>> Tuesday, June 22, 2010



திமிங்கல வேட்டை: சர்வதேச கூட்டம்


ஜப்பானியர்கள் தடையை மீறி தொடர்ந்து திமிங்கல வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்


திமிங்கல வேட்டை கட்டுப்பாட்டு சர்வதேச ஆணையத்தின் வருடாந்த கூட்டம் மொரொக்கோ நாட்டின் அகதிர் நகரில் நடக்கிறது.
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திமிங்கலம் பிடிக்கும் தொழில்துறையை ஒழுங்கு செய்யக்கூடிய ஒரு ஒப்பந்தம் பற்றி இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

திமிங்கலம் வேட்டையில் ஈடுபடும் நாடுகளும், திமிங்கலம் பிடிக்கப்படுவதை எதிர்க்கும் நாடுகளும், சுற்றாடல் பேணல் ஆர்வலர் குழுக்களும் இது பற்றி விவாதிக்கின்றன.

திமிங்கல வேட்டை உலகில் முற்றும் முழுதுமாக முடிவுக்கு வர வேண்டும் என்று பிரிட்டன் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் வேறு பல நாடுகளும் விரும்புகின்றன.

ஆனால் திமிங்கலங்கள் பிடிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவருவது என்பது அரசியல் ரீதியில் சாத்தியமா என்ற கேள்வியை இவர்கள் எதிர்நோக்குகின்றனர். முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியம் இல்லை என்றே கூட சில நாடுகளும், கிரீன் பீஸ், வொர்ல்ட் வைல்ட்லைஃப் ஃபெடரேஷன் உள்ளிட்ட பசுமைக் குழுக்களும் அறிவித்துள்ளன.

மாறாக ஜப்பான் வேட்டையாடும் திமிங்கலங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும், திமிங்கல வேட்டையின் சுற்றாடல் தாக்கங்கள் பற்றி தொலைநோக்கு பார்வையோடு அணுக வேண்டும், திமிங்கல இறைச்சி வர்த்தகம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கங்களில்தான் ஒப்பந்தம் ஒன்றை எட்ட தாங்கள் விரும்புவதாக இவை தெரிவிக்கின்றன.


திமிங்கல வேட்டையை எதிர்த்து ஆஸ்த்ரேலியாவில் நடந்த நூதன போராட்டத்தில் திமிங்கல வடிவத்தில் மனிதர்கள் குழுமி நிற்கின்றனர்



இந்த விஷயங்கள் நடந்தாலே தற்போதைய நிலவரத்தை விட கணிசமான அளவில் மேம்பட்ட சூழல் ஒன்று ஏற்படும் என்று இவை கருதுகின்றன.

ஆனால் இந்த வாதத்தைக் கேட்டு மற்ற ஆர்வலர்கள் கவலையும் அச்சமும் வெளியிடுகின்றனர். இது போல் பேசினால் கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளாக உலகளாவிய அளவில் அமலில் இருந்துவரும் திமிங்கல வேட்டை மீதான நிறுத்திவைப்பு உடன்பாடு அகன்றுபோகும், ஐஸ்லாந்து, ஜப்பான் நோர்வே போன்ற நாடுகள் தற்போது திமிங்கல வேட்டையில் ஈடுபடுவதற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இந்நிலையில் இந்த யோசனைகள் ஒப்பந்தமாக மாறுமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

கூட்டத்தில் பேச்சுவார்த்தைகள் காரசார வாக்குவாதங்களுக்கு பஞ்சமில்லாமல் இறுதிக்கட்டம் வரை இழுத்துக்கொண்டு போகும் என்றே தெரிகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter