>> Friday, July 9, 2010





தமிழ்அகதிகள் குறித்து ஐநா புதிய கொள்கை


இடம்பெயர்ந்து அகிதிகளாக வாழும் தமிழர்கள்
இலங்கையில் கடந்த ஓராண்டில் பொதுவாக நிலைமை சற்று ஸ்திரமடைந்திருப்பதாகக் கூறும், ஐ.நா மன்ற அறிக்கை, இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு வரை வழங்கப்பட்டுவந்த extended refugee definition, என்பது இனி கிடைக்காது என்று அறிவித்துள்ளது.
அதாவது இலங்கையில் நிலவிய அரசியல் சூழ்நிலை காரணமாக, அகதி அந்தஸ்து கோரும் தமிழர்களின் விண்ணப்பங்கள் பரந்துபட்ட அரசியல் நிலைமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பரிசீலிக்கப்பட்ட நிலைமை, இனி வழங்கப்படாது என்று ஐ நா கூறியுள்ளது.

ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம், கடந்த ஆண்டுக்கான, தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்கு விண்ணப்பிக்கும் இலங்கைத் தமிழர்கள் குறித்த தனது புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இதை தெரிவித்துள்ளது.

இலங்கையில் அரசியல் நிலைமை ஸ்திரமடைந்திருக்கிறது என்று எவ்வாறு கூறுகிறீர்கள் என்று ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின், தெற்காசிய மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்காகப் பேசவல்ல, தகவல் அதிகாரி, பாபர் பலூச் அவர்களிடம் தமிழோசை கேட்டபோது, 2009ம் ஆண்டு வரை இருந்த வழிகாட்டுநெறிமுறைகளுக்கும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு முறைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இலங்கையிலிருந்து வரும் அகதிகள் அல்லது மக்களுக்கு, அவர்கள் இலங்கையர்கள் என்பதாலேயே பொதுவான ஒரு அகதிகள் என்ற விளக்கம் அல்லது அர்த்தப்படுத்திக்கொள்வது இனிமேல் இருக்காது என்பதுதான் என்று கூறினார்.


ஐ நாவின் அகதிகள் நிறுவனம்

இந்த எக்ஸ்டெண்டட் ரெப்யூஜி டெபினிஷன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன வென்றால், தங்கள் தாய்நாட்டிலிருந்து வெளியே வரும் மக்கள், அந்த நாட்டுக்கு, பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப முடியாத ஒரு பொதுவான நிலை இருந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விளக்கம். இந்த நிலையைக் கடந்த ஒரு ஆண்டாக நாம் பார்க்கவில்லை. ஆனால் இதைச் சொல்லும் நிலையிலேயே, இலங்கையிலிருந்து மற்ற நாடுகளுக்கு வந்து தஞ்சம்கோரும் நிலையில் இருக்கும் மக்கள், 1951 வழிமுறைகளின் படி ,அகதிகள் அந்தஸ்து கோரலாம். அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவேண்டும் . அதே போல அவர்கள் 1967 வழிமுறைகளின்படியும் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

இருந்தும் ஏற்கனவே அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களின் அந்தஸ்து ரத்து செய்யப்படவேண்டும் என்றும் நாங்கள் கூறவில்லை என்றார் பாபர் பலோச்.

கண்டனம்

ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின் இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள், கவலைக்குரியவை, நியாயமற்றவை என்று கூறுகிறார் தமிழர் அகதிகள் நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த குமாரசாமி சிதம்பரம் பிள்ளை.

லண்டனிலிருந்து இயங்கும் இந்தக் குழுவைச் சேர்ந்த சிதம்பரம் பிள்ளை தமிழோசைக்கு கருத்து வெளியிடுகையில், இலங்கையில் போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக மனித உரிமை அமைப்புகள் கூறிவரும் நிலையில் இந்த நெறிமுறைகள் வந்திருப்பது தஞ்சம் கோரும் தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி.ப்ளஸ் என்ற வர்த்தக சலுகைத் திட்டத்தை இலங்கைக்கு நீட்டிக்க, மனித உரிமைகள் மேம்படுத்துவது உள்ளிட்ட 15 நிபந்தனைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்துவிட்டதையும் சிதம்பரம் பிள்ளை சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இன்னும் 50,000 பேர் போரினால் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். பலர் உயிர் தப்ப நாட்டிலிருந்து படகுகள் மூலமாக வெளியேறும் முயற்சிகளை எடுத்து வருவதையும் , அந்த முயற்சிகளில் அவர்கள் உயிரிழப்பதையும் பார்க்கிறோம். எனவே நிலைமைகள் முற்றிலும் சீரடைந்துவிட்டதாகக் கூறமுடியாது என்றார்.

ஐ.நா மன்ற அமைப்பின் இந்த புதிய அறிவிப்பை மாற்ற புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து முயற்சி எடுக்கும் என்றார் அவர்.

அரசு வரவேற்பு

இலங்கை அரசு ஐ.நா மன்றத்தின் இந்த அறிவிப்பை வரவேற்றிருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறும் முன்னேற்றத்தைப் பற்றி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைவருக்கும் , சுகாதாரம்,பாதுகாப்பு, மகிழ்ச்சி மற்றும் சம சந்தர்ப்பம் என்ற இலக்குகளை எட்ட இலங்கை அரசும் மக்களும் தொடர்ந்து பாடுபடுவார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter