>> Wednesday, May 12, 2010



மீள்குடியேற்றத்தை விரைவில் செய்ய வேண்டும்- இந்தியா


வவூனியா முகாம்
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மீதமுள்ள தமிழர்களையும் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திருப்பியனுப்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்ற தலைப்பில், அப்ஸர்வர் ரிசர்ச் ஃபவுண்டேசன் சார்பில் புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கைத் துவக்கி வைத்துப் பேசும்போது, இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அதே நேரத்தில், இலங்கை மக்கள் எவ்வாறு ஒன்றுபட்டு வாழ்வது என்பதை அவர்களே பேசி முடிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை சர்வதேச சமூகம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தினார்.

கூடுதல் உதவி


வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ்

மேலும், இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா அளித்துவரும் உதவிகள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், 500 கோடி ரூபாய் உதவித் திட்டத்தை முதலில் இந்தியா அறிவித்த பிறகு, 416 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியிருப்பதாகவும், மேலும் 382 மில்லியன் டாலர்கள் கடன் அடுத்து வழங்கப்பட இரு்பபதாகவும் தெரிவித்தார்.

இந்திய முறை சாத்தியமில்லை

அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் காரியவசம், இந்தியாவைப் போன்ற ஆட்சி முறையை இலங்கையில் அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவி்ததார்.

இலங்கைக்குப் பொருத்தமான வகையில், அதிகாரத்தைப் பகி்ர்ந்துகொள்ளும் வகையி்ல புதிய முறையை உருவாக்க வேண்டும். அந்த முறை தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என அனைவருக்கும் கெளரவம் அளிக்கும் வகையிலும், சம உரிமை கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று இலங்கைத் தூதர் கூறினார்.

பின்னர் பிபிசி தமிழோசையிடம் பேசிய பிரசாத் காரியவசம்,
இலங்கையின் வடக்கே தமிழ் மக்களின் வீடுகள் மற்றும் நிலங்களை சிங்களர்கள் ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்படும் புகார்களை முற்றிலுமாக நிராகரித்தார்.

இந்திய இலங்கை உடன்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 13வது அரசியல் சட்டத் திருத்தத்தைப் பொருத்தவரை, பெரும்பாலான அம்சங்கள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில், காவல்துறை, நிலம் உள்ளிட்டவற்றின் அதிகாரம் தொடர்பாக இன்னும் பேசி வருவதாகவும், வடக்கு, கிழக்கில் மாகாண கவுன்சில்கள் அமைக்கப்பட்டு, பொறுப்பான தலைவர்கள் வந்தால்தான் அதன்பிறகு மற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் சிலர், பிரச்சினையை அரசியலாக்காமல், சகஜநிலை மேம்பட உதவ வேண்டும் என்றும் பிரசாத் காரியவசம் வலியுறுத்தினார்.

கருத்தரங்கில் முன்னாள் அமைச்சர் பி.பி. தேவராஜ் உள்பட, .
இலங்கை, இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter