>> Monday, August 23, 2010



'மிருகபலி தடை வேண்டும்'-கோரிக்கை
முன்னேஸ்வரம் கோவில்-சிலாபம்

இலங்கையில் சிலாபம் பகுதியில் அமைந்துள்ள முன்னேஸ்வரம் ஆலயத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள பத்திரகாளியம்மன் தேவஸ்தானத்தில் மிருகங்கள் பலிகொடுக்கப்படும் நிகழ்வுக்கு இந்து மற்றும் பௌத்த மத அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

மிருகங்களைப் பலியிடும் நடவடிக்கை இலங்கையில் அனுமதிக்கப்படக்கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றமும் பெளத்த பிக்குகளின் அமைப்பொன்றும் கோரியுள்ளன.

பல காலமாக தொடரப்பட்டு வருகின்றது என்பதற்காக மூட நம்பிக்கையான சடங்கொன்றை சரியானது என அங்கீகரிக்க முடியாது என அகில இலங்கை இந்துமாமன்றத்தின் செயலாளர் கந்தையா நீலகண்டன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கைகள்

ஆனால் 13 தலைமுறைகளாக நம்பிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த வேள்வி இந்துமத வழிபாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலய பூசகர்கள் தெரிவிக்கின்றனர்.

பக்தர்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றவே தாம் விரதமிருந்து பக்தியுடன் இந்த சடங்கினை ஆண்டுதோறும் நடத்திவருவதாக பத்திகாளியம்மன் ஆலய பூசகர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாக இந்த வேள்வியை நிறுத்தி வைப்பதில் தமக்கு சங்கடங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச மட்டத்தில் நடவடிக்கை

இந்த பிரச்சனை குறித்து அரசாங்க மட்டத்தில் ஆலய நிர்வாகிகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், மக்களின் நம்பிக்கைகள் காரணமாக அவற்றுக்கு பலன் கிட்டவில்லையென இந்து கலாசார திணைக்களம் தெரிவிக்கின்றது.

1982களில் அமைச்சர் இராஜதுரை அவர்களின் காலத்தில் மிருகங்களை பலியிடுவதை தடைசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சில காலங்களில் மீண்டும் பலியிடும் நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசு தமிழோசையிடம் கூறினார்.

கடந்த சில வருடங்களிலும் இதனை தடை செய்வதற்கான முயற்சிகள் அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிருகவதை தடைச்சட்டம் நாட்டில் ஏற்கனவே உள்ளதாகவும் எதிர்காலத்தில் ஆலயங்களில் மிருகபலியை தடைசெய்ய அமைச்சு மட்டத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடுவதாகவும் சாந்தி நாவுக்கரசு குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter