>> Friday, July 23, 2010
முரளிதரனின் உலக சாதனை
சாதனை படைத்த மகிழ்ச்சியில் முரளிதரன்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்கிற புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இடையில் காலியில் நடந்த போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இந்த சாதனையை நிகழ்த்திய பிறகு அவரை அவரது அணியைச்சேர்ந்த மற்ற ஆட்டக்காரர்கள் தங்களின் தோளில் தூக்கி சுமந்து ஆடுகளத்திலிருந்து அவரை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர்.
இன்று முடிவடைந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்குப்பிறகு, தாம் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று முரளிதரன் ஏற்கெனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளிதரனின் இன்றைய சாதனைக்குப்பிறகு, உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷேன் வார்ன் வீழ்த்திய விக்கெட்டுகளை விட, இவர் 92 விக்கெட்டுகளை அதிகம் வீழ்த்தியிருக்கிறார்.
சாதனையின் வரலாறு
இளவயது முரளிதரன்
டெஸ்ட் ஆட்டங்களில் 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஓய்வு பெறுகின்ற முத்தையா முரளிதரன், தனது டெஸ்ட் வாழ்க்கையை ஆரம்பித்தது 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பில் நடந்த ஆட்டத்தில். அவர் தனது இறுதி டெஸ்ட் ஆட்டத்தை ஆடியது இலங்கையின் காலி மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக.
134 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முரளிதரன் 800 விக்கெட்டுக்கள் என்ற இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு அடுத்த நிலையில் 145 ஆட்டங்களில் கலந்துகொண்ட ஆஸ்ரேலியாவின் சார்ன் வேர்ன் 708 விக்கெட்டுக்களை பெற்றுள்ளார். அவருக்கு அடுத்ததாக இந்தியாவின் அனில் கும்ளே மற்றும் ஆஸ்ரேலியாவின் கிலன் மக்ரா ஆகியோர் 619 விக்கெட்டுக்களை எடுத்துள்ளனர்.
அதேவேளை இங்கிலாந்துக்கு எதிராக 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் முரளிதரன் அவர்கள் ஆகக்கூடுதலாக 112 விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக 22 ஆட்டங்களில் கலந்துகொண்டு அவர், 105 விக்கெட்டுக்களை பெற்றுள்ளார்.
மூன்றாவதாக தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 15 ஆட்டங்களில் 104 விக்கெட்டுக்களை முரளிதரன் பெற்றுள்ளார்.
தூஸ்ரா வீசும் முரளிதரன்
இங்கிலாந்து, இந்தியா, தென்னாபிரிக்கா ஆகிய பெரிய அணிகளுக்கு எதிராக கூடிய விக்கெட்டுக்களை முரளிதரன் எடுத்திருக்கிறார்.
டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமல்லாமல் ஒரு நாள் சர்வதேச ஆட்டங்களிலும் முரளிதரனே அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
337 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 329 இன்னிங்ஸ்கள் விளையாடியிருக்கும் முரளிதரன், 515 விக்கெட்டுக்களை இதுவரை வீழ்த்தியுள்ளார்.
38 வயதான முரளிதரன் பிறந்தது 1972 இல் இலங்கையின் கண்டியில். இலங்கை தேசிய அணிக்காக விளையாடிய அவர் கழக மட்டத்தில், தமிழ் யூனியன் கிரிக்கட் அண்ட் அத்லட்டிக் கிளப், சென்னை சூப்பர் கிங்ஸ், ஏசியா 11, கந்துரட்ட, கெண்ட், ஐ சி சி வேர்ல்ட் 11 ஆகிய அணிகளுக்கும் ஆடியுள்ளார்.
முரளிதரனின் சாதனையை முறியடிப்பது கடினம்
டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை 133 ஆட்டங்களில் 164 இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருக்கும் அவர், 1261 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் அவர் பெற்ற ஆகக்கூடுதலான ஓட்டங்களின் எண்ணிக்கை 67 ஆகும்.
0 comments:
Post a Comment