>> Monday, July 19, 2010
விபத்துப் பகுதியில் தீவிர மீட்புப்பணி
மேற்கு வங்க ரயில் விபத்தில் 60 பேர் பலி
இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட ரயில் விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டார்கள். 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
பிர்பும் மாவட்டத்தில் உள்ள செய்ன்தியா ரயில் நிலையத்தில், நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது அதே பாதையில் வந்த இன்னொரு பயணிகள் ரயில் மிக வேகமாக மோதியது. இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த இடம், மாநில தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 191 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பகல்பூரில் இருந்து ராஞ்சி சென்றுகொண்டிருந்த வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில், நான்காவது நடைமேடையை ஒட்டிய ரயில் தடத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது, சியால்டா செல்லும் உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் அதே பாதையில் வந்து, வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் பின்புறம் மோதியது. வனாஞ்சல் எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்படாத இரண்டு பெட்டிகளும் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் மிக மோசமாக சேதமடைந்தது.
உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் மோதிய வேகத்தில், வனாஞ்சல் எர்ஸ்பிரஸின் ஒரு பெட்டி, ரயில் தடத்துக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள சாலை மேம்பாலத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இன்னொரு பெட்டியின் ஒரு பகுதி, மேம்பாலத்துக்கு மேல் தூக்கியெறியப்பட்டு, ரயில் பாதையை ஒட்டியுள்ள சாலையில் விழுந்தது.
இந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்துவிட்டதாக கிழக்கத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதில், உத்தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலின் காப்பாளர் ஆகியோரும் உயிரிழந்தார்கள். 60 சடலங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சதிவேலை காரணமா?
அந்த விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என கிழக்கத்திய ரயில்வேயின் பொது மேலாளர் வி.என். திரிபாதி தெரிவித்துள்ளார். `ரயில் மிக வேகமாக வந்திருக்கிறது. ஓட்டுநர் மிகத் திறமையானவர் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் எங்களுக்கே மிகக் குழப்பமாக இருக்கிறது’ என்றார் அவர்.
விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்ட ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜியும், கடந்த இரண்டு மாதங்களில் மேற்கு வங்கத்தில் இரண்டாவது ரயில் விபத்து நடந்திருக்கிறது. அந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது’’ என்றார் மமதா பானர்ஜி.
ரயில் நிலையத்தில் நிற்க வேண்டியிருந்தாலும், அந்த ரயில் மிகுந்த வேகத்தில் அங்கு வந்தது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
கடந்த மே மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தில், 148 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கு, மாவோயிஸ்டுகளின் சதிவேலை காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
0 comments:
Post a Comment