>> Tuesday, September 14, 2010


நிருபர்களை அனுமதிக்காதது தவறு"


யுத்த படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணைய விசாரணை
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் செய்தியாளர்களை களத்துக்குச் செல்வதில் இருந்து பெரும்பாலும் தவிர்த்ததன் மூலம் இலங்கை அரசாங்கமும், இராணுவமும் தவறிழைத்திருக்கின்றன என்று போரின் இறுதி நாட்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக் குழுவின் முன்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் யார் தவறிழைத்தார்கள் என்பதைக் கண்டறிந்து பழிவாங்கும் நடவடிக்கைகள் கூடாது என்றும் இந்த ஆணையத்தின் முன்பாக சாட்சியமளித்த மிகவும் மூத்த செய்தி ஆசிரியரான சண்டே ஐலண்ட் செய்திப் பத்திரிகையின் மனிக் டி சில்வா கூறியுள்ளார்.

இந்தப் போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள் என்று வெளிநாட்டு மற்றும் உள்ளூர் செய்தியாளர்கள் மீது அவ்வப்போது இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்துள்ளது.

"சில அரசாங்க ஊடகங்களின் செய்தியாளர்களைத் தவிர, ஏனைய செய்தியாளர்களை அதிகாரிகள் போர்ப் பகுதிக்கு அருகே செல்ல அனுமதிக்காததால், தாம் கேள்விப்பட்டதை மாத்திரம் வைத்துக்கொண்டே பல செய்திகள் வந்தன. அதனால்தான் போரில் செய்தி ஊடகங்கள் ஆக்கப்பூர்வ பங்காற்றவில்லை என்று தெரிவிக்கப்படுகிறத்டு" என பத்திரிகையாளர் மனிக் டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் செய்தியாளர்களின் நிலைமையை விடுதலைப் புலிகளும் கடுமையாக்கியிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலைப் புலிகள் விரும்புவதுபோல் செய்தியாளர்கள் செய்தி சொல்லத்தவறினால், அவர்கள் இறக்க நேரிடும். இராணுவத்தரப்பிலும் அப்படித்தான் நடந்தது என்று நான் நினைக்கிறேன்.


மனிக் டி சில்வா

போரின் போது யார் என்ன செய்தார்கள் என்பதை வைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் எந்தப் பலனும் கிடையாது என்றும் சில்வா கூறினார்.

அதற்குப் பதிலாக அனைவரது மனக்காயங்களும் ஆற்றப்பட வேண்டும் என்பதை நாடு அங்கீகரிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் சமமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும், இராணுவத்தினதும் வாழ்க்கையை வழமைக்கு திரும்பச் செய்யும் நடவடிக்கைக்கு உதவும் நிதிக்காக இலங்கையர் ஒவ்வொரும் ஒரு வரியைச் செலுத்த வேண்டும் என்றும் ஒரு புதுமையான கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அடிமட்டத்தில் எந்தவிதமான இன முரண்பாடும் கிடையாது என்று தான் அடிப்படையில் நம்புவதாகவும் சண்டே ஐலண்ட் ஆசிரியர் மனிக் டி சில்வா கூறியுள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter