>> Thursday, September 30, 2010


போட்டிகளில் ஊழல்-நீதிமன்றம் கண்டிப்பு

டெல்லியில் அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி துவங்கவிருக்கும் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய உச்சநீதிமன்றம், 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இத்திட்டத்துக்குச் செலவிடப்படும் நிலையில், நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

புதுடில்லிப் போட்டிகளில் ஊழல்-உச்சநீதிமன்றம் கண்டனம்



காமன்வெல்த் போட்டிகளின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா நடக்கும் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் அருகே அமைக்கப்பட்டு வந்த நடை மேம்பாலம் கடந்த வாரம் சரிந்து விழுந்தது பற்றிக் குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த நாட்டில் வேலையே செய்யாமல் பணம் பட்டுவாடா செய்யப்டுகிறது. புதிய பாலம் கட்டப்பட்டால், அது சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுகிறது. பெருமளவில் ஊழல் நடக்கிறது என்று காட்டமாகத் தெரிவித்துள்ளது.

காமன்வெல்த் போட்டி முடியும் வரை, அதாவது அக்டோபர் 15-ம் தேதி வரை காமன்வெல்த் என்பது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருக்கும். அதன்பிறகு அது தனிப் பயன்பாட்டுக்காக மாறிவிடும் என்று நீதிபதிகள் கேலியாகக் குறிப்பிட்டார்கள்.

டெல்லியில் நாடாளுமன்றச் சாலையில், ஜந்தர் மந்தர் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னம் உள்ளது.

அதைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவுக்கு கட்டடங்களை அனுமதிக்கக் கூடாது என்பது விதிமுறை. அதை மீறிக் கட்டப்பட்ட கட்டடங்களை முறைப்படுத்துவது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடந்தபோது, நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தது.

ஜந்தர் மந்தர் அருகே, 100 மீட்டர் சுற்றளவுக்குள் புதுடெல்லி மாநகராட்சிக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், அதுதொடர்பாக விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அது கட்டப்பட்டதாகவும், அதுதொடர்பாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியங்கள் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் மாநகராட்சிக் கவுன்சில் வழக்கறிஞர் தெரிவித்தார்.

அந்த நேரத்தில்தான் நீதிபதிகள் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்தார்கள். உங்களுக்கு வரலாற்றின் மீதும் சட்டத்தின் மீதும் மரியாதை கிடையாது. நியாயம், நேர்மை இல்லாத அரசாக உள்ளது. பணம் மட்டும்தான் அவர்களுக்கு முக்கியம். ஜந்தர் மந்தரைக் கூட ஹோட்டலாகவோ அல்லது வணிகவளாகமாகவோ ஏன் மாற்றக் கூடாது. அப்போது, இந்தியா ஒளிரும் இல்லையா என்று நீதிபதிகள் காட்டமாகக் கேட்டார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter