>> Tuesday, May 11, 2010


மலேஷியாவில் ஊடக சுதந்திர ஒடுக்குமுறையை எதிர்த்து 'பத்திரிகையை தலைகீழாய் பிடித்து' நடந்த நூதன ஆர்ப்பாட்டம்


மலேஷியாவில் 'ஒடுக்குமுறையில் ஊடகங்கள்'


மலேஷியாவில் கருத்து சுதந்திரம் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்டு வருவதாக ஊடக சுதந்திரத்துக்கான ஓர் அமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் இனரீதியான மதரீதியான பதற்ற நிலையை காரணம் காட்டி அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கிவருகிறது என்று இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பல இனத்தினரும் மதத்தினரும் வாழும் மலேஷியாவில், அரசாங்கம் அவசியமே இல்லாமல் செய்திகளுக்கு இனத்துவேஷச் சாயம் பூசுகிறது என செண்டர் பார் இண்டிபெண்டெண்ட் ஜர்னலிஸம் அதாவது தகவல் சுதந்திர இயக்கம் என்ற இந்த அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

வன்முறை ஏற்படலாம், நாட்டில் ஸ்திரத்தன்மை குலைந்துபோகலாம் என்ற அச்சுறுத்தல்களைக் காட்டி, எதேச்சதிகாரம் மிக்க சட்டங்கள் நாட்டில் அமலில் இருப்பதை அரசாங்கம் நியாயப்படுத்தி வருகிறது என இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகங்கள் தொடர்ந்து செயல்பட அவை வருடா வருடம் அரசாங்கத்திலிருந்து உரிமம் பெற வேண்டும் என்ற ஒரு சட்டம் மலேஷியாவில் உள்ளது. ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு இந்த உரிமத்தை அரசாங்கம் ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது என தகவல் சுதந்திர மையத்தின் செயல்திட்ட இயக்குநர் சிவன் துரைசாமி தமிழோசையிடம் தெரிவித்தார்.


சிவன் துரைசாமி செவ்வி

சர்ச்சைக்குரிய மத விவகாரங்கள் ஊடகங்களில் விவாதிப்பதை தேச விரோதக் குற்றமாக கருத வேண்டும் என்று சில கடும்போக்கு முஸ்லிம் குழுக்கள் கூறுவதற்கு அரசியல்வாதிகளின் மறைமுக ஒப்புதல் இருப்பதாகத் தெரிகிறது என்று இந்தத் தகவல் மையம் கூறுகிறது.

முக்கிய விடயங்கள் தொடர்பில் நாட்டில் விவாதம் இல்லாமல் போவதே புரிந்துணர்வு ஏற்படுவதற்கு தடையாக இருக்கிறது என்று இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter