>> Friday, September 3, 2010


"வரையறைகுட்பட்டே இந்தியா செயற்படும்"

இந்திய வெளியுறவுச்செயலர் நிருபமா ராவ்


தனது வெளியுறவுக் கொள்கைக்கு பாதகமில்லாத வகையில்தான் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா செயற்படமுடியும் என்பதை இலங்கை தமிழ்கட்சிகள் உணரவேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ், தன்னை சந்தித்த இலங்கை தமிழ்க்கட்சி பிரதிநிதிகளிடம் கூறியதாக அந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிருபமா ராவை சந்தித்த தமிழ்கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் இறையாண்மை பெற்ற நாடான இலங்கையின் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தி யாவுக்கு இருக்கும் வரையறைகளை இலங்கை தமிழ்கட்சிகள் உணர்ந்து கொண்டால்தான் இதில் இருக்கும் பிரச்சினைகளை அந்த கட்சிகள் புரிந்துகொள்ள முடியும் என்று நிருபமா கூறியதாக தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் நிருபமா ராவை வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால், இலங்கை தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான கசப்புணர்வு அதிகரிக்கவே அது வழிசெய்யும் என்று நிருபமா ராவிடம் தாங்கள் கூறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை தமிழர்களின் தற்போதைய மனநிலையை யாழ்ப்பாணத்தில் நிருபமா ராவ் அவர்கள் நேரடியாக உணர்ந்ததாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்தியா உரிய நடவடிக்கைகள் எடுக்கத்தவறினால், அது இலங்கை தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கசப்பை அதிகரிக்கும் என்று தாங்கள் நிருபமாவிடம் சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter