>> Thursday, July 29, 2010
இந்தியாவில் டேவிட் கேமரன்
இந்தியாவில் பிரிட்டிஷ் பிரதமர்
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அவர்கள், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பிரிட்டனில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் இந்தப் பயணத்தில் முன்னுரிமை அளித்திருக்கிறார்.
பிரிட்டன் சரித்திரத்தில் முதல் முறை என்று வர்ணிக்கப்படும் வகையில், 6 அமைச்சர்கள், அதிகாரிகள், விளையாட்டுத்துறையினர், கல்வியாளர்கள், முக்கிய வர்த்தகப் பிரமுகர்கள் என மிகப்பெரிய குழுவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கிறார் டேவிட் கேமரன். இதன் மூலம், இந்தியாவை மிக முக்கிய பங்காளியாக பிரிட்டன் கருதுகிறது என்பதை தெளிவாகக் காட்டியிருக்கிறார்.
பெங்களூர் நகரில் இன்போஃசிஸ் தகவல் தொழில்நுப்ப நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டேவிட் கேமரன், இந்தியா – பிரிட்டன் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தில் தனது முக்கிய நோக்கம், செழிப்பான இந்தியப் பொருளாதாரத்தின் மூலம் கிடைக்கும் வர்த்தக வாய்ப்புக்களை பிரிட்டனின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.
இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், வரும் ஆண்டுகளில், பிரிட்டனில், ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதைக் காண விரும்புகிறேன். அதேபோல், இந்தியாவிலும் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என விரும்புகிறேன் என பிரி்ட்டிஷ் பிரதமர் குறிப்பிட்டார்.
போர் விமானங்கள் வாங்க உடன்பாடு
கேமரனின் விஜயத்தின் போது பிரிட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து 57 ஹாக் நவீன ரக பயிற்சி ஜெட் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்குப் பயன்படுத்தப்படும் அந்த விமானங்களை, பிரிட்டன் நிறுவன உரிமத்துடன், ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும்.
அந்த உடன்பாடு, இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக முக்கியப் பலன்களை வழங்கும் என்று டேவிட் கேமரன் தெரிவித்தார்.
டேவிட் கேமரன் தனது பயணத்தின்போது, பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் தொடர்பான உறவுகளை வலுப்படுத்துதல் உள்பட பல்வேறு அம்சங்களை விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத, பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்புக்களு்ககாக வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது, பெருமளவில் இந்தியர்களைத்தான் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, டேவிட் கேமரனிடம் இந்தியா இதுதொடர்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் டேவிட் கேமரன் பேச்சு நடத்தும்போது, இதுதொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment