>> Friday, July 16, 2010


இந்திய ரூபாயின் புதிய குறியீடு

இந்திய ரூபாய்க்கு புதிய குறியீடு



இந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுக்கு இந்திய அரசின் அமைச்சரவை வியாழனன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரி்க்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற நாடுகளின் நாணயங்களின் வரிசையில், இந்திய ரூபாயின் குறியீடும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
புதிய குறியீட்டை வடிவமைத்திருப்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், பிரபல ஐஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாணவருமான டி. உதயகுமார்.

புதிய குறியீடு, தேவநாகரி எழுத்தான Ra மற்றும் ரோமன் எழுத்தான R ஆகியவற்றின் கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், Rs அல்லது INR என்றே இந்திய ரூபாய் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை இன்று எடுத்த முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்தார் செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி.

``இந்தப் புதிய குறியீடு, இந்திய ரூபாயை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு மொழிகளில் ஒரே மாதிரியாகத் தெரியப்படுத்துவதற்கு வழிவகுக்கும். மேலும், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேஷியா போன்ற பல நாடுகள் ரூபாய் அல்லது ரூபயா என்ற பெயரில் தங்கள் நாணயங்களை அழைக்கும் நிலையில், புதிய குறியீடு இந்திய ரூபாயின் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்கும் உதவும்’’ என்றார் அமைச்சர் அம்பிகா சோனி.

புதிய குறியீடு, ரூபாய் நோட்டு அல்லது நாணயங்களில் அச்சிடப்படும் என்று தெரிவித்த அம்பிகா சோனி, அடுத்த 6 மாதங்களில் இந்தியாவிலும், 18 முதல் 24 மாதங்களில் சர்வதேச அளவிலும் புதிய குறியீட்டை அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபடும் என்றும் கூறினார்.

புதிய குறியீட்டை அச்சில் வெளியிடவும், கணினிப் பயன்பாட்டுக்கு உதவும் வகையில், கணினியின் விசைப்பலகையிலும், கணினி மென்பொருள்களிலும் இடம் பெறச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அம்பிகா சோனி தெரிவித்தார்.

இந்தப் புதிய குறியீட்டை வடிவமைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த டி. உதயகுமார், பல்வேறு போட்டியாளர்களைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போட்டியில், கடைசியாக ஐந்து குறியீடுகளை நிபுணர் குழு தேர்வு செய்தது. அதில் இறுதியாக உதயகுமாரின் குறியீடு புதிய குறியீடாகத் தேர்வு பெற்றது. இதற்காக உதயகுமாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter