>> Friday, July 23, 2010
சாதனை சாத்தியமானது எப்படி?
விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முரளி வல்லவர்
கிரிக்கெட் உலகில் முத்தையா முரளிதரனின் சாதனையின் தனித்தன்மை மற்றும் முக்கியத்துவம் குறித்து, இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் எரபள்ளி பிரசன்னா அவர்களின் கருத்துக்கள்:
“முரளிதரனின் சாதனை மிக அற்புதமானது. இந்தச் சாதனையை யாரும் முறியடிக்க முடியாது. இந்தச் சாதனை அவரது மனஉறுதி, குணநலன் மற்றும் திறமையை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கிற விடாமுயற்சியும் அவரது சாதனையில் வெளிப்படுகிறது”.
முரளிதரனின் பந்து வீச்சின் சிறப்புக்கள்
“அவரது பந்து வீச்சு மிகவும் உயர்ந்த தரத்திலானது. அப்படியான தரம் இல்லாமல் அவரால் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியாது. ஒரு ஆஃப் ஸ்பின்னருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டுமோ அனைத்தும் முரளியிடம் இருக்கிறது. அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவருக்கே உரிய அந்த தூஸ்ரா வகை பந்து வீச்சு சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையான பந்து வீச்சே அவரது வெற்றியை அதிகரிக்க உதவியது”.
முரளிதரனின் பந்து வீசும் முறை தவறு என்கிற சர்ச்சை சரியா?
“முரளியின் பந்து வீச்சு முறை குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அது சரிதான் என்று கூறியுள்ளது. அது குறித்து எழுந்த சந்தேகத்தை நிபுணர்களை வைத்து அலசி ஆராய்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்த முடிவை எடுத்தது. எனவே தூஸ்ரா பந்து வீச்சு குறித்து எழுந்த ஊகங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கு இது தருணம் கிடையாது. தற்போது அவர் 800 விக்கெட்டுகளை எடுத்துள்ளதை வியந்து பாராட்டி அதற்கான முயற்சியை அங்கீகரிக்க வேண்டும்.”
முரளியின் தூஸ்ரா உலக பிரசித்தம்
முரளிதரனின் பந்து வீச்சின் தனித்தன்மை என்ன?
“உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,நாங்கள் இருவருமே தாக்குதலை நடத்தும் ஒரு பந்து வீச்சாளர்களாவே இருந்துள்ளோம். விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கிலேயே நாங்கள் இருவரும் பந்து வீசினோம். பந்தின் சுழற்சியிலும், பந்தை காற்றில் பறக்க விடுவதிலும் முரளி பெரிதும் நம்பினார். பந்து வீச்சின் அடிப்படைகளான சரியான அளவில், சரியான தூரத்தில் பந்து வீசுவதில் முரளி திறமையானவராக இருந்தார். அந்த அடிப்படை தகுதிகள் தற்போதைய பல சுழற்பந்து வீச்சாளர்களிடம் இல்லை. தற்போதைய சுழற்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல் இருக்கின்றது. இதில் இங்கிலாந்தின் கிராம் ஸ்வான் மட்டுமே தனித்து நிற்கிறார். பந்து காற்றில் இருக்கும் போது எதிர்த்து விளையாடுபவர்களை ஏமாற்றுவதில் முரளிதரன் வல்லவராக இருந்தார்.”
0 comments:
Post a Comment