>> Tuesday, July 6, 2010




ஜி எஸ் பி ரத்தாகிறது


இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய வரிச்சலுகை ரத்தாகிறது
ஐரோப்பிய நாடுகளுக்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ஆகஸ்டு மாதம் 15 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த தகவலை அது வெளியிட்டுள்ளது.

இந்தத் வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கான முடிவை முதல் கட்டமாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் எடுத்திருந்தனர்.

சர்வதேச மட்டத்திலான மூன்று மனித உரிமை நடைமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், ஜூன் மாதத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய கவுன்சிலின் முடிவை அமல்படுத்துவதை பின் போடுவதற்கான வாய்ப்பு ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியிருந்தது.

அதற்குப் பதிலாக பல முக்கிய விடயங்களில் வெளிப்படையாக தெரியக்கூடிய, நீடித்திருக்கக் கூடிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டிருந்தது.

ஆனால், இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஜூலை மாதம் முதலாம் திகதிக்கு முன்னதாக இதற்கு பதில் கிடைக்காத காரணத்தினால், ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கான தமது முடிவை பின்போட முடியாத நிலையில் தாம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தனது அறிக்கையில் தற்போது கூறியுள்ளது.

தனியார் துறையினருக்கு பாதிப்பு

ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீ்ர்மானத்தின் மூலம் நாட்டின் தனியார் தொழிற் துறையினருக்கே பெரும் பாதிப்பு ஏற்படுமென இலங்கை வர்த்தக மற்றும் தொழில் சம்மேளங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் நவாஸ் ஹஜப்தீன் கூறுகிறார்.

ஆனால் இதனால் ஏற்படக்கூடிய தொழில் இழப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய நிலமையில் இலங்கை இருப்பதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்

இதேவேளை இந்த ரத்து காரணமாக ஆயத்த ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெரும்பாதிப்பை எதிர்கொள்வார்கள் என்று கூறுகின்ற இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளரான ஜோசப் ஸ்டாலின், இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அரசாங்கம் இணங்கிப் போகவேண்டும் என்று கூறியுள்ளார்

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter