>> Friday, July 9, 2010
விமல் வீரவன்ச
விமல் வீரவன்ச உண்ணாவிரதம்
இலங்கை அரசின் வீட்டுவசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்ச, கொழும்பிலுள்ள ஐ நா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த போரின் இறுதி கட்டத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும் என்றும் அது குறித்த விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியும் விமல் வீரவன்ச உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கொழும்பிலுள்ள ஐ நா அலுவலகங்களுக்கு முன்னர் விமல் வீரவன்ச அவர்களின் கட்சியினரால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் அறிவிப்பை புதன்கிழமை அவர் வெளியிட்டார்.
தமது பாதுகாப்பு படையினர் போர் குற்றங்கள் எதையும் செய்யவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.
ஆதரவு
போராட்டத்துக்கு புத்த பிக்குகள் ஆதரவளித்துள்ளனர்
இந்தப் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றுக்கு பல புத்தபிக்குகள் ஆதரவும் ஆசியும் வழங்கியுள்ளனர்.
அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இடத்துக்கு அருகில், ஐ நாவின் தலைமைச் செயலரின் புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டு அதன் கீழ் அவரை அவமதிக்கும் வகையில் தகாத வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
முட்டாள்
மேலும், பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க அமைத்திருக்கும் விசாரணைக் குழுவில் இருக்கும் மூவரின் படங்களும் இதே போல அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளன.
அதற்கு கீழ் “மூன்று முட்டாள்கள்” என்கிற வாசகம் எழுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அந்தக் குழு கலைக்கப்பட்டு, போர் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் விலக்கிக் கொள்ளப்படும் வரை, தான் சாகும் வரை மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என விமல் வீரவன்ச கூறுகிறார்.
0 comments:
Post a Comment