>> Saturday, July 10, 2010


தில்லியில் பெண்கள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவது சகஜம்

பெண்களுக்கு பாலியல் தொல்லை



டில்லியில் வசிக்கும் பெண்களில் மூவரில் இருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளதாக தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் சிலர் பலவிதமான உடல்ரீதியான தொந்தரவுகளுக்கும் - கேலி கிண்டல், ஏச்சு போன்ற பிரச்சனைகளுக்கும் முகம்கொடுத்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளும், உடல் உழைப்பு சார்ந்த வேலைகளைச் செய்யும் பெண் தொழிலாளர்களும் இதனால் மிக மோசமாக பாதிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

சுமார் ஐயாயிரம் பெண்களிடமும் சில ஆண்களிடமும் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.

இந்த கருத்தெடுப்பின்படி பெரும்பாலான பெண்கள் தொடர்ச்சியாக பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரியவந்திருக்கிறது.

இதில் பங்கேற்றவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் கடந்த ஒரு ஆண்டில் தாங்கள் வார்த்தைகளாலோ அல்லது உடல் ரீதியாகவோ பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக தெரிவித்திருந்தனர்.

அவமான அனுபவம்

கடந்த மூன்று ஆண்டுகளாக டில்லியில் வசித்துவரும் அமெரிக்கப் பெண் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றிக் கூறுகையில், "பலதடவை ஆண்கள் என்னுடைய பின்புறத்துலயும், உடலின் மற்ற இடங்களிள்ளயும் கைவெச்சு ஆபாசமான சேட்டைகள் செஞ்சிருக்காங்க" என்றார்.


ஒரு நாள் நான் மெட்ரோரயிலில் ஏறப்போற சமயம், மூணு அல்லது நாலு ஆம்பளைங்க ஒரே சமயத்தில என்னோட உடம்பின் வெவேறு பகுதிகள்ள கண்டபடி கை வெச்சி சேட்டை பண்ணாங்க. அது எனக்கு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்திச்சு.


டில்லியில் வசிக்கும் அமெரிக்க பெண்மணி ஒருவர்

மேலும் இவர்களில் ஐந்தில் நான்கு பேர் தாங்கள் ஆபாச வார்த்தைகளால் துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

தாங்கள் தெருவில் நடந்து சென்றபோது தங்களை ஆண்கள் பின்தொடர்ந்ததாக பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இளவயது மற்றும் ஏழைப் பெண்கள் அதிகமான பிரச்சினைகளை சந்திப்பதாகவும் இதில் தெரியவந்திருக்கிறது.

சமீபகாலமாக பெண்களில் கணிசமானவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கத் துவங்கியிருப்பதாக இந்த கருத்தெடுப்பில் தெரியவந்திருந்தாலும், பாலியல் ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்படும் விடயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஆர்வலர் கருத்து

பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் சரியான புரிதல் இல்லாமல் நடந்து கொள்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்கள் அமைப்பான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதா சுந்தரராமன் குற்றம்சாட்டினார்.

ஆண்கள் பெண்களைக் கேலி செய்வதை சகித்துக்கொள்கிற ஒரு சமூக மனப்பான்மை இந்தியாவில் நீடிக்கவே செய்கிறது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்.

பெண்களை ஆண்களின் ஒரு போகப் பொருளாகக் காண்கிற ஒரு நிலை நீடிப்பதாகவும், சமத்துவமற்ற கண்ணோட்டம் இப்படியான பிரச்சினைகளின் அடிப்படைக் காரணம் என்றும் சுதா சுந்தரராமன் குறிப்பிட்டார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter