>> Tuesday, July 6, 2010



கால்பந்து தைக்கும் சிறுவன்

பணங்கொழிக்கும் கால்பந்தில் சுரண்டல்கள்?


இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் கால்பந்து தயாரிக்கும் ஆலைகளில் வேலையாட்கள் தொடர்ந்தும் மிக மோசமான நிலைமைகளுடன் அடிமட்டத்திலான கூலிக்காக வேலை செய்துவருவதை அம்பலப்படுத்தும் சர்வதேச அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

குறிப்பாக சிறார் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கமர்த்தி கால்பந்து தயாரிக்கும் நிலைமை இன்னும் பாகிஸ்தான், இந்தியா சீனா ஆகிய நாடுகளில் தொடர்வதாக சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் கூறியுள்ளது.

நாளொன்றுக்கு 12 -13 மணித்தியாலங்கள் வரை வேலை செய்யும் தொழிலாளர்கள் மிக அடிமட்ட கூலிக்கு வேலை வாங்கப்படுகிறார்கள். இந்தியாவில் பந்தொன்றுக்கு 15 ரூபாவுக்கும் குறைவான ஊதியமே வழங்கப்படுகின்றது. நாளொன்றில் 2முதல் 4 பந்துகளை மட்டுமே இவர்களால் தைக்க முடிகின்றது.

இதேபோன்ற நிலை பாகிஸ்தானிலும் காணப்படுகின்றது.

இது தவிர பால் ரீதியான பாகுபாடுகளும் இந்த வேலைத்தளங்களில் காணப்படுவதாகவும் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

பெண்கள் கர்ப்பந்தரித்தால் வேலையை இழக்கும் நிலையும் இங்கு உள்ளன. குறிப்பாக சீன தொழிற்சாலைகளில் ஒரு நாள் கூட ஓய்வின்றி மாதம் முழுவதும் நாளொன்றுக்கு 21 மணித்தியாலங்கள் போன்ற நீண்ட நேரத்திற்கு இவர்கள் வேலை வாங்கப்படுகின்றார்கள்.

இந்தியாவைப் போலவே சீனாவிலும் உகந்த குடிநீர்,மருத்துவம் மற்றும் கழிப்பறை வசதிகள் இன்றியே கால்பந்து தைக்கும் தொழிற்சாலைகளில் வேலைவாங்கப்படுவதாக சர்வதேச தொழிற்சங்க சம்மேளனத்தின் அறிக்கை கூறியுள்ளது.

கால் பந்து தயாரிப்பு தொழிற்துறையில் மனித உரிமைகளைப் பேணும் நடவடிக்கைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என 13 வருடங்களுக்கு முன்னால் கைச்சாத்திடப்பட்ட 'அட்லாண்டா உடன்படிக்கை'யின் அம்சங்கள் தொடர்ந்தும் மீறப்பட்டு வருவதனையே இந்த நிலைமைகள் காட்டுகின்றன,

இந்த சுரண்டல்களையும் சிறார் தொழிலாளர்கள் வேலைவாங்கப்படுவதையும் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபீஃபாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் நடவடிக்கையிலும் சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம் தற்போது ஈடுபட்டுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter