>> Friday, July 16, 2010



மத மறுப்புக்கு மாலத்தீவில் இடமில்லை



மாலத்தீவில் துன்புறுத்தலால் நாத்திகர் தற்கொலையா?

மாலத்தீவுகளில் ஒருவர் நாத்திகராக இருந்தார் என்பதற்காக பழிவாங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் போலத் தோன்றுகிறது. 25 வயதான இஸ்மாயில் முகமது டிடி இஸ்லாத்தை கடைபிடிக்காத காரணத்தாலேயே இந்த நிலை அவருக்கு நேர்தது என்று கூறப்படுகிறது.
"தான் ஒரு நாத்திகர் என்று கூறி" வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சமும் கோரியிருந்ததை அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.

மாலத்தீவின் பிரஜைகள் அனைவரும் சுனி இன முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்பது அந்நாட்டில் கட்டாயமான விதியாகும்.

இஸ்மாயில் முகமது டிடி அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்தின் வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் வேலைபார்த்து வந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை அவர் அங்கு தூக்கில் தொங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.



மாலத்தீவு சமுதாயத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு இடமில்லை எனவும் இஸ்மாயில் முகமது டிடி தமக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்திருந்தாகவும் அங்குள்ள "மினிவன் இணையம்" கூறுகிறது.

மத நம்பிக்கையை துறக்கும் தனது எண்ணத்தை, தனது சக ஊழியர்கள் பிரப்பிவிட்டனர் என்றும், நெருங்கிய நன்பர்கள் கூட தன்னை சந்திக்க விரும்பவில்லை என்றும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் இஸ்மாயில் தனது மின்னஞ்சலில் தெரிவித்திருந்தாக மினிவன் செய்தி இணையம் மேலும் கூறுகிறது.

நாட்டிலுள்ள யாரும் தனக்கு உதவ மாட்டார்கள் எனவும் அந்த மின்னஞ்சலில் அவர் தெரிவித்திருந்தாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு மத நம்பிக்கை இல்லை என்கிற விடயம் தொடர்பில் ஒரு விசாரணையை மேற்கொண்ட விமான நிலைய உயரதிகாரிகள், மேற்கொண்டு நடவடிக்கைக்காக இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

அந்த அறிக்கையில் அவர் வெளிப்படையாக கடவுளை நிந்தித்தார் என அவரது ஒரு சகா குற்றஞ்சாட்டியதாகவும் மேற்கோள்காட்டியுள்ளது.

மாலத்தீவுகளில் கடுமையான மதச்சட்டங்கள் நிலவினாலும், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவுக்கு அந்நாடு தேர்தெடுக்கப்பட்டது.

மாலத்தீவுகளில் சிறிய அளவில் இருந்தாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான சிலர் தங்களது மதநம்பிக்கை குறித்த கேள்விகளை எழுப்பினாலும், அது வெளிப்படையான வகையில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter