>> Friday, July 30, 2010


சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமை: ஐநா

சுத்தமான குடிநீரும், கழிப்பறை வசதியும் உலகிலுள்ள அனைவரின் அடிப்படை மனித உரிமை என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
உலகெங்கும் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 15 லட்சம் சிறார்கள் குடிநீர் மற்றும் சுகாதாரமின்மை தொடர்பான நோய்களில் இறக்க நேரிடுகிறது.

ஐ நா வின் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா, கானடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட 41 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


இந்தியாவில் பரவலான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது

இந்தத் தீர்மானத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை.

குடிநீர் தொடர்பான உரிமைகள் குறித்து ஒரு கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஜெனீவாவில் செயற்படும் ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில், இந்தத் தீர்மானம் அப்படியான நடவடிக்கையை குறைத்து மதிப்படுவதாக இருக்கின்றது என்றும், அதானலேயே தாம் வாக்கெடுப்பில் பங்கு பெறவில்லை என்றும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நாடுகள் தெரிவித்துள்ளன.

குடிநீர் அடிப்படை மனித உரிமை என்று பிரகடனப்படுத்தும் ஐ நா வின் இந்தத் தீர்மானத்தில், உலகளவில் 88 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீருக்கு வழியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 260 கோடிக்கும் கூடுதலான மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை என்றும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

வாழ்வதற்கான உரிமையை முழுமையாக அனுபவிப்பதற்கு பாதுகாப்பான குடிநீரும், துப்புறவு வசதிகளும் அடிப்படையான தேவைகள் என்றும் ஐ நா வின் பிரகடனம் சுட்டிக்காட்டுகிறது.

உலகிலுள்ள அனைவரும் பாதுகாப்பான குடிநீரை பெற்றுக் கொள்ள சர்வதேச சமூகம் தனது முன்னெடுப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது.

சீனா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் முக்கியமானவை.

ஐ நா வின் இந்தத் தீர்மானம், அனைத்து உறுப்பு நாடுகளின் ஆதரவையும் ஏகமனதாகப் பெறுவதில் தவறிவிட்டது என்று அமெரிக்க பிரதிநிதி ஜான் சமின்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம் மனித உரிமைகள் குறித்த புதிய விளக்கத்தையும், கடப்பாடுகளையும் சரியாக தெளிவு படுத்தவில்லை என்று சில நாடுகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் ஐ நா விடயங்கள் குறித்த பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter