>> Thursday, July 8, 2010




அடிப்படை தேவைகளுக்கு பிறகு அரசியல் தீர்வு

இந்தியா இலங்கையில் மேற்கொள்ளவுள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தடை ஏதும் சொல்லாமல் இருக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது.

வன்னிப் பகுதியில் தாங்கள் கண்டதை இந்தியாவிடம் கூறியுள்ளனர்



புதுடில்லி சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் உட்பட பலரை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இலங்கையில் பல ஆண்டுகளாக இருந்து வரும் இனைப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என தமது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக குழுவில் ஒருவராக சென்றிருக்கும் செல்வம் அடைக்கலநாதன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் இந்தியா இலங்கை அரசுடன் பேசி நல்லதொரு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் தாங்கள் கேட்டதாக அவர் மேலும் கூறுகிறார்.

அண்மையில் வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த போது, அங்கு தாம் கண்ட விடயங்கள் குறித்து இந்தியத் தரப்பினருக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கிறார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் இராணுவத்தின் கட்டுமானங்களுக்கு நிலங்கள் எடுக்கப்படும் விடயங்கள் குறித்தும் தமது கவலைகள் இந்தியத் தலைவர்களிடம் எடுத்துக் கூறப்பட்டது எனவும் அவர் சொல்கிறார்.

வடபகுதியில் இராணுவத்தினரின் பெரும் பிரசன்னம்

தற்போது நாட்டின் வடக்குப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினர் அவர்களுடன் வந்து சேரும் போது அந்தத் தொகை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறும் செல்வம் அடைக்கலநாதன், அப்படியான சூழலில் விகிதாச்சார கணக்குப்படி தமிழ் மக்களின் எண்ணிக்கை வடக்கில் குறையும் எனவும், அது தங்களுக்கு ஏற்புடையதாக இருக்காது எனவும் இந்தியத் தரப்புக்கு எடுத்துக் கூறப்பட்டது எனவும் அவர் கூறுகிறார்.


அரசியல் ரீதியாக இந்தியா எங்களுடன் நிற்க வேண்டும்


செல்வம் அடைக்கலநாதன்
பொதுமக்களின் நிலங்கள் இராணுவத் தேவைக்காக எடுக்கப்படுவதை தடுக்க இந்தியா உதவ வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்திரவாதத்தை இந்தியா தர இயலாது எனவும் எனினும் அதை தாங்கள் பரிசீலிப்பதாகவும் இந்திய அமைச்சர்கள் தம்மிடம் கூறியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.

மக்களின் மனிதாபிமானத் தேவைகளை இந்தியா கவனிக்கும் என இந்தியத் தரப்பில் கூறப்பட்டதாகவும், அதே நேரம் வடபகுதியில் இந்தியா முன்னெடுக்கவுள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்க வேண்டும் என இந்தியா கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

அரசியல் தீர்வு குறித்தும் பரிசீலனை



அரசியல் தீர்வைப் பொருத்தவரை தமிழ் மக்களுக்கு எது நியாயமானது என்பது தொடர்பில் தாங்கள் பரிசீலித்து வருவதாகவும் இந்திய அமைசசர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் அரசியல் தீர்வுக்கு முன்னர், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்பில் கோரப்பட்டதாகவும் செல்வம் அடைக்கலந்தான் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter