>> Wednesday, July 28, 2010



காமன்வெல்த் போட்டிகளுக்கான அரங்கம்
மணி சங்கர் அய்யர்

"காமன்வெல்த் போட்டிகள் வீண்செலவு"


புதுடெல்லியில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவது வெட்டிச் செலவு என்று கூறியுள்ளார் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர்.
அந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்தால் தான் மிகுந்த ஏமாற்றமடைவேன் என்றும் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார். ஆளும் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இப்போது பதவி வகித்து வருகிறார் மணிசங்கர் அய்யர்.

இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஏற்கனவே வெளியிட்டுள்ள மணிசங்கர் அய்யர், தற்போது காமன்வெல்த் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளேயே மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

``காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் மழை குறுக்கிடுவது குறித்து ஒரு வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டால், நான் மிகவும் கவலைப்படுவேன். ஏனென்றால், அதன் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள் என எல்லாவற்றையும் கொண்டுவருவார்கள்’’ என்றார் மணிசங்கர் அய்யர்.

காமன்வெல்த் போட்டிகளுக்காக 35 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிடப்படுவதாகச் சுட்டிக்காட்டிய மணிசஙகர், சாதாரண நிலையில் உள்ள சிறுவர்கள் விளையாடுவதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என்று கவலை தெரிவித்தார்.



விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக, காமன்வெல்த் நாடுகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மணிசங்கர் புகார் கூறினார்.

லஞ்சம்

``காமன்வெல்த் நாடுகளின் ஒலிம்பிக் சங்கங்களுக்கு இந்தியா தலா ஒரு லட்சம் டாலர் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு பணம் இல்லாமலா போய்விட்டது? சட்டப்படி இதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமோ தெரியாது. ஆனால் என்னைப் பொருத்தவரை இது லஞ்சம் என்றுதான் சொல்வேன். இப்படி, விளையாட்டை நடத்தும் முறை மோசமாக இருக்கிறது. இந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆதரவு தருவோர் தீய சக்திகளாகத்தான் இருக்க முடியுமே தவிர, கடவுளாக இருக்க முடியாது’’ என்றார் மணிசங்கர் அய்யர்.

அவரது இந்தக் கருத்து, இந்திய ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகத்தை மட்டுமன்றி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடமும் வரவேற்பைப் பெறவில்லை.

காமன்வெல்த் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி்க் காட்டி, இந்தியாவின் மதிப்பை சர்வதேச அரங்கில் உயர்த்துவதுடன், அடுத்தகட்டமாக ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பையும் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், மணிசங்கரின் கருத்து அதற்கு எந்த வகையிலும் உதவாது என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் சுரேஷ் கல்மாதி, மணிசங்கரின் கருத்து, பொறுப்பற்ற பேச்சு என கடுமையாக விமர்சித்துள்ளார்.

``காமன்வெல்த் போட்டிகளை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.. மணிசங்கர் அய்யர் தொடர்ந்து விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்திருந்தால், ஒரு விளையாட்டரங்கரத்தைக் கூடப் பார்த்திருக்க முடியாது’’ என்றார் சுரேஷ் கல்மாதி.

இந்தியப் பிரஜை ஒருவரால் இத்தகைய கருத்தை வெளியிட முடியாது என்றும், அவரது கருத்து முழுக்க முழுக்க தேசவிரோதமானது என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter