>> Tuesday, December 22, 2009

இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஐ.நா விளக்கம் கோரியுள்ளது

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சரணடைய முனைந்த அந்த அமைப்பின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பு விளக்கம் கோரியுள்ளது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான கொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு பிரதிநிதி பிலிப் ஆல்ஸ்டன் முன்வைத்துள்ள வேண்டுகோள் குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறும் இலங்கை ஜனாதிபதியின் அலுவலகம், அது தொடர்பில் தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் ஃபொன்சேகாவை மேற்கோள் காட்டி முதல் முறையாக இந்தக் குற்றசாட்டுகளை இலங்கையிலிருந்து வெளியாகும் ஒரு நாளிதழ் ஞாயிறன்று செய்தி வெளியிட்டுருந்தது.

ஆனால் தான் வெளியிட்டிருந்த கருத்துக்கள் தவறாக புரிந்தது கொள்ளப்பட்டுள்ளன என்று இந்த செய்தி வெளியான பிறகு ஜெனரல் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

இதேவேளை, விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான கப்பல் ஒன்று வெளிநாடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டு இலங்கை துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார அளித்த செவ்வியையும் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.



--------------------------------------------------------------------------------


ஏ9 வீதியில் தனியார் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் நீக்கம்


ஏ9 ஓமந்தை வீதித் தடை
இலங்கையின் வடக்கே ஏ9 வீதியில் தனியார் வாகனப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக வடபிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டத்தின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமாகிய பசில் ராஜபக்ச அறிவித்திருக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்றே தனியார் வாகனங்கள் இந்த வீதியின் ஊடாகப் பயணங்களை மேற்கொண்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியின் ஊடாகப் பொதுமக்கள் பேருந்துகளில் ஏற்கனவே பயணம் செய்து வருகின்றார்கள். பொதுமக்கள் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டும் என விதிக்கப்பட்டிருந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் குடாநாட்டு மக்கள் யாழ் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளில் ஏறி, தென்பகுதிக்கான பிரயாணத்தை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இந்த நடைமுறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஏ9 வீதியில் தனியார் வாகனங்கள் பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தனியார் பேரூந்துகளும் தற்போது சேவையில் ஈடுபட்டிருக்கின்றன.

எனினும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்கின்ற பொதுமக்கள் வவுனியா தேக்கவத்தையில் உள்ள இராணுவ சோதனைச்சாவடிக்குச் சென்று தமது ஆள் அடையாள அட்டையின் நிழல் பிரதிகள் இரண்டைக் கொடுத்து, இராணுவ அனுமதி பெற்ற பின்பே பிரயாணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.



--------------------------------------------------------------------------------


இந்தியாவில் நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு


தெலுங்கானாவில் பொலிசார்
தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் இருந்து தெலங்கானா என்கிற தனி மாநிலத்தை பிரிப்பதற்கு ஆதரவாக இந்திய நடுவணரசு கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் சிக்கலை அதிகப்படுத்தியது.

தெலங்கானாவுக்கு எதிராகவும் ஆந்திராவில் சமீபத்தில் கடும் வன்முறைகள் மற்றும் அதை ஒட்டிய அரசியல் அதிரடி நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.

இந்த பின்னணியில், இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் நிர்வாக வசதிக்காக சிறியமாநிலங்களாக பிரிக்கப்படுவதை இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பதாக அறிவித்துள்ளன.

இடதுசாரிகளின் இந்த நிலைப்பாடு ஏன் என்பது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்குழு உறுப்பினர் டபிள்யூ ஆர் வரதராஜன் அவர்கள் அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்



--------------------------------------------------------------------------------


கட்டக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி


சச்சின் டென்டுல்கார்
இந்திய இலங்கை அணிகளுக்கு இடையே கட்டக்கில் இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளை கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

கட்டக் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 44.2 ஓவர்களில் 239 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இலங்கை அணியின் சார்பில் உபுல் தரங்க அதிகபட்சமாக 73 ஓட்டங்களை எடுத்தார்.

இந்திய அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் 96 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து தமது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். கட்டக் போட்டியில் அவர் அடித்த அரைசதத்துடன் இது வரை ஒரு நாள் போட்டிகளில் டெண்டூல்கர் 93 அரைசதங்களை அடித்துள்ளார்.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

0 comments:

இதுவரை பார்வையிட்டவர்கள்
Free Counter