>> Wednesday, July 7, 2010
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
கருணாநிதி குற்றச்சாட்டுக்கு ஜெ. பதில்
விடுதலை புலிகளை எதிர்ப்பது தமிழர்களை எதிர்ப்பதாகாது என அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
"இலங்கையில் போரில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதை நான் கண்டிக்கவில்லை, ஆனால் வெள்ளைக் கொடிகளை அசைத்து ராணுவத்தின் முன்பு வந்து சரணடைந்த எல்.டி.டி.யினரை இலங்கை இராணுவம் வேண்டுமென்றே கொன்ற அச்செயலைக் கண்டிக்கிறேன்" என ஜெயலலிதா கூறியுள்ளார்.
போர் முடிந்துவிட்டது என்ற வார்த்தையை நம்பி பதுங்கு குழிகளிலிருந்து வெளிவந்த ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதையும் தான் கண்டிப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
போர் நடக்கும் போது பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது என்று ஜெயலலிதா கூறியிருந்ததையும், தடை செய்யப்பட்ட எல்.டி.டி.ஈ. இயக்கத்தின் எந்த உறுப்பினரும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சட்டப் பேரவையில் அவர் ஆட்சிக்காலத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்திருந்த அறிக்கைக்கு பதிலளித்து ஜெயலலிதா செவ்வாயன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"தன்னை விடுதலைப்புலிகளுக்கு எதிரானவள் என்று குற்றம் சுமத்துவதன் மூலம் தமிழர்களுக்கு எதிரானவள் என்ற முத்திரையையும் குத்தலாம் என கருணாநிதி நினைக்கிறார்." என அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஆனால் எம்.ஜி.ஆர்.ரும் சரி தானும் சரி, தமிழ் மக்களுக்கு
அனைத்து உரிமைகளும், சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வந்ததாகவும், மிதவாதிகளையும், போட்டி அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், கடைசியாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் கொலை செய்ததற்குப் பிறகு, விடுதலை போராட்ட அமைப்பாக இருந்த புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பாக மாறிவிட்டது, அந்த நிலையிலேயே தான் எல்.டி.டி.ஈ. அமைப்பை துணிச்சலுடன் தான் எதிர்த்ததாகவும் அவர் கூறுகிறார்.
"ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி
வெளிவந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய கட்சி திமுக" என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
0 comments:
Post a Comment