>> Tuesday, June 22, 2010



தமிழக காவல்துறை டி.ஜி.பி. லத்திகா சரண்
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் கைது



தமிழகத்தின் திருச்சி நகரில் விடுதலைப் புலிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போலீசார் கூறுகின்றனர்.
அண்மையில் தமிழகத்தில் கைதான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவின் தமிழகத் தலைவர் சிரஞ்சீவி மாஸ்டர் கொடுத்த தகவல்களின் பேரில் இப்போது மூவர் கைதாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் அமோனியம் நைட்ரேட்டை 2007 ஆம் ஆண்டு இலங்கைக்கு கடத்தியதாகவும் பின்னர் கண்ணி வெடி தயாரிப்புக்கு தேவைப்படும் உலோக உருளைகளை கடத்தியதாகவும் சிரஞ்சீவி மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இலங்கைக்குத் தப்பிச்சென்றிருந்தாலும் போலீசாருக்கு தெரியாமல் இந்தியா வந்து போய்க்கொண்டிருந்த அவரை அண்மையில் காஞ்சிபுரத்தில் கைது செய்ததாகவும், பின்னர் செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டதாகவும் தமிழக காவல்துறை கூறுகிறது.

சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. லத்திகா சரண் வெளியிட்ட ஓர் அறிக்கையில், "சிரஞ்சீவி மாஸ்டர் அளித்த தகவல்களின் விளைவாக சிவா, தமிழ், செல்வம் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர், திருச்சியில் நடத்தப்பட்ட சோதனைகளின்போது வெடிகுண்டுகள் செய்ய பயன்படும் 4,900 சாதாரண டெட்டனேட்டர்கள் மற்றும் 430 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இந்தியாவில் நாச வேலைகள் எதுவும் செய்ய திட்டமிடவில்லை என்றும், இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காகவே வெடி பொருட்களை சிறிது, சிறிதாக வாங்கி பதுக்கி வைத்திருந்தததாகவும், தமிழக கடலோர பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால், இந்தப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முடியவில்லை, எனவே அப்பொருட்களெல்லாம் திருச்சியிலேயே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் லத்திகா சரணின் அறிக்கை கூறுகிறது.

தவிரவும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ரயில் தண்டவாள தகர்ப்பு சம்பவத்திற்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும், இந்நிலையில் கைதான 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter