>> Monday, May 24, 2010


வன்னியில் மக்களைச் சந்திக்கும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முகாம் செல்ல த.தே.கூ.வுக்கு அனுமதி மறுப்பு





இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வவுனியா முகாம்களைப் பார்வையிட அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.
வவுனியா முகாம்கள் பகுதிக்கு சனிக்கிழமை காலை சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முகாம்களுக்குள் நுழைந்து அங்கு தங்கியுள்ள மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தமிழோசையிடம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளை முகாம்களுக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கையின் பாதுகாப்பு செயலரிடம் இருந்து தமக்கு அறிவுறுத்தல் வந்துள்ளதாகத் தெரிவித்து முகாம்களின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி தாங்கள் முகாம்களைப் பார்வையிடுவதைத் தடுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தாங்கள் கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன்பாகவே வவுனியா முகாம்களைப் பார்வையிடுவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியதுடன், ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்கவிடம் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்ட சம்பந்தன், தாங்கள் வவுனியா செல்வதில் எவ்விதப் பிரச்சினையும் இருக்காது என லலித் வீரதுங்க தங்களிடம் வாய்மொழியாக உறுதியளித்திருந்ததாகத் தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளாகிய தாங்கள் இடம்பெயர்ந்த மக்களைச் சந்திக்க அரசாங்கம் அனுமதி மறுப்பது சரியல்ல என்று அவர் விமர்சித்தார்.

அரசாங்கம் விளக்கம்

முகாம்களுக்கு செல்வது தொடர்பில் ஏற்கனவே ஒரு நடைமுறை இருப்பதாகவும், அதை பின்பற்றி யார் வேண்டுமானாலும் முகாமுக்கு செல்லலாம் என்றும் ஊடக அமைச்சர் கெஹ்லியா ரம்புக்வல்ல தமிழோசையிடம் தெரிவித்தார்.

முகாம்களுக்குப் போகும் முன் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய அவர், இந்த நடைமுறையை அவர்கள் பின்பற்றியிருக்க மாட்டார்கள் என்று தான் கருதுவதாகக் கூறினார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று செல்வார்கள் என்று அனுமானத்தின் அடிப்படையில்தான், "அங்கு சென்றால் பிரச்சனை இருக்காது" என்று ஜானாதிபதியின் செயலர் கூறியிருக்காலம் என்றும் கெஹ்லியா தெரிவித்தார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter