>> Wednesday, September 15, 2010


எகானமிஸ்ட் இதழ் மீண்டும் பறிமுதல்


எகானமிஸ்ட் சஞ்சிகை
இலங்கையில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை கொண்ட கட்டுரையை பிரசுரித்திருந்த எகானமிஸ்ட் வார இதழின் பிரதிகளை இலங்கை அதிகாரிகள் விநியோகிக்க முடியாதபடி பறிமுதல் வைத்துள்ளனர்.
எகானமிஸ்ட் இதழின் பிரதிகள் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இதழ்கள் தாமதமாகவே விடுவிக்கப்பட்டதன் காரணமாக இதழை விநியோகிப்பதில் கால தாமதம் ஏற்பட்டிருந்தது.

நேரடியாகவும், தயவு தாட்சண்டமின்றியும் கருத்துக்களைத் தெரிவிக்கும் எகானமிஸ்ட் நாளிதழின் தலையங்கங்கங்கள் இலங்கை அதிகாரிகளை சில முறை கொதிப்படையச் செய்துள்ளன. சில முறை அதன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளன.

இதன் காரணமாக உலகில் பெரிய அளவில் வாசிக்கப்படும் அரசியல் மற்றும் வர்ச்சக சஞ்சிகைளில் ஒன்றான எகானமிஸ்ட்டின் பிரதிகள் இலங்கையில் இருக்கும் அதன் ஒரே முகவரை சென்றடையும் முன்பே பல முறை பறிமுதல் செய்யப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை எகானமிஸ்ட் சஞ்சிகையின் இதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் சமீபத்திய உதாரணம்.

அரசியல் சாசனத்தில் மாற்றங்களை செய்ததன் மூலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளை உருவாக்குவதற்கு முன்பாக தனது குடும்பத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்த விழைந்திருக்கிறார் என்று எகானமிஸ்ட் இதழின் தலையங்கம் கூறியுள்ளது.

இது போன்ற விமர்சனங்கள் கராணமாகவே இந்த இதழை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கலாம் என எகானமிஸ்ட் பத்திரிக்கையை இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகித்து வரும் முகவரான விஜித யாப்பா பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான எகானமிஸ்ட் இதழில் போரால் இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் செய்யப்படுதலில் உள்ள பிரச்சனைகள், அதிலும் குறிப்பாக உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் சந்திக்கும் பிரச்சனை பற்றிய கட்டுரை இடம்பெற்றதால் அந்த பிரதிகள் முதலில் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் சில தினங்களில் அவை விற்பனைக்காக விடுவிக்கப்பட்டன.

வெளிநாட்டில் இருந்து பிரசுகரமாகும் பத்திரிக்கைகள் நாட்டியின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தால், அவை பறிமுதல் செய்யப்படும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையத்தின் தலைவர் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இலங்கையில் உள்ள பல பத்திரிக்கைகள் அரசியல் யாப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை கடுமையாக விமர்சிக்கும் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் உள்ளது என்பதற்கு இது போன்ற கட்டுரைகளே சாட்சியமாக திகழ்வதாக அரசு கூறுகிறது. ஆனால் பின்விளைவுகளுக்கு அஞ்சி பலர் தாம் சொல்ல வரும் விடயங்களில் சிலவற்றை தாமாகவே தணிக்கை செய்து விடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter