>> Saturday, July 3, 2010
தமிழ்க்கட்சிகள் ஒன்றியம்
இலங்கையில் தமிழ்க்கட்சிகள் சந்திப்பு
இலங்கையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியாக பல தமிழ் கட்சிகளின் சந்திப்பு ஒன்று வெள்ளியன்று இரண்டாவது தடவையாக நடத்தப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பல தரப்பிடமும் முன்னெடுத்துச் செல்வதான நோக்கத்தை கொண்டு இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ பி ஆர் எல் எஃப் (வரதர் அணி), ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, புளொட் அமைப்பு, சிறிசபா டெலோ, தமிழீழ தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றன.
இந்த சந்திப்பின் போது இந்த கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழ் கட்சிகளின் ஒன்றியம் என்று பெயரிடப்பட்டதாகவும், இது கட்சிகளின் ஒரு கூட்டமைப்பாக அல்லாமல், கட்சிகள் தமக்கிடையில் இணக்கப்பாடான விடயங்களில் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒரு களமாக மாத்திரம் இருக்கும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
அத்துடன் இதுவரை தம்முடன் இணையாத கட்சிகளையும் எதிர்காலத்தில் ஒன்றாக சேர்த்துச் செல்வதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அனைத்துக் கட்சிகளும் தமக்கிடையிலான வேறுபாடுகள், தனித்துவம் ஆகியவற்றை கொண்டிருக்கும் அதே வேளையில், இணங்கிப்போகக் கூடிய விடயங்களில் தமிழ் மக்களின் நலனுக்காக இணங்கிப்போவது குறித்தும் இந்த அமைப்பு தொடர்ந்து முயற்சிக்கும் என்று இந்த சந்திப்பில் கலந்துகொண்ட வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்.
தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக ஒரு குழுவையும் இந்த ஒன்றியம் ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment