>> Tuesday, July 20, 2010
பிரதம நிதியரசர் அசோக்க டி சில்வா
'சந்தேக நபருக்கு விடுதலை' - உயர் நீதிமன்றம்
இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான முகாமொன்றிலிருந்து கைதுசெய்யப்பட்டு, விடுதலைப்புலி உறுப்பினர் என்ற சந்தேகத்தில் பல மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கண் நோயொன்றால் பாதிக்கப்பட்டுள்ள செல்வன் அன்டன் ஜூட் என்பவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை முன்வைக்க முடியாவிட்டால் அவரை விடுவிக்குமாறு சட்டமாதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்டிருந்த மூன்று வெவ்வேறான வழக்குகளிலிருந்து நீதிமன்றம் 1998ம் ஆண்டிலேயே தன்னை விடுதலை செய்திருந்ததாக மனுதாரர் கூறுகிறார்.
வடக்கில் உள்ள தடுப்பு முகாமொன்று
அதன்பின்னர், வன்னியில் மனைவியுடன் வசித்துவந்த அவர், 2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் பின்னர் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பட்டார்.
செட்டிக்குளம் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, முன்னைய மூன்று வழக்குகளை சுட்டிக்காட்டி பம்பைமடு இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக மனுதாரர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் முன்னைய வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்ததை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை விடுதலை செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி மீள்விசாரணையின் போது அறிவிக்குமாறு உயர்நீதிமன்றம் சட்டமாதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment