>> Friday, July 2, 2010


அகதி மாணவர் கல்வி- அரசு விளக்கம்


அகதி முகாம் ஒன்றில் உள்ள இலங்கைத் தமிழர்கள்
தமிழகப்பள்ளிக் கூடங்களில் படித்த இலங்கை அகதி மாணவர்களை பொதுப்பட்டியலில், தரவரிசையின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த உத்திரவு குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக தமிழக பள்ளிகளில் பயிலும் அகதி மாணவர்கள் பொறியியல் உள்ளிட்ட தொழில் முறை பட்டப்படிப்புக்களில் சேர்ந்து படிக்கமுடியாத நிலை இருந்து வருகிறது.

இலங்கை மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும் அவர்களுக்கு உயர் கல்வி பயில, கல்லூரியில் இடம் கிடைக்குமா என்பது தெளிவில்லாமல் இருப்பதாக பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்குப் போக மீதி இடம் இருந்தால் அகதி மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளலாம் என்ற உத்திரவும் இருந்தது. ஆனால் அவ்வாறு அவற்றில் சேர நிறைய செலவாகும் என்பதால் அகதி மாணவர்கள் அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் தற்போதைய ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்கழகத்தின் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர் சக்காரியாஸ் புதிய ஆணையை வரவேற்றார்.

எண்பதுகளில் இந்தியா வந்தபோது அகதி மாணவர்கள் படிக்க வேண்டிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன என்று அவர் நினைவு கூர்கிறார்.

ஆனால் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு கல்வி வசதிகள் நிறுத்தப்பட்டு, பிறகு மெல்ல மெல்ல அவை மீண்டும் அமலுக்கு வந்தன என்றாலும், தொழில்முறை உயர்கல்வியைப் பொறுத்தவரை தமிழக மாணவி ஒருவர் விளையாட்டு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்காக இடம் ஒதுக்குவதை எதிர்த்து மனுச் செய்ய, உயர்நீதிமன்றம் அப்பிரிவுகளை ஒழுங்குபடுத்த, அகதிகள் விடுபட்டுப்போயினர்.

அது தொடர்பாக நீதிமன்றத்தில் அகதிமாணவர்கள் சார்பாக வழக்கு தொடுக்கப்பட இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் என்று கூறிவிட்டது.

இப்போது மத்திய அரசு முடிவெடுக்காமல் காலந்தாழ்த்துகிறது என்று வருந்துகிறார் சக்காரியாஸ். விரைவில் மாணவர்களுக்கு சாதகமான முடிவெடுக்கப்பட்டால் அவர்கள் எதிர்காலம் சிறப்பாக விளங்கும் எனவும் சுட்டிக்காட்டுகிறார் சக்காரியாஸ்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter