>> Friday, June 4, 2010


வட இலங்கையில் தேர்தல் அலுவலகம்


வட இலங்கையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது
இலங்கையில் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வாக்காளர்களைப் பதிவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் ஆரம்பித்திருக்கின்றது.
இதற்கு முன்னோடியாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கென கிளிநொச்சியில் புதிய தேர்தல் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த அலுவலகத்தின் உதவி தேர்தல் ஆணையாளராக கே.எஸ்.கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மூன்று மாவட்டங்களிலும் முன்னர் இடம்பெற்ற தேர்தல் பதிவுகளே புதுப்பிக்கப்பட்டு வந்ததாகவும், வீடுவீடாக விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வாக்காளர் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தகுதியுள்ளவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படாத நிலைமையும், தகுதியற்றவர்கள் வாக்காளர்களாகப் பதிவு பெற்ற நிலைமையும் ஏற்பட்டதாகவும், இதனை சரிசெய்து சீரான ஒரு வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கிளிநொச்சி தேர்தல் அலுவலக பொறுப்பதிகாரியாகிய உதவித் தேர்தல் ஆணையாளர் கே.எஸ். கருணாநிதி கூறுகின்றார்.

மீள்குடியேறியுள்ளவர்கள், இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர் நண்பர்களது வீடுகளில் தங்கியிருக்கின்ற இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter