>> Tuesday, June 22, 2010


பிரான்ஸ் அணியில் பிரச்சினை


பயிற்சியாளர் ரேமண்ட் டொமினிக்கும் வீரர் அனேல்கா தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது
தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுவரும் பிரான்ஸ் அணியின் வீரர்களுக்கும் அணியின் நிர்வாகிகளுக்கும் இடையில் எழுந்துள்ள ஒரு தகராறு பிரான்ஸில் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டு அணியின் வீரரான நிக்கோலா அனேல்கா தமது அணியின் பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் அவர் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற அனுமதிக்கப்படாமல் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் நாட்டு அணி 2-0 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது.

அந்தப் போட்டியின் இடைவேளையின் போது நிக்கோலா அனேல்கா தமது பயிற்சியாளரை தகாத வார்த்தைகளால் திட்டியதை அணியில் இருந்த யாரோ ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்து விட்டார்கள் என்கிற புகார் தற்போது எழுந்துள்ளது.

தனது செயலுக்காக அனேல்கா மன்னிப்பு கோர வேண்டும் என பிரெஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ழான் பியர் எஸ்கலே கூறியிருந்தார். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று அனெல்கா கூறிவிட்டார்.

ஆட்டத்தின் இடைவேளையின்போது அவர் பேசிய வார்த்தைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என பிரெஞ்சு கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அனேல்காவை பிரான்ஸ் அணியின் தலைவரான பேட்டிஸ் எவ்ரா கண்டிக்கவில்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

தனது அணியில் உள்ள துரோகி ஒருவரே உள் விடயங்களை வெளியே தெரிவித்துவிட்டார் என்று எவ்ரா கூறியுள்ளார்.

தமது அணியின் உறுப்பினர் ஒருவர் போட்டியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமது பயிற்சிகளில் ஈடுபட பிரெஞ்சு வீரர்கள் மறுத்துள்ளனர்.

உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையின் அணியினர் பயிற்சியில் ஈடுபட மாட்டோம் எனக் கூறியுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாதது என பிரெஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் மேலாண் இயக்குநர் கூறியுள்ளார்.


இது ஒரு மோசடி, பிரான்ஸுக்கு ஏற்பட்டுள்ள ஒரு அவமானம். இந்நிலையில் தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை.


பிரெஞ்சு கால்பந்து சம்மேளனத்தின் மேலாண் இயக்குநர்

பிரெஞ்சு வீரர்களின் நடத்தை உலகத்தில் அனைவரும் பார்த்து சிரிக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டது என்று என்று அந்நாட்டின் பத்திரிகைகள் கடுமையாகச் சாடியுள்ளன.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பிரஞ்சு விளையாட்டுத்துறை அமைச்சரை அங்கே தொடர்ந்து தங்கியிருந்து நிலைமையைச் சீர்செய்யும்படி பிரெஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோசி பணித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு அணியின் பயிற்சியாளர் காரணம் என்று ஒரு சாராரும், நாட்டின் கால்பந்து சம்மேளனத்தின் அணுகுமுறையே காரணம் என்று இன்னொரு சாராரும் கூறிவருகின்றனர்.

எது எப்படியிருந்தாலும் பிரெஞ்சு அணியின் மானம் கப்பல் ஏறியுள்ளது என்பது உண்மை.

அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வென்றால் அன்றி இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரான்ஸ் நீடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter