>> Tuesday, May 11, 2010




தாகூர் 150


ரவீந்திரநாத் தாகூர்
ரவீந்திரநாத் தாகூரின் 150 ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆத் தேதி தொடங்கி ஓராண்டுக்கு நடைபெற இருக்கின்றன.
இந்தியாவின் முன்னோடி இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரும், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவருமான ரவீந்திரநாத் தாகூர் இலக்கியம் மற்றும் ஓவியத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

இன்றைக்கும் அவர் இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த கவிஞராக, முன்னோடியாக இருக்கிறார் என்று நிச்சயமாக கூற முடியும் என இலக்கிய விமர்சகரும், தமிழில் நவீன இலக்கியங்களின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படுபவருமான ஞானக்கூத்தன் கருத்து வெளியிடுகிறார்.


தாகூர் குறித்து ஞானக்கூத்தனின் கருத்துக்கள்

“இந்தியாவில் நவீன இலக்கியத்தின் தந்தையாக தாகூர் கருதப்படுகிறார்” என்றும் அவர் கூறுகிறார்.

தாகூர் அவர்களின் ஆளுமையும், தாக்கமும் இன்றளவும் இந்தியாவில் பல எழுத்தாளர்களிடம் இருக்கின்றன எனவும் ஞானக்கூத்தன் கூறுகிறார்.

நவீனக் கவிதையின் ஊற்றுக்கண்


தாகூர் வரைந்த ஓவியம் ஒன்று
இந்திய மொழிகள் அனைத்திலும், கவிஞர்கள் செய்யுள் இலக்கணத்திலிருந்து விடுபட்டு நவீன கவிதைக்கு வருகின்ற போக்கை 1913 ஆண்டிலேயே தாகூர் கையாண்டது அவரது ஆளுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தாகூரின் முன்னெடுப்பை அடுத்து இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் உள்ள கவிஞர்களும் இலக்கணம் இல்லாத கவிதை எழுத வந்தார்கள் என்றும் ஞானக்கூத்தன் கூறுகிறார்.

தாகூரின் கவிதைகளில் அவரது ஆழ்ந்த மதநம்பிக்கை வெளிப்படுகிறது என்றாலும், அதன் காரணமாக அவரது நவீனத்துவம் குறைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது எனவும் அவர். கருத்து வெளியிடுகிறார்

ரவீந்திரநாத் தாகூரின் ஓவியங்கள் நவீனமாக இருக்கும் அதே வேளையில் அவை இந்தியத்தன்மையுடன் இருக்கின்றன என்றும் அவர் கூறுகிறார்.

பாரதியிடம் தாக்கம்

மகாகவி பாரதியார் மீது தாகூரின் படைப்புகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன என கூறும் ஞானக்கூத்தன், பாரதியார் தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்துள்ளார் என்பதையும் சுட்டுக்காட்டுகிறார்.


இந்திய மொழிகளில் கவிதை விடுதலை அடைவதற்கும், நவீனமடைவதற்கும் தாகூர்தான் மூலகர்த்தாவாக இருந்து வந்திருக்கின்றார்


ஞானக்கூத்தன்

இன்றைக்கும் தாகூர் ஒரு படிக்கத்தகுந்த இலக்கியவாதியாக இருக்கிறார் என்றாலும் அவர் படிக்கப்படுகிராறா என்பது தெரியவில்லை என்றும் தனது கருத்தை வெளியிடுகிறார் அவர்.

தாகூரின் சில சிந்தனைகள் பிற்போக்கு கொள்கைகளை கொண்டிருந்ததாக கூறப்படும் விமர்சனத்தை மறுக்கும் ஞானக்கூத்தன், இதற்கு உதாரணமாக அவரது “கோரா” எனும் புதினத்தை சுட்டிக்காட்டுகிறார்.

தேசியம் என்பது பாராட்டுக்குரிய ஒரு விடயமல்ல, அது மக்களை ஓரிடத்தில் முடக்கி விடுகிறது என்கிற கருத்து தாகூரிடம் இருந்தது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

கீதாஞ்சலியின் சிறப்புகள்


தாகூரின் கையெழுத்தில் அவருடைய கவிதை ஒன்று
தாகூரின் சாராம்ச உணர்வுகள் அவருக்கு நோபல் பரிசை பெற்றுத்தந்த கீதாஞ்சலியில் வெளிப்படுகிறது என்றும், உலகின் எந்த மொழியில் படித்தாலும் கீதாஞ்சலி புரியக்கூடியதாக இருக்கின்றது என்றும் ஞானக்கூத்தன் கருத்து வெளியிடுகிறார்.

கீதாஞ்சலியை படிக்கும் போது மனது ஒரு விடுதலை உணர்வை பெறுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும் அந்தப் படைப்பை படிக்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டு குறுகிய நோக்கங்கள் தகர்ந்துவிடுவதாகவும், இதுபோன்ற காரணங்கள் பலரிடம் இருப்பதாலேயே கீதாஞ்சலி தனிச்சிறப்பு பெறுகிறது என்று தான் கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter