>> Wednesday, July 28, 2010



போலீசுக்கு எதிராக போராட்டம்
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் ராகம்வெல கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் தமது பாரம்பரிய கிராமத்திலிருந்து தாம் விரட்டியடிக்கப்படுவதாகவும் அங்கிருந்து பொலிசார் வெளியேறவேண்டும் எனவும் கூறி பாணம சந்தியில் செவ்வாய்கிழமையன்று கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டயர்களை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய கிராமவாசிகள் பொத்துவில் ஓக்கந்த நெடுஞ்சாலையை சுமார் ஒருமணிநேரம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கிராமவாசிகளுடன் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த பிரதேசத்து பௌத்த மத விகாரையைச் சேர்ந்த பாணம சந்த்ரா ரத்ன தேரர், பொலிஸ் உயர் அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து போராட்டத்தை கைவிடுவதாக பின்னர் அறிவித்தார்.

மூன்று தினங்களுக்குள் பொலிசார் தமது கிராமத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற நிபந்தனையிலேயே போராட்டத்தை இடைநிறுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டயர்களை எரித்தனர்

கலகத்தடுப்பு பொலிசாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் வரவழைக்கப்பட்டு இன்று அந்தப்பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக அங்கு சென்றிருந்த செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கிழக்கு பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக்க, கிராமவாசிகளுக்கு தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதிமொழி அளித்ததை அடுத்தே போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 17ம் திகதியன்று நள்ளிரவு ராகம்வெல கிராமத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கிருந்த பல வீடுகளையும் சேனைப்பயிர்ச்செய்கைகளையும் தீயிட்டு எரித்துவிட்டு விவசாயிகளையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாக கூறும் கிராமவாசிகள், பொலிசார் தமது காணிகளை அபகரிப்பதாக அம்பாறை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
தாம் பரம்பரை பரம்பரையாக பயன்படுத்திவரும் காணிகளிலிருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்படுவது அநீதி என அங்குள்ள விவசாயி ஒருவர் தமிழோசைக்கு கருத்து தெரிவித்தார்

யால பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாணம கரையோரக்கிராமம் சுற்றுலாத்துறைக்கு புகழ் பெற்று விளங்குகிறது.

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிய சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முயற்சியில் அரசாங்கம் கடந்த சிலமாதங்களாக ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter