>> Friday, July 2, 2010



ஜி.எஸ்.பி பற்றி மத்திய வங்கி


இலங்கை மத்திய வங்கி
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஏற்றுமதி வரிச் சலுகையான ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டாலும் கூட இலங்கையின் ஏற்றுமதித்துறை அந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும், தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் என்றும் இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கி வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வருடம் ஆகஸ்டு மாதம் 15 ஆம் திகதியுடன் இந்த ஏற்றுமதி வரிச்சலுகை நிறுத்தப்படக் கூடும் என்ற அனுமானங்களுக்கு பதில் சொல்லும் வகையிலேயே இலங்கை மத்திய வங்கி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை இலங்கையால் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளில் 50 வீதமானவை மாத்திரமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், அப்படி ஏற்றுமதி செய்யப்பட்டவற்றில் 60 வீதமானவை மாத்திரமே ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றதாகவும், ஒட்டுமொத்தமாக 78 மில்லியன் யூரோக்கள் மாத்திரமே இலங்கைக்கு ஜி.எச்.பி வரிச்சலுகையால் கிடைத்த பலன் என்றும் மத்திய வங்கி கூறியுள்ளது.


இலங்கை மத்திய வங்கி
இந்த வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் மாத்திரம் வழங்கப்படும் ஒரு தலைப்பட்ச வரிச்சலுகை என்பதுடன், அது பரஸ்பர நன்மை அல்ல என்பதாலும், அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்ற ஆபத்தை தாம் கடந்த காலங்களில் ஏற்றுமதியாளர்களுக்கு வலியுறுத்தி வந்ததாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

ஆகவே அதற்கமைய பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் ஏற்றுமதியாளர்களுக்கு தாம் பரிந்துரைத்திருந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அதற்கமைய, இலங்கை அரசாங்கமும், மத்திய வங்கியும், முக்கிய ஏற்றுமதியாளர்களும் ''வணிகச் சூழ்நிலையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தல், பொருளாதார அடிப்படைகளை ஸ்திரப்படுத்தல், சர்வதேச முதலீட்டையும், கடன் சந்தையையும் கவர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தல், போர் அச்சுறுத்தலற்ற நாடாக இலங்கை மாற்றுதல்'' போன்றவை உட்பட பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் காரணமாக, இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை ரத்தால் ஏற்படக்கூடிய சவால்களை இலங்கை ஏற்றுமதித்துறை இலகுவாக எதிர்கொள்ளும் நிலையை எட்டியுள்ளது என்றும் மத்திய வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter