>> Monday, June 14, 2010


விஷமிகள் சதி; விபத்து தவிர்ப்பு



தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்தமை உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சென்னை வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் ஆபத்தின்றி தப்பினார்கள்.

விழுப்புரம் ரயில் நிலையம் அருகே, முண்டியம்பாக்கம் மற்றம் பேரணி ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே சனிக்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது.

உஷார் நடவடிக்கை

சேலத்திலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த நேரத்தில், சித்தனி என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் பெரும் அதிர்வு உணரப்பட்டது. அதையடுத்து, ரயில் டிரைவரும் காப்பாளரும் பேரணி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, அங்குள்ள நிலைய அதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்தார்கள்.

அந்த அதிகாரிகள் உடனடியாக முண்டியம்பாக்கம் ரயில்வே அதிகாரியிடம் தகவல் தெரிவித்தார்கள். அதைத் தொடர்நது, திருச்சியிலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவரை நிலைய அதிகாரி உஷார்படுத்தினார்.

ரயில் பாதையில் பெரும் அதிர்வு உணரப்பட்டதால் மிகக்கவனமாக செல்லுமாறு டிரைவரை அவர் அறிவுறுத்தினார்.

அதன்படி, மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மிக மெதுவாகச் சென்றுகொண்டிருந்தபோது, சற்று தூரத்தில் ரயில் தண்டவாளம் துண்டிக்கப்பட்டிரு்பபதைப் பார்த்த டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

அதாவது, தண்டவாளம் தகர்க்கப்பட்டிருந்த இடத்திலிருந்து சில அடி தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் ஆபத்தின்றி தப்பினார்கள்.

ரயில் பாதை அருகே உள்ள மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் வயரைப் பொருத்தி, அதைத் தகர்த்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போஸ்டர் எச்சரிக்கை

சம்பவ இடத்தில் கையினால் எழுத்தப்பட்ட ஒரு போஸ்டர் இருந்ததாகவும், அதில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் சமீபத்தில் இந்தியா வந்ததைக் கண்டித்தும், அவரை வரவேற்ற இந்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்தும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காவல் துறையினர் சம்பவ இடத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பொதுவாக உள்ளூர் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, அந்த மார்க்கமாக வரவேண்டிய பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

சேதமடைந்த ரயில் பாதை சரிசெய்யப்பட்ட பின்னர் ரயில்கள் அப்பாதையில் மீண்டும் செல்லத் தொடங்கின.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter