்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கவேண்டும் அல்லது அவைகளின் நிர்வாகத்தில் ஒரு பங்கேற்கவேண்டும் என்று கூறப்படுவதை சிவராமன் நிராகரித்தார்.

இது போன்று தனியார் முயற்சிகளில் அரசு தலையிடுவது சரியல்ல ஆனால் அவைகளில் சூதாட்டம், கிரிமினல் வழிகளில் பணம் விளையாடுவது போன்றவை கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படவேண்டும் என்றார் அவர்.

பிரபா தாயார்- கருணாநிதி விளக்கம்


பிரபாகரன்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பா‌ர்வ‌தி அ‌ம்மா‌ள் த‌மிழக‌த்தி‌ல் ‌சி‌கி‌‌ச்சை பெ‌ற ‌விரு‌ம்‌பினா‌ல் அக்கோரிக்கையினை ப‌ரி‌‌‌‌சீலனை செ‌ய்து ம‌‌‌த்‌திய அரசு‌க்கு ப‌‌ரி‌ந்துரை செ‌ய்ய‌ தமது அரசு தயாராக இருக்கிறது என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
கடந்த வெள்ளியன்றிரவு பார்வதியம்மாள் மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது, குடியேற்றத்துறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் குறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.

விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும், அது முழுக்க முழுக்க மத்திய அரசு தொடர்பான பிரச்சினையென்றும் கூறினார்.

செய்தித் தாள்கள் மூலமாக மறு நாள்தான் தனக்கு முழுவிவரம் கிடைத்ததாகச் சொன்ன அவர், வேறொரு இடத்தில் இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்குள் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகத் தனக்கு சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.


முதல்வர் கருணாநிதி
தவிரவும் பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அ. இ அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் மீண்டும் இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததையும் கருணாநிதி நினைவு கூர்ந்தார்.

ஆயினுங்கூட பார்வதி அம்மாள் விரும்பினால், அவர் இங்கே சிகிச்சை பெற அனுமதிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்ளத் தயார் என்றும் முதல்வர் கூறினார்.

ஏறத்தாழ அனைத்து கட்சிகளுமே பார்வதியம்மாள் சிகிச்சைக்காக இந்தியா வர அனுமதிக்கப்படவேண்டும் எனக் கோரினர். காங்கிரஸ் சார்பில் பேசியவர்களும் திருப்பி அனுப்பப்பட்டது நியாயம்தான் என வாதிட்டாலும், அவர் இங்கே சிகிச்சை பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றனர்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட பிரச்சினை திமுகவாலேயே எழுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு பார்வதி அம்மாள் பிரச்சினை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, தவிரவும் குற்றப் பின்னணி இல்லாத அவருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக விசா வழங்கப்பட்டும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்று வினவினார்.

2003ல் அன்றைய அ இ அதிமுக அரசு பிரபாகரனின் பெற்றோர் மறுபடி இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கடிதம் எழுதியது என்றபோது அ இஅதிமுகவினர், அந்நேரத்தில் திமுக மௌனமாயிருந்ததேன் என்று வினவினர்.

Read more...
இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter